தேர்தலோடு போட்டியிடும் தேர்வுகள்
தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. ஆரவாரம், ஆர்ப்பாட்டம், "வாழ்க', "ஒழிக' முழக்கங்கள், "போடுங்கம்மா ஓட்டு' என்னும் வேண்டுகோள் எங்கும் கேட்கிறது. திருவிழா என்றால் வாண வேடிக்கைகள்,


தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. ஆரவாரம், ஆர்ப்பாட்டம், "வாழ்க', "ஒழிக' முழக்கங்கள், "போடுங்கம்மா ஓட்டு' என்னும் வேண்டுகோள் எங்கும் கேட்கிறது. திருவிழா என்றால் வாண வேடிக்கைகள், மேளதாளம், ஆட்டபாட்டம் இல்லாமலா, எல்லாமே ஆரம்பமாகிவிட்டன.
சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே பள்ளிகளின் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு ஆண்டுத் தேர்வுகள் பற்றிய அறிவிப்புகளும் வெளிவந்துவிட்டன. தமிழகத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 13 என்றும், வாக்கு எண்ணிக்கை மே 13 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒருமாத கால இடைவெளி இருக்கும்போது, மாணவர்களின் நலனை முன்னிட்டு தேர்தலைத் தள்ளி வைக்க ஆணையம் பரிசீலனை செய்திருக்க வேண்டும்.
தேர்தல் அறிவிப்பையடுத்து, நடத்தை நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. தேர்தல் ஆணையம் எத்தனை கட்டுப்பாடுகள் விதித்தாலும் அத்தனையையும் மீறும் தந்திரம் அரசியல்வாதிகளுக்குத் தெரியாதா என்ன? கூட்டணி பேரம், வேட்பாளர் தேர்வு, வேட்பு மனுத்தாக்கல் எல்லாம் முடிந்து தேர்தல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. மக்களைத் தேடி அரசியல் கட்சித் தலைவர்கள் வரும் நேரம். சட்டப்பேரவைத் தேர்தலோடு பள்ளிகளின் தேர்வுகளும் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.
இப்போது தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 28 முதல் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கியுள்ளன. 8.57 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வை எழுதுகின்றனர். இந்தத் தேர்வின் முடிவே,அடுத்தடுத்த உயர் கல்விக்கான அடிப்படையாக அமைகிறது.
இதை மனதில்கொண்டே முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, மேல்நிலைக் கல்விக்குத் தனி இயக்குநரகம், அரசாணை எண் 720-ல் திருத்தம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 28 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அதன் கூட்டு நடவடிக்கைக்குழு அறிவித்தது.
இதனால் கல்வித்துறையும், மாணவர்களும், பெற்றோர்களும் கலக்கமடைந்தனர். இந்த ஆண்டு, தேர்வு என்னாகுமோ என்று அச்சம் கொண்டனர். எனவே, பிளஸ் 2 தேர்வு பாதிக்கப்படும் என மாணவர் ஒருவர் தொடுத்த வழக்கில், ""போராட்டம் நடத்துவதன் மூலம் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு இடையூறு செய்யக்கூடாது'' என்று மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
""பிளஸ் 2 தேர்வு மார்ச் 2 முதல் 25 வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ள இந்தச் சூழ்நிலையில் ஆசிரியர்கள் தேர்வைப் புறக்கணித்துவிட்டால் தேர்வு எழுதுவது பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புக்கான சேர்க்கை பாதிக்கப்படும்.
ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற சட்டப்படியான உரிமைகள் பெற்றுள்ளனர். இதற்காக பிளஸ் 2 தேர்வு நடத்துவதற்கு இடையூறு ஏற்படுத்துவது சரியான செயல் அல்ல. எனவே, மாணவர்கள் நலன் கருதி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பிளஸ் 2 தேர்வில் குறுக்கீடு செய்ய 4 வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது...'' என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆசிரியப் பணி என்பது மற்ற பணிகளைப்போல கூலிக்காகச் செய்யப்படுவதல்ல. சமுதாயம் அவர்களைத் தெய்வத்துக்கு ஒப்பாக மதிக்கிறது, துதிக்கிறது. "மாதா, பிதா, குரு, தெய்வம்' என்றும், "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என்றும் பேசப்படுவது அதனால்தான். "ஆசிரியப்பணியே அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி' என்றார்கள். அப்படி மக்களை உருவாக்கும் கல்வியை அளிக்க வேண்டிய ஆசிரியர்கள் தங்கள் நலனுக்காக மாணவர்களின் வாழ்வோடு விளையாடுவதை யாராலும் ஏற்க முடியாது.
எல்லோருக்கும் வழிகாட்ட வேண்டிய இவர்களுக்கு மற்றவர்கள் அறிவுரை கூறவேண்டிய அவலம் ஏற்பட்டது காலத்தின் கோலம்தான். தேசம் எங்கே போய்க் கொண்டு இருக்கிறது? சமுதாயத்துக்குப் பண்பாட்டையும், நாகரிகத்தையும் பரப்ப வேண்டிய கல்வித்துறை ஏன் இப்படி திசைகெட்டுப் போனது?
ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்காகப் போராடக் கூடாதா என்றால் போராடலாம். கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுவது அனைவருக்கும் அரசியல் சட்டம் அளித்திருக்கும் உரிமைதான். ஆனால், அதை முறைப்படி செய்ய வேண்டும். தொழிற்சங்கப் போராட்டங்களுக்கும், ஆசிரியர் போராட்டங்களுக்கும் வேறுபாடு உண்டு.
அன்னசத்திரம் ஆயிரம் வைப்பதைவிட ஏழைக்கு எழுத்தறிவிப்பதே மேலான அறமாகப் போற்றிய தேசம் இது. எத்தனையோ கொடையாளர்கள் தாம் ஈட்டிய செல்வத்தையெல்லாம் அள்ளிக் கொடுத்து விட்டுப்போன அந்த வணக்கத்துக்குரியவர்களை வரலாறு மறக்காது. அவர்கள் அளித்த செல்வம் அளப்பரியது; அவர்களது மனம் அதைவிடப் பெரியது.
அன்று கல்வி அளிப்பது தர்மமாக இருந்தது; இன்று லாபகரமான வணிகமாகிவிட்டது. மனிதநேயம் மறைந்துபோனது; எப்படியாவது செல்வம் சேர்க்க வேண்டும். அதனால்தான் தனியார் பள்ளி நிர்வாகங்கள் அரசையும், பெற்றோரையும் மிரட்டுகின்றன; மாணவர்களை அச்சுறுத்துகின்றன. கல்வித்துறைக்கே சவால் விடுகின்றன.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மேல்நிலைப் பள்ளிகள் சங்கம், "எங்கள் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் தேர்தலைப் புறக்கணிக்கவும், காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து பள்ளிகளைத் திறக்காமல் வகுப்புகளைப் புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளோம்' என்று அறிவித்தது.
தமிழகத்தில் 11 ஆயிரம் நர்சரிகள், பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் செயல்படுகின்றன. 1 லட்சத்து 15 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 1 கோடி மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் எந்த அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்படுகிறதோ அவர்களுக்கே ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியை நிர்ணயிக்கும் 10 ஆயிரம் வாக்குகளின் ஆதரவு கிடைக்கும் என்று அவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் ஆசைகள்! ஆசைகளே கோரிக்கைகளாக மாறுகின்றன. தங்களது கோரிக்கைகளில் நியாயம் இல்லாதவர்களே, மற்றவர்களை மிரட்டிச் சாதிக்க நினைப்பர்; நியாயம் இருக்குமானால் அது ஒருநாள் வெற்றி பெற்றே தீரும்.
