/

வளர்ச்சியின் கோரமுகம்

மத்திய அரசு கடைப்பிடித்து வரும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் ஆக்கி வருகிறது, சுருங்கச்சொன்னால் மக்கள் மத்தியில் இட்டு நி

News image
Updated On :28 டிசம்பர் 2023, 1:57 pm

ஜி. ராமகிருஷ்ணன்

மத்திய அரசு கடைப்பிடித்து வரும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் ஆக்கி வருகிறது, சுருங்கச்சொன்னால் மக்கள் மத்தியில் இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தாராளமயப் பொருளாதாரக் கொள்கையால் அனைத்துப்பகுதி மக்களுக்கும் பலன் கிடைத்து வருவதாகப் பேசி இருக்கிறார்.

 அண்மையில் திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றும்போது, கடந்த ஆறரை ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். அந்தப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களையும் அனைத்துத் தரப்பு மக்களுக்குமான வளர்ச்சியாகக் கவனத்துடன் நிறைவேற்றியிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

 கடந்த ஆறரை ஆண்டுகளாக அல்ல, 1991-ம் ஆண்டிலிருந்து கடந்த இருபது ஆண்டுகாலமாக தாராளமய தனியார்மயக் கொள்கை இந்தியாவில் அமலாக்கப்பட்டு வருகிறது. 1991-ம் ஆண்டு நரசிம்ம ராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற மன்மோகன் சிங் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அமலாக்கத்தைத் தொடங்கி வைத்தார். அவரே பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு சொல்லவே வேண்டாம்.

 1991-ல் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்டபோதே அதைக் கடுமையாக எதிர்த்தவர்கள் இடதுசாரிகள். இந்தக்கொள்கை அமல்படுத்தப்பட்டால், சாதாரண, ஏழை-எளிய, நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அவர்களது வாழ்க்கைத்தரம் மிகவும் அதலபாதாளத்துக்குச் செல்லும் என்று அன்றைக்கே எச்சரித்தனர் இடதுசாரிகள். ஆனால், மத்திய ஆட்சியாளர்கள் செவிசாய்க்கவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையில் தடம் மாறாமல் பயணம் செய்தது. ஆட்சிகள் மாறினாலும் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வரும் தாராளமய-தனியார்மயக் கொள்கையால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண ஏழை, எளிய மக்கள்தான், வளர்ச்சியின் பலன் அவர்களை எட்டிப்பார்க்கவில்லை. மாறாக எட்டி உதைக்கிறது.

 இடதுசாரிகளின் ஆதரவோடு நடைபெற்ற கடந்த ஐக்கிய முன்னணி ஆட்சியில் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைக்கு மூக்கணாங்கயிறு போட்டனர் இடதுசாரிகள். குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்த வலியுறுத்தினர். இதனால் ஆத்திரமுற்ற பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் பேசும்போது, இடதுசாரி கட்சிகள் தம்மைக் கொத்தடிமைபோல நடத்த முயன்றதாகக் குமுறினார். ஆனால், இப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பின்பற்றிவரும் கொள்கைகள், சர்வதேச நிதி அமைப்புகளின் கட்டளைக்கேற்ப பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காகவே செயல்படுத்தப்படுகின்றன. இதனால் தேசமே கொத்தடிமையாக மாற்றப்படும் அபாயம் எழுந்துள்ளது.

 பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் தாராளமயக் கொள்கைகளுக்கு மனிதமுகம் வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கடி கூறுவதுண்டு. ஆனால், இப்போது பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரால் இந்தியப் பொருளாதாரத்தின் சுயசார்பும் சுயாதிபத்தியமும் அழிக்கப்படுகிறது. பெரும்பகுதி மக்கள் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கவைக்கப்படுகின்றனர். மறுபுறத்தில் கோடீஸ்வரர்கள் கொழிக்கிறார்கள். தெருக்கோடி வாசிகளோ வாழ்க்கைச் செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். இவர்கள் கூறும் வளர்ச்சிக்கு மனிதமுகம் இல்லை. மாறாக, கோர முகமே உள்ளது.

 பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக:

 "போர்ப்' இதழின் ஆய்வுப்படி, ரூ. 4,600 கோடி அளவுக்குச் சொத்துள்ள பெரும் பணக்காரர்கள் 2004-ல் 9 பேர் மட்டுமே. ஆனால், 2010-ல் இத்தகைய பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 49-ஆக உயர்ந்துள்ளது.

 வேறுவகையில் கூறுவது என்றால், 10 முதல் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்து 2003-2004-ல் ரூ. 3.54 லட்சம் கோடியாக இருந்தது, 2007-2008-ல் ரூ. 10.34 லட்சம் கோடியாக (மூன்று மடங்கு) அதிகரித்துள்ளது. தாராளமயப் பொருளாதாரக் கொள்கை பெரும்பணக்காரர்களுக்கு மேலும் சாதகமாக இருந்துள்ளது என்பதற்கு வேறு சான்று தேவையில்லை. மறுபுறத்தில் ஏழை, எளிய மக்களின் நிலை என்ன? முறைசாரா தொழில்களில் உள்ள உழைக்கும் மக்களின் வாழ்நிலை பற்றி ஆய்வு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையின்படி தேசத்தில் கருத்தாலும், கரத்தாலும் உழைப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 2004-2005-ல் 45.6 கோடியாகும்.

 இதில் விவசாயத் தொழிலாளர்கள் (25.1 கோடி) உள்ளிட்டு 39.3 கோடிப்பேர் முறைசாரா தொழிலாளர்கள் ஆவர். இந்தப் பெரும்பகுதி தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 நாட்டு மக்கள்தொகையில் முதியோர், குழந்தைகள் தவிர்த்து உழைக்கும் மக்களில் பெரும்பகுதியினர் கிராமப்புற, நகர்ப்புற ஏழைகளாகவே உள்ளனர். கடந்த 20 ஆண்டுகால தாராளமயப் பொருளாதாரக் கொள்கை, கிராமப்புற, நகர்ப்புற ஏழைகளின் வாழ்க்கையை நாசமாக்கி வருகிறது. சில மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்கும், சில நகரங்களில் நகர்ப்புற ஏழைகள் தற்கொலை செய்து கொள்வதற்கும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைதான் காரணம் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு.

 பொதுவாக இந்தியாவில் நகரங்கள் வளர்வதாகவும் கிராமங்கள் தளர்வதாகவும் கூறப்படுவது உண்டு. ஆனால், மத்திய ஆட்சியாளர்கள் பின்பற்றும் கொள்கையால் வறுமை என்பது நகரத்துக்கும் கிராமத்துக்கும் பொதுவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இரண்டுக்குமான இடைவெளியைக் குறைத்துவிட்டோம் என்று கூட ஆட்சியாளர்கள் பெருமைப்படக்கூடும்.

 தமிழகத்தில் விவசாயத்தில் நெருக்கடி என்பது தொடர்கிறது. 2006-2007-ல் இருந்து நான்கு ஆண்டுகளாக விவசாயத்துறையில் உற்பத்தி சரிந்து வருகிறது. தமிழக விவசாய உற்பத்தியின் மொத்த மதிப்பு 2006-07ல் ரூ. 20,398 கோடியாக இருந்தது. 2007-08-ல் இது ரூ. 18,885 கோடியாகச் சரிந்தது.

 2008-09-ல் மேலும் சரிந்து ரூ. 18,246 கோடியாகியது. 2009-10-லும் முன்னேற்றம் இல்லை. சுமார் 60 சதவிகித மக்களின் வாழ்வாதாரம் கிராமப்புற பொருளாதாரத்தை நம்பி இருக்கிறது. விவசாயத்துறையில் நீடித்து வரும் நெருக்கடியால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 திருப்பூரில், சமீபகாலத்தில் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றுவோர் குடும்பங்களில் தற்கொலை அதிகமாகி வருவதை பல ஊடகங்கள் ஆய்வுசெய்து அம்பலப்படுத்தியுள்ளன. திருப்பூர் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் பின்னலாடை மற்றும் உபதொழில்களில் சுமார் 4 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.

