/

கனவு மெய்ப்படும்போது...

தமிழக வரலாற்றில் கடல்வழிப் போக்குவரத்தும், துறைமுகங்களும் பல நூற்றாண்டுகளாக முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கின்றன. கொற்கை, பழைய காயல், தொண்டி, காவிரிப்பூம்பட்டினம், முசிறி, உவரி, மாமல்லபுரம் போன்ற இடங்க

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:29 pm

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

தமிழக வரலாற்றில் கடல்வழிப் போக்குவரத்தும், துறைமுகங்களும் பல நூற்றாண்டுகளாக முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கின்றன. கொற்கை, பழைய காயல், தொண்டி, காவிரிப்பூம்பட்டினம், முசிறி, உவரி, மாமல்லபுரம் போன்ற இடங்களில் ஆதியில் துறைமுகங்கள், வணிகத் தலங்களாக அமைந்திருந்தன. இத்துறைமுகங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தன.

 இந்தத் துறைமுகங்கள் பண்டைய காலத்தில் கடற்கொள்ளையர் அணுக முடியாத வகையில் பாதுகாப்பானதாக இருந்துள்ளன. கொற்கை முத்து மற்றும் சேர நாட்டிலிருந்து வந்த மிளகு, ஏலம், கிராம்பு, இஞ்சி, மெல்லிய துணிகள், அரிசி, வைரம், யானைத் தந்தம், பழங்கள் போன்ற பொருள்களை யவனர், உரோமர், எகிப்தியர், கிரேக்கர் ஆகியோர் தங்களுடைய பொற்காசுகளைக் கொடுத்து, தமிழ் மண்ணிலிருந்து கடல் வழியாக எடுத்துச் சென்றதற்குச் சான்றுகள் உள்ளன. வங்கக் கடலில் தமிழர்களின் கலாசாரமும், ஆளுமையும் கொடி கட்டிப் பறந்தன.

 கொற்கை, பழைய காயலில் முத்து எடுக்கும் பாங்கினை நற்றிணையும், ஐங்குறுநூறும் எடுத்துரைக்கின்றன. மணப்பாடு, உவரி பற்றியும் இலக்கியத்தில் ஆதாரங்கள் உள்ளன. காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி சிலப்பதிகாரம், மணிமேகலையிலும் மார்கோ போலோவின்  வர்ணனையிலும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.

 வங்கக் கடலில் தமிழனின் பாய்மரக் கப்பல்களும், கட்டுமரங்களும், சோழர்களின் போர்க்  கப்பல்களும், மூவேந்தர்களுடைய கடல் ஆதிக்கமும் வரலாற்றில் இருந்ததை எவரும் மறுக்க முடியாது.

 இவ்வாறு துறைமுகங்கள் தமிழகத்துக்குப் புதிதல்ல. இன்றைக்குத் துறைமுகங்களின் வளர்ச்சி தமிழகத்தில் பல புதிய பரிமாணங்களை எட்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் மட்டுமல்லாமல் தனியாரும் துறைமுகங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

 சென்னை, தூத்துக்குடி போன்ற பெரிய துறைமுகங்கள் தவிர, குளச்சல், கன்னியாகுமரி, கூடங்குளம் மனப்பாடு, புன்னைக்காயல், வாலிநோக்கம், பாம்பன், ராமேசுவரம், நாகப்பட்டினம், கடலூர், திருக்கடவூர், பி.ஒய்.3 ஆயில் பீல்டு, காட்டுப்பள்ளி, திருசோபுரம் என பதினைந்து சிறு துறைமுகங்கள் இப்போது செயல்படத் தொடங்கி உள்ளன. மீன்பிடித் தொழில் செய்யக்கூடிய வகையில் இந்தத் துறைமுகங்கள் இருக்க வேண்டும். புதிய துறைமுகங்களின் வரவால் நேரடி, மறைமுக வேலை வாய்ப்புகள், அருகே பல தொழிற்சாலைகள் போன்றவை ஏற்படும்.

 2007-ம் ஆண்டு கடல்சாரா கொள்கை ஒன்றை அரசு அறிவித்தது. அதன்படி, துறைமுக மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் 15 துறைமுகங்கள் என்று கணக்கெடுக்கப்பட்டு இன்றைக்கு 20ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடலூர் துறைமுகத்தில் நூறு ஏக்கர் பரப்பளவில் கடல் அரிப்பைத் தடுக்க சுவர்கள், கப்பல்கள், படகுகள் நிறுத்தத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. சில துறைமுகங்களைத் தனியார் மூலம் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளன.

 கடலூர் துறைமுகத்தில் கெம்பிளாஸ்ட் நிறுவனம், குளோரைடு பயன்படுத்துவதற்காக மெரைன் டெர்மினல் அமைத்துள்ளது. மேலும், இத்துறைமுகத்தில் பவர்ஜென் கார்ப்பரேஷன் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் கப்பலில் வரும் சரக்குகளைப் பாதுகாக்க வசதி செய்துதர திட்டமிட்டுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் சென்னை பெட்ரோலியம் நிறுவனம் எண்ணெயைச் சுத்திகரிக்க வேண்டிய கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் துறைமுகங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