இந்தத் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் அடிமைகளாக இருந்துவரும் ஆசிரியர்களும், மாணவர்களும் இவர்கள் பேச்சைக் கேட்பார்களா? இவர்களது பணக்கோரிக்கைகளால் பாதிக்கப்படப் போகிற பெற்றோர்கள் இவர்களை ஆதரிப்பார்களா? இவர்களே வேட்பாளர்களாக நின்றாலும், அவர்களின் வாக்குகளைப் பெற முடியாதபோது, இவர்கள் குறிப்பிடும் கட்சிகளுக்கா வாக்களிக்கப் போகிறார்கள்?
மக்களாட்சியில் தேர்தல் என்பது அரசியல் கட்சிகள் எழுதும் தேர்வுதான். இதற்காக அவர்களிடம் மக்களுக்கான பொதுப்பிரச்னைகளை முன்வைக்க வேண்டும். தங்கள் ஊருக்கான சாலை வசதி, குடிநீர் வசதி, கல்வி, மருத்துவ வசதிகள் கேட்டு கோரிக்கைகள் வைப்பதைத் தவறு என்று கூற முடியாது. இவற்றைச் செய்வதாக உறுதிகூறி தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், பிறகு தொகுதியைத் திரும்பியும் பார்ப்பதில்லை. அதைக் கேட்பதற்கான ஒரு வாய்ப்பே தேர்தல்!
மாணவ, மாணவியர் ஆண்டு முழுவதும் படித்ததை ஒவ்வோராண்டும் சோதனை செய்வது தேர்வாகும். அரசியல் கட்சிகள் செய்துள்ள சேவையை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சோதித்துப் பார்ப்பது தேர்தலாகும். அங்கே காப்பியடிப்பது குற்றம்; இங்கே பணம் கொடுத்து வாக்குகள்பெற முயல்வது குற்றமாகும். இரண்டின் முடிவுகளும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுவதுதான்.
தேர்தலின்போது முறைகேடுகளைத் தடுக்கத் துணை ராணுவப்படைகள் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர்களின் தேர்வு முறைகேடுகளைக் கண்காணிக்க பறக்கும் படைகள் ஏற்படுத்தப்படுகின்றன. இன்றைய மாணவர்களே நாளைய வேட்பாளராகவும், தலைவர்களாகவும் வருவதற்கு வாய்ப்பிருப்பதால் இவர்களிடம் நல்ல தன்மைகள் வளர்வதற்கு அனைவரும் துணையாக இருக்க வேண்டும்.
இந்த ஆண்டு மாணவர்களின் தேர்வு சமயத்தில் தேர்தலும் ஒரு பிரச்னையாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகத் தேர்வு நேரத்தில் கிரிக்கெட் போட்டிகள் வந்து மாணவர்களைத் திசைதிருப்பிக் கொண்டிருக்கின்றனவே, ஏன் இதற்கு மட்டும் யாரும் குரல் கொடுப்பதில்லை? தேர்தலைவிடவும், தேர்வுகளைவிடவும் இன்றியமையாததா இந்த விளையாட்டு?
"விதையில்லாமல் புல் முளைக்கிறது. வேர் இல்லாமல் ரோமம் முளைக்கிறது. விதையும், வேரும் இல்லாமல் அரசியல் முளைக்கிறது' என்று கேலி பேசுவார் கவிஞர் கண்ணதாசன். அரசியலுக்கு விதையாகவும், வேராகவும் இருப்பவர்கள் மக்களே! அதனால்தான், "மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்று சொல்லப்படுகிறது.
"தேர்தல் பாதை திருடர் பாதை' என்று கூறப்பட்டாலும் இப்போதைய மக்களாட்சியில் இதைத் தவிர, வேறு நல்ல பாதை தெரியவில்லை. இங்கே பணமும், அதிகாரமும் கோலோச்சவே செய்கின்றன. மாணவர்களுக்கான தேர்வுகளிலும் முறைகேடுகளுக்குக் குறைவில்லை. "தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டும்' என்ற குரல் நீண்டகாலமாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. தேர்தல் சீர்திருத்தங்களும் அப்படித்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...