 இவர்களில் பெரும்பகுதியினர் நலிவடைந்து வரும் விவசாயத்தை நம்பி வாழ முடியாமல் இடம்பெயர்ந்து பிழைப்புக்காக நகர்ப்புறத்தை நோக்கி வந்த நேற்றைய கிராமப்புற ஏழைகளே. 2009-ல் மட்டும் திருப்பூர் மற்றும் அதனையொட்டியுள்ள புறநகர்ப்பகுதிகளில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 491 ஆகும்.

 இது மாநில அளவிலான சராசரி தற்கொலை எண்ணிக்கையைவிட அதிகம். தற்கொலையைத் தவிர்க்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து பல நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகும் 2010 செப்டம்பர் 11 வரையில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 380 ஆகும்.

 கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ வழியில்லாமல் கந்து வட்டிக்குக் கடன் வாங்கி, வட்டி கட்ட முடியாமல் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டவர்கள்தான் பெரும்பகுதியினர்.

 டாலர் கொழிக்கும் நகரமான திருப்பூரில் சமீபஆண்டுகளில் பஞ்சுவிலை உயர்ந்து தொழில் நெருக்கடி ஏற்பட்டு, இதனால் ஏற்படும் வேலை இழப்பும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காததும், ஏழைகளைத் தற்கொலையை நோக்கித் தள்ளுகிறது.

 தாராளமயப் பொருளாதாரக் கொள்கைதான் இத்தகைய தற்கொலைகளுக்கு நேரடிக் காரணமாக உள்ளது. கடந்த 1 மாதத்தில் மட்டும் நூல் விலை கிலோவுக்கு ரூ. 14 அதிகரித்திருக்கிறது. கடந்த 17-ம் தேதி மத்திய ஜவுளித்துறை அமைச்சரும், மாநிலத் துணை முதல்வரும் திருப்பூருக்குச் சென்று, உற்பத்தியாளர்களும், உழைப்பாளிகளும் கவலைப்பட வேண்டாம். நூல்விலை குறையும் என்று கூறிவிட்டு வந்தார்கள். அடுத்த 20-ம் தேதி பஞ்சுவிலை கிலோவுக்கு மேலும் ரூ. 7 அதிகரித்தது. எப்பொழுது பஞ்சு ஏற்றுமதி என அறிவித்தார்களோ, அறிவித்த உடனேயே விலை உயருகிறது. ஏற்றுமதி தொடங்கிவிட்டால் நிலைமை என்ன ஆகும் என்று தெரியவில்லை.

 அத்தியாவசியப் பொருள்கள் விற்பனையில் முன்பேர வர்த்தகம் என மோசடி முறையை என்றைக்கு மத்திய அரசு திறந்துவிட்டதோ, அன்றிலிருந்தே விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. ஊக வணிகத்தை அனுமதிப்பது தாராளமயப் பொருளாதாரக்கொள்கையின் ஒரு பகுதியே.

 மத்திய அரசினுடைய மேற்கண்ட கொள்கைகளால், நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கை நலிந்து வருகிறபோது பாதிக்கப்பட்ட இவர்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். அங்கன்வாடி, டாஸ்மாக், சத்துணவு, பாக்கான், நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆகியோரின் போராட்டங்கள் எல்லாம் நலிந்து வரும் தங்கள் வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்வதற்கான போராட்டமே. போராடும் உழைக்கும் மக்களின் கோரிக்கையைப் பரிசீலிக்காமல் கொடுமையான அடக்குமுறை மூலம் பிரச்னைக்குத் தீர்வு காண திமுக அரசு முயற்சிக்கிறது.

 மத்திய அரசும், மாநில அரசும் கடைப்பிடித்து வரும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் விளைவாக உழைக்கும் மக்கள் போராட்டம் வெடிக்கிறது. ஆள்வோர் தங்களது கொள்கையை மறுபரிசீலனை செய்வதற்கோ, கொள்கையின் விளைவால் பாதிப்புக்குள்ளான உழைக்கும் மக்கள் கோரிக்கையைப் பரிசீலிப்பதற்கோ மத்திய அரசும் தயாரில்லை, மாநில அரசும் தயாரில்லை.

 மத்தியில் திமுகவும் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவோடு நடைபெறும் திமுக அரசு ஆகிய இரண்டுமே தாங்கள் அமலாக்கி வரும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை வேகமாக அமலாக்க முயற்சிக்கிறார்களே தவிர, அதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிக் கவலைப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.