 சமீபத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட மாமல்லபுரம், முகையூர் துறைமுகங்களில் 500 கோடி ரூபாய் செலவில் கப்பல் பழுது பார்க்கும் பணிகள் நடைபெறும் வகையில் திட்டங்கள்  உள்ளன. கடலூர் மாவட்டத்தில் திருசோபுரம், சிலம்பிமங்கலம் ஆகிய இடங்களில் துறைமுகங்கள் அமைக்கத் தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருசோபுரத்தில் சுமார் 1,800 கோடி ரூபாய் செலவில் நாகார்ஜுனா எண்ணெய் நிறுவனம் துறைமுகம் அமைக்கிறது. அங்கு அந்நிறுவனம் பெட்ரோலியப் பொருள்கள், குரூட் ஆயிலை இறக்குமதி செய்து சுத்திகரிக்கும் பணியைச் செய்ய இருக்கிறது. சிலம்பிமங்கலத்தில் குட்எர்த்ஷிப் பில்டிங் நிறுவனம் துறைமுகம் அமைக்கிறது. இத்துறைமுகத்தில் பல ஆயிரம் டன் எடையுள்ள கப்பல்களை நிறுத்தும் வசதி செய்யப்பட உள்ளது.

 நாகப்பட்டினத்தில் உள்ள காவேரி, வானகிரி, திருக்கடவூர், திருக்குவளை ஆகிய பகுதிகளில் உள்ள சிறிய துறைமுகங்களும் மேம்படுத்தப்பட உள்ளன. பெல் பவர் நிறுவனம் சுமார் 1,320 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையம் அமைக்க உள்ளது. அதற்குத் தேவையான நிலக்கரியைக் கையாளுவதற்கு காவேரி துறைமுகத்தை 200 கோடி ரூபாயில் சீரமைத்து வருகிறது. இதுபோன்று வானகிரியில் என்.எஸ்.எல். என்ற நிறுவனம் 1,500 மெகாவாட் மின்சார உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு ஏதுவாக இத்துறைமுகத்தை வளப்படுத்துகிறது.

 1996-ம் ஆண்டில் திருக்கடவூரில், பி.பி.என். பவர் ஜெனரேட்டிங் நிறுவனம் துறைமுகத்தை அமைத்தது. இங்கு நாப்தா, இயற்கை வாயுவைக் கொண்டு வந்து அதனைப் பயன்படுத்தும் முகமாக சுமார் 300 மெகா வாட் மின்உற்பத்தி நிலையத்தையும் தொடங்கியுள்ளது.

இம்மாவட்டத்தில் அமைந்துள்ள வேட்டைக்காரன் இருப்பு பகுதியில் டிரிடெம் போர்ட் மற்றும் பவர் கம்பெனி நிறுவனம் 2,000 மெகாவாட் மின் நிலையத்தை அமைக்க இருக்கிறது. இதற்கு வேண்டிய நிலக்கரியைக் கொண்டு வருவதற்காக, 270 ஏக்கர் அரசு நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

 ரூ.1,800 கோடி செலவில் தூத்துக்குடி மாவட்டம், மணப்பாட்டில் துறைமுகம் அமைய உள்ளது. இங்கு 100 ஏக்கர் நிலம் இந்தியன் பவர் புராஜக்ட் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டு, அங்கு அந்நிறுவனம் 2,000 மெகாவாட் காஸ்டர்பைன் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க இருக்கிறது.

 கூடங்குளத்தில் அணுமின் உற்பத்தி நிலையம் இருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்காகக்   கடல்நீரைச் சேமித்து வைக்க வசதியாக ஒரு கி.மீ. நீளத்திலும், 200 மீட்டர் அகலத்திலும் தடுப்பணை, பவர்பிளாண்ட், ஆர்.சி. சி., ஜெட்டி போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. கோஸ்டல் தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனம் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத் தேவையான நிலக்கரியைப் பயன்படுத்துவதற்காக பனையூர் துறைமுகத்தை மேம்படுத்தி வருகிறது.

 சுமார் 1,300 கோடி ரூபாய் செலவில், 4,000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்துக்குத் தேவைப்படும் நிலக்கரியைக் கையாளக்கூடிய வகையில், பரங்கிப்பேட்டை துறைமுகத்தை ஐ.எஸ். மற்றும் எப்.எஸ். லிமிடெட் நிறுவனம் சீரமைத்துள்ளது.

 உடன்குடி துறைமுகத்தில், கப்பலில் வரும் பொருள்களை இறக்கிப் பாதுகாக்க, 800 கோடி ரூபாய் செலவில் இடம் அமைக்கிறது. இப்பணியை சென்னை உடன்குடி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் 1,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் இங்கு நிலக்கரி பயன்பாடு இருக்கும்.

  துறைமுகங்கள் ஒருபக்கம் தொழில் ரீதியாக வளர்ந்தாலும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலும், மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்கும் வகையிலும் கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் அமைய வேண்டும். தொழில்துறையும், வணிகத் துறையும் இதில் கவனம் செலுத்தும்பொழுது, மீனவர்களுடைய தொழில் பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தமிழகத் துறைமுகங்களின் வளர்ச்சி அமைய வேண்டும்.

 இவ்வாறு துறைமுகங்கள் வளர்ச்சி பெற்றாலும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சேதுக் கால்வாய் பணிகள் முடிவடைந்து, செயல்பாட்டுக்கு வந்தால் தமிழகத்தின் வளர்ச்சி பிரமிக்கத்தக்க அளவில் இருக்கும். கனவாக இருந்த துறைமுகத் திட்டங்கள்  மெய்ப்படும்போது தமிழனுடைய மாண்பும் மேம்படும் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.