திவாலாகும் கிரேக்கம்!
பொருளாதார நெருக்கடிப் புயல் இப்போது ஐரோப்பாவை மையம் கொண்டிருக்கிறது. முதலில் பலியாகியிருப்பது கிரேக்கம். கடந்த 2002-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட நாணயமாற்றம்தான் கிரேக்கப் பொருளாதார வீழ்ச்சியின் தொடக்கம்


பொருளாதார நெருக்கடிப் புயல் இப்போது ஐரோப்பாவை மையம் கொண்டிருக்கிறது. முதலில் பலியாகியிருப்பது கிரேக்கம். கடந்த 2002-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட நாணயமாற்றம்தான் கிரேக்கப் பொருளாதார வீழ்ச்சியின் தொடக்கம். அப்போது புழக்கத்திலிருந்த ட்ராக்மா நாணயத்தைக் கைவிட்டுவிட்டு, ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளின் யூரோ நாணயத்தில் ஐக்கியமானது கிரேக்கம். இதையொட்டி அதிரடியாகப் பல பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவையெல்லாம்தான் தற்போது கிரேக்கத்தை நெருக்கடியில் தள்ளியிருக்கின்றன.
இதுபோக, கடந்த சில ஆண்டுகளாகவே தகுதிக்கு மீறிய செலவுகளைச் செய்தது கிரேக்க அரசு. 2004-ல் ஒலிம்பிக் போட்டிகளை ஆடம்பரமாக நடத்தி கையைச் சுட்டுக் கொண்டது. இது கடுமையான பற்றாக்குறை பட்ஜெட்டுக்கு வழிவகுத்தது. உள்நாட்டு நிதிநெருக்கடியையே சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த கிரேக்கத்துக்கு சர்வதேச பொருளாதார நெருக்கடி அடுத்த பாதிப்பாக அமைந்தது. உலக அளவில் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு எந்த அளவிலும் தயாராகாததால், மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிகப் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, நாட்டில் வரி ஏய்ப்பு உச்சத்துக்குச் சென்றது. விளைவு, ஒட்டுமொத்த உற்பத்தியில் 13.6 சதவீதம் பற்றாக்குறை.
இந்தப் பற்றாக்குறைகளைச் சமாளிக்கக் கடன்கள் வாங்கப்பட்டன. இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு மீண்டும் கடன்கள் வாங்கப்பட்டன. இப்படியே போய், ஐரோப்பாவிலேயே பெரிய கடன்கார நாடாகியிருக்கிறது கிரேக்கம். இந்த ஆண்டு மட்டும் சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் திவால் அறிவிப்பை வெளியிட வேண்டியதுதான்.
உலகின் ஏதோ ஒரு மூலையில் நிதி நெருக்கடி ஏற்பட்டால் நமக்கென்ன என்று எந்த நாடும் இருந்துவிட முடியாது. உலகமயமாகிவிட்ட இந்தக்காலத்தில் அது சுத்த அபத்தம். அதிலும் ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளுக்கு இந்த நெருக்கடி, தொற்று நோயாகப் பரவும் அபாயம் இருக்கிறது. காரணம் பொது நாணயமான யூரோவும் பொருளாதாரக் கொள்கைகளும்தான். கிரேக்கத்தின் நிதி நெருக்கடி ஐரோப்பிய கூட்டமைப்பின் யூரோவையும் பாதிக்கும் என்பதால், அடுத்தடுத்து சில வீழ்ச்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத்தைப் பொருத்து ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பற்றாக்குறை குறிப்பிட்ட அளவைத் தாண்டக்கூடாது என்கிற விதி இருக்கிறது. கிரேக்கத்தின் பற்றாக்குறை இந்த அளவைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது. போர்சுகல், அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளும் இந்த அபாய எல்லையை ஏற்கெனவே கடந்துவிட்டன.
கிரேக்கத்தைத் தொடர்ந்து இந்த நாடுகளும் வீழ்ச்சியடையும் என்கிற அச்சம் ஐரோப்பாவில் ஏற்பட்டிருக்கிறது. இப்படித் தொடர்ச்சியாக நெருக்கடி ஏற்பட்டால், யூரோவைத் தூக்கி நிறுத்துவதற்காக வீழ்ச்சியடையும் நாடுகளின் சுமையை வீழ்ச்சியடையாத மற்ற நாடுகள் பங்கிட்டுத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். கூடுதல் வரி விதிப்பது, பொதுச் செலவுகளைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் நெருக்கடியைப் பரவலாக்க முயலலாம். ஆனால், அது ஐரோப்பிய யூனியனின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.
இந்த மாதிரியான நெருக்கடிகளின்போது, நாணயத்தின் மதிப்பைக் குறைப்பதுதான் காலம்காலமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் உத்தி. ஆனால், பொதுநாணயமான யூரோவைக் கிரேக்கம் பயன்படுத்தி வருவதால், அந்த உத்தியையும் இப்போது பயன்படுத்த முடியாது. பதிலாக, யூரோவைப் புறந்தள்ளிவிட்டு மீண்டும் பழைய நாணயத்தை மட்டும் புழக்கத்தில் விடும் முடிவை மேற்கொள்வதற்கும் ஐரோப்பிய யூனியன் அனுமதிக்காது.
இப்படி ஒவ்வொரு நாடும் யூரோவைக் கைவிட்டால், ஐரோப்பிய யூனியனின் நோக்கமே சிதைந்துவிடலாம் என்பதால், எப்படியாவது நிதியுதவி செய்து வீழ்ச்சியடையும் நாடுகளை மீட்பதற்கே மற்ற ஐரோப்பிய நாடுகள் முனையும். இப்போதும் கிரேக்கத்தைக் காப்பதற்கு ஜெர்மனி முன்வந்திருக்கிறது. ஆனால், இது தாற்காலிக ஏற்பாடு மட்டுமே. நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கு நெடும்பயணம் செய்தாக வேண்டும்.
இந்த நெருக்கடிகள் நமக்குச் சொல்லும் பாடம் ஒன்றுதான். விரலுக்கேத்த வீக்கம் தேவை என்று பெரியவர்கள் சொல்வார்கள். தகுதி மீறிச் செலவு செய்து ஆடம்பரமாக வாழ்ந்தால் வீழ்ச்சியடைய நேரிடும் என்று எச்சரிக்கை செய்யும் பழமொழி இது. சாதாரண மக்கள்கூட இந்தப் பழமொழிப்படி வாழ்ந்து கொண்டிருக்கும்போது, பொதுச் செலவுகள் என்கிற பெயரில் உலக அரசுகள் பலவும் அளவுக்கு மீறிச் செலவு செய்து திவாலாவது ஏன் என்பதுதான் புரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...