/

கேள்விக்குறியாகும் ஐ.நா.வின் ஆளுமை!

ஐ.நா. மன்றத்தின் 64-ம் ஆண்டு கூட்டத்தொடரை அதன் புதிய தலைவர் அலி டிரெக்கி தொடங்கிவைத்துப் பேசும்போது, ஐ.நா. மன்றம் தனது நம்பகத்தன்மையைத் தக்கவைத்துக் கொள்ள, அதன் பாதுகாப்பு மன்றத்தில் பல சீர்திருத்தங்க

News image
Updated On :25 டிசம்பர் 2023, 3:53 pm

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

ஐ.நா. மன்றத்தின் 64-ம் ஆண்டு கூட்டத்தொடரை அதன் புதிய தலைவர் அலி டிரெக்கி தொடங்கிவைத்துப் பேசும்போது, ஐ.நா. மன்றம் தனது நம்பகத்தன்மையைத் தக்கவைத்துக் கொள்ள, அதன் பாதுகாப்பு மன்றத்தில் பல சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பிரிக்க லிபிய நாட்டைச் சேர்ந்த டிரெக்கி வளரும் மற்றும் பிற்பட்ட நாடுகளின் பிரதிநிதியாக எதிர்காலத்தில் விளங்குவார் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பார். ஐ.நா. மன்றத்தில் தொடர்ந்து குறிப்பிட்ட சில வளர்ந்த நாடுகளின் கையே மேலோங்கி உள்ளது. இந்தியா பாதுகாப்புக் கவுன்சிலில் உறுப்பினராகச் சேரத் தொடர் முயற்சிகள் செய்தும் அவை முயற்சியாகவே இருக்கிறது. வளரும் நாடுகளுக்கும் பின்தங்கிய நாடுகளுக்கும் உரிய அங்கீகாரத்தை ஐ.நா. மன்றம் வழங்க வேண்டும்.

பிரதமர் மன்மோகன் சிங் "வீட்டோ' (நிராகரிப்பு) அதிகாரமில்லாத உறுப்பினர் பதவியைப் பாதுகாப்பு அவையில் இந்தியாவால் ஏற்க இயலாது எனத் தெளிவுபடுத்தி இருக்கிறார். வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினர் பதவிக்காக இந்தியா நீண்ட நாள்களாகக் கோரிக்கை வைத்துள்ளது. பிரான்ஸ், ரஷியா போன்ற பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் மட்டுமல்லாமல் ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் போன்ற பல்வேறு நாடுகளும் இந்தியாவின் கோரிக்கைக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்கின்றன.

1995-ம் ஆண்டு பொன்விழா கொண்டாடிய ஐ.நா. சபை பல்வேறு மகத்தான பணிகளையும் சேவைகளையும் ஆற்றி வருகிறது. 1945-ல் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் 51 நாடுகள் கலந்துகொண்டு ஐ.நா. அமைப்புக்கு அச்சாரம் போட்டன. 1946-ம் ஆண்டில் பாதுகாப்பு சபை செயல்படத் தொடங்கியது.

உலக அளவில் இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை, இந்தோனேசியா, நெதர்லாந்து மோதல் (1949), 1948-ல் பெர்லின் முற்றுகை, தென் கொரியா வடகொரியா பிரச்னை, திபெத்தில் சீனப்படையெடுப்பு, 1956-ல் சூயஸ் கால்வாய் குறித்து இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னை, ஹங்கேரியில் ரஷியத் தலையீடு, காங்கோ போர், இந்தியா - பாகிஸ்தான் போர் என பல்வேறு உலகப் பிரச்னைகளில் ஐ.நா. தலையிட்டு அமைதியை நிலைநாட்டியதை நீண்ட பட்டியலிடலாம்.

இலங்கையில் ஈழத் தமிழருக்கு உணவு மற்றும் மருந்து முதலிய உதவிகளைச் செய்ய ஐ.நா. முற்பட்டது. ஆனால், ஐ.நா.வின் தலையீட்டை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. சமீபத்தில்கூட, இலங்கையில் தமிழர்கள் சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் நிலையைக் கண்டித்து ஐ.நா. சபை பிரதிநிதிகள் ராஜபட்சவைச் சந்தித்தும் பயனில்லை.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய நாடுகள் வீட்டோ எனும் சிறப்பு ரத்து அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கின்றன. இந்தப் பட்டியலில் இடம்பெற வேண்டுமென இந்தியா விரும்புகிறது. இந்தியாவின் இந்தக் கோரிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவதில் சீனா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை முனைப்புக் காட்டுகின்றன.

ஐ.நா. தலைமைச் செயலராக இருந்த புத்ரோஸ் காலி, 1992-ல் பாதுகாப்பு சபையில் அதிகமான உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டுமென விரும்பினார். அதன்பின் உலக அளவில் இக்கருத்துக்கு ஆதரவு வலுத்தது. இந்தியாவைப் போன்ற நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக வேண்டுமென ஜெர்மனியும் ஜப்பானும் வலியுறுத்தின.

இந்தியாவின் கோரிக்கை சமீபத்தில் எழுந்த கோரிக்கை அல்ல. காமன்வெல்த் குழுக்கூட்டம் லண்டனில் 1945-ல் நடைபெற்றபோது இந்தியா இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியது. இச் சமயத்தில்தான் சான்பிரான்சிஸ்கோவில் ஐ.நா. அமைப்புப் பணிகளும், இந்த சாசன வரைவுப் பணிகளும் நடைபெற்றன. இந்தியா சார்பில் சர்.ஏ. ராமசாமி முதலியார். சர்.பெரோஸ்கான், பரோடா திவானாக இருந்த வி.டி. கிருஷ்ணமாச்சாரி, கே.பி.எஸ். மேனன் ஆகியோர் காமன்வெல்த் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

நிரந்தர உறுப்பு நாடுகள் பிற உறுப்பு நாடுகளின் மேல் தங்களின் கண்காணிப்பு வேலைகளைப் பார்ப்பது சரியல்ல என்பதை இந்தக்குழு வலியுறுத்தியது. அச் சமயத்தில் ஆஸ்திரேலியா, யுகோஸ்லாவியா போன்ற நாடுகள் இந்தியாவுக்குத் துணை நின்றன. இந்தியா நிரந்தர உறுப்பினர் பதவி பெறும் என்ற நம்பிக்கையை கனடாவும் வெளிப்படுத்தியது. இந்தப் பின்னணியில் சுமார் 60 ஆண்டுகளாக இந்தியாவின் கோரிக்கைக்குப் பல்வேறு நாடுகளின் ஆதரவு இருந்தபோதிலும் நிறைவேற்றப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

உலக அமைதி, சகோதரத்துவம் என்ற கொள்கையில் மற்ற நாடுகளைவிட இந்தியா தீவிரமாகவும் வழிகாட்டியாகவும் இருந்து வருகிறது. அணி சாராக் கொள்கை விஷயத்தில் அப்போதைய பிரதமர் நேருவுடன் யுகோஸ்லாவியா அதிபர் மார்ஷல் டிட்டோ, எகிப்து அதிபர் நாசர், இந்தோனேசிய அதிபர் சுகர்னோ போன்றவர்கள் உலக அமைதிக்கென ஆற்றிய பணிகள் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன.

பாலஸ்தீனப் பிரச்னை, காங்கோ பிரச்னை, சூயஸ் கால்வாய் போன்ற சர்வதேசப் பிரச்னைகளிலும் இந்தியா நடுநிலை வகித்ததுடன் ஐ.நா. சபையின் முயற்சிகளுக்கு முழு ஆதரவும் அளித்தது. நிரந்தர உறுப்பினர்களாக இருக்கின்ற 5 நாடுகள்கூடப் பிற நாடுகளின் மீது ஐ.நா. சாசனத்தை மீறிப் படையெடுத்த சம்பவங்கள் உண்டு. ஆனால், இந்தியா எக்காலத்திலும் தானாக எந்த நாட்டுடனும் வலியப் போருக்குச் சென்றது கிடையாது. சீனாவும், பாகிஸ்தானும் சீண்டிப்பார்த்ததன் விளைவே கடந்தகாலப் போர்கள். உலக அமைதியின் தூதனான இந்தியாவை, வீட்டோ அதிகாரம் இன்றி, பாதுகாப்பு சபையில் சேர்ப்பது முறையற்றதாகும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டம் 2007-ம் ஆண்டு ஜனவரி 10-ல் லண்டனில் நடைபெற்றது. பாதுகாப்புக்குழுவின் பரிந்துரைகளை ஐ.நா.வின் பொதுக்குழுதான் தீர்மானிக்கும். இது ஐ.நா. மன்றத்தின் இதயமாகத் திகழும். வரவு செலவுக் கணக்குகள், ஐ.நா.வின் பணிகள், கொள்கைகள் போன்றவற்றையும் முடிவு செய்யும்.

இந்தியா உறுப்பினராக விரும்பும் பாதுகாப்பு சபை 5 நிலையான உறுப்பினர்களைக் கொண்டு, 1963-ம் ஆண்டிலிருந்து மொத்தம் 15 உறுப்பினர்களுடன் செயலாற்றுகிறது. இந்த அமைப்பு 1946 ஜனவரி 12-ல் அமைக்கப்பட்டது. ஐ.நா.வின் உயிர்க்கூறு இந்தப் பாதுகாப்பு மன்றமாகும். இதன் தீர்ப்புகள் முடிவுகள் யாவும் கட்டாயம் செயல்படுத்தும் அதிகாரம் பெற்றவை. பொருளாதாரத் தடைகள் அறிவிப்பு உள்பட முக்கியமான அதிகாரங்கள் அனைத்தையும் முடிவு செய்வது இம் மன்றத்தின் அதிகாரத்துக்கு உள்பட்டது.

அனைத்துலக அமைதி, பாதுகாப்பு போன்ற முக்கியப் பணிகளில் பாதுகாப்பு மன்றம்தான் முடிவெடுக்கும். ரத்து அதிகாரம் பெற்ற 5 நாடுகளில் எந்த ஒரு நாடேனும் எதிர்த்து வாக்களித்தாலும் தீர்மானம் கைவிடப்படும். சர்வ அதிகாரம் படைத்த அமைப்பாக இம் மன்றம் விளங்குகிறது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் அமைதிப் படைகள் 1947-ல் கிரீஸ் நாட்டுக்குச் சென்றதும், 1948-ல் பாலஸ்தீனத்துக்கும் காங்கோவுக்கும் சென்றது பாராட்டக்கூடிய நடவடிக்கையாகும்.

1959-ல் தென் கொரியாவுக்குள் வடகொரியா ஊடுருவியபோது உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் அமைதியை நிலைநாட்டியது. இப்போரில் அமெரிக்கப் படைத்தளபதி மேக் ஆர்தர் தலைமை ஏற்றதால் "மேக் ஆர்தர் போர்' என்று இப்போர் அழைக்கப்பட்டது. இப்போரில் ஐ.நா. மன்றத்தின் கொடியைப் பயன்படுத்திக் கொண்டு பாதுகாப்பு சபையின் யோசனைகளுக்கு மாறாக மேக் ஆர்தர் நடந்துகொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதுபோன்ற நடவடிக்கைகள் ஐ.நா.வின் கட்டுப்பாடு குலையக்கூடிய வகையில் ஆதிக்க சக்திகள் நடந்து கொண்டன என்பதற்கு எடுத்துக்காட்டுகள். இம்மாதிரியான ஆதிக்க சக்திகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஐ.நா. எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். ஆனால் அவை பயன் தரவில்லை. இந்தியா போன்ற சமாதானத்தை விரும்பும் நடுநிலை நாடுகள் பாதுகாப்பு சபையில் அங்கம் வகித்தால் தங்களது இஷ்டத்துக்கு ஏற்ப நடவடிக்கைகளைத் தன்னிச்சையாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதுதான் ஆதிக்க சக்திகளின் பயத்துக்குக் காரணமாக இருக்கும்.

மேலும் ஜெனீவா, அம்மானில் இயங்கிவரும் பொருளாதார மற்றும் சமூக மன்றம், ஹேகில் இயங்குகிற சர்வதேச நீதிமன்றம். சின்னஞ்சிறு நாடுகளின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்தும் பொறுப்பாட்சி மன்றம் முதல் நியூயார்க்கில் அமைந்துள்ள ஐ.நா. தலைமைச் செயலகம் வரை பல்வேறு ஐ.நா. அமைப்புகள் உலக நாடுகளின் அமைதிக்கும் நலன்களுக்கும் பன்முக வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்டு வருகின்றன. ஆனால், இந்த அமைப்புகளிலும் வளர்ச்சி பெற்ற ஆதிக்க நாடுகளின் அதிகாரம் மட்டுமே கொடிகட்டிப் பறக்கிறது. நடுநிலை வகிக்கும் அணிசேரா நாடுகளின் பங்களிப்பு இந்த அமைப்புகளில் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதும் இந்தியாவின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்று.

ஐ.நா. மன்ற விவாதத்தில் குறிப்பிட்ட நாடுகள் மட்டுமல்லாமல் உறுப்பு நாடுகள் அனைத்தும் பங்கேற்கும் சூழலை உருவாக்க வேண்டