சுவர் தேடும் சித்திரங்கள்
சமீபத்தில் நிறைவடைந்த உலக கால்பந்தாட்டப் போட்டியில் சின்னஞ்சிறிய நாடான ஸ்பெயின் சாம்பியனானது குறித்து இந்தியாவில் ஆச்சரியமாகப் பேசப்படும் நிலையில், அதுபோல நாமும் விளையாட்டுத் துறையில் சாதிக்க முடியாதா


சமீபத்தில் நிறைவடைந்த உலக கால்பந்தாட்டப் போட்டியில் சின்னஞ்சிறிய நாடான ஸ்பெயின் சாம்பியனானது குறித்து இந்தியாவில் ஆச்சரியமாகப் பேசப்படும் நிலையில், அதுபோல நாமும் விளையாட்டுத் துறையில் சாதிக்க முடியாதா என்ற கேள்விக்குறி அனைவரது மனதிலும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஸ்பெயின்போல நாமும் சாதிக்க முடியும். ஆனால், நாம் சாதிப்பதற்கான வழிமுறைகளைச் செயலுக்குக் கொண்டுவராமலிருப்பது ஏன் என்பதுதான் புரியாத புதிர்.
100 கோடிக்கும் மேலாக மக்கள்தொகை கொண்ட இந்திய நாடு கிரிக்கெட், செஸ் போன்ற ஓரிரு விளையாட்டில் மட்டுமே ஜொலிக்க முடிகிறது. மற்ற விளையாட்டுகளில் மிகவும் பின்தங்கியிருப்பதற்குக் காரணம், அத்துறைக்கு நாம் முக்கியத்துவம் அளிப்பதில்லை.
நமது கல்வித் திட்டத்தில் பிளஸ்-2 வரையில் உள்ள மாணவ, மாணவியருக்கு பாடத்திட்டத்தில் விளையாட்டும் முக்கியமாகச் சேர்க்கப்பட வேண்டும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் விளையாட்டு வகுப்பு அன்றாடம் 2 மணி நேரமாவது இடம்பெறும். அதுவும் காலையில் முதல் பாடமாகவோ அல்லது மாலையில் 4 மணி அளவிலோ மாணவர்கள் விளையாடும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருந்தது.
தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என அனைத்து நிலைகளிலும் விளையாட்டுத் துறை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தது 2 விளையாட்டுத் துறை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு மைதானம் கட்டாயம் இடம்பெற்றிருந்தது.
இவ்வாறு விளையாட்டுத் துறையில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், கல்வியிலும் போதிய கவனம் செலுத்தும் வகையில் அவர்களை விளையாட்டுத் துறை ஆசிரியர்கள் வழிநடத்தினர்.
இத்தகைய வழிநடத்துதலில் பயின்ற மாணவர்கள், கல்வியுடன் விளையாட்டில் சிறந்து விளங்கி அதன் மூலம் எளிதில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் எளிதில் வேலை வாய்ப்புகளையும் பெற்று வந்தனர்.
உடல் ஆரோக்கியம், உளவியல் ரீதியில் மாணவர்களுக்கான வடிகால் என சகல விதத்திலும் அருமருந்தாக விளங்கிய விளையாட்டு வகுப்பு, சமீபகாலமாக பெரும்பாலான பள்ளிகளில் இடம் பெறவில்லை என்பதே உண்மையான நிலையாகும்.
படித்து முடித்ததும் பணிக்குச் செல்ல வேண்டும் என்றால், மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுப்பதே முக்கியம். விளையாட்டில் ஈடுபட்டால் அவர்களது கல்வி பாதிக்கப்படும் என்ற தவறான எண்ணம் பெற்றோர், ஆசிரியர் என சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஏற்பட்டுவிட்டது.
இதன் காரணமாக விளையாட்டில் குழந்தைகளை ஈடுபடுத்துவது அவர்களது கல்வி வளர்ச்சியைப் பாதிக்கும் என பெற்றோர் எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலையை பெரும்பாலான பள்ளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.
அதாவது, தனியார் பள்ளிகளில் பெரும்பாலானவை விளையாட்டுக்கு என ஒதுக்கிய மைதானங்களை வகுப்பறைகள் அமைக்க கட்டடங்களாக்கிவிட்டன. இதனால் பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே இல்லை. தொடக்கப் பள்ளிகளாக இருந்து மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் கூட பெரும்பாலானவை தனி விளையாட்டு மைதானம் இல்லாத நிலையிலேயே உள்ளதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
மாநிலத்தில் 34,180 ஆரம்பப் பள்ளிகள், 9,938 தொடக்கப் பள்ளிகள், 5,020 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றில் 10,066 தனியார் பள்ளிகளில் பெரும்பாலானவற்றிலும், அரசுப் பள்ளிகளில் பெரும்பாலானவற்றிலும் மைதானங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது.
விளையாட்டு மைதானம் சிறிய அளவில் இருந்து, அத்துறைக்கான ஆசிரியர் இருக்கும் அரசுப் பள்ளிகளில்கூட விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலையே நீடிக்கிறது.
விளையாட்டில் ஆர்வம் காட்டும் மாணவ, மாணவியரையும் மற்ற பாட ஆசிரியர்கள் மதிப்பெண்ணைக் காட்டி, அதில் ஈடுபட்டால் தேர்வில் மதிப்பெண் குறையும் என மிரட்டும் நிலையும் பரவலாகி வருகிறது.
இதனால், விளையாட்டில் ஆர்வமிக்க மாணவ, மாணவியர்கூட எதற்கு வம்பு என அதிலிருந்து ஒதுங்கி படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவதாகவும் கூறுகின்றனர்.
சொந்த முயற்சியால் விளையாட்டில் வெற்றிபெற்று ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வரும் வீரர்களுக்கு நிதி அளித்து பாராட்டுகிற அரசு, அத்துடன் தனது பணியை நிறுத்தாமல், விளையாட்டில் ஆர்வம் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு போதிய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதும் அவசியம்.
இதைச் செய்தால் உலக அளவிலான விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பெயரும் நிச்சயம் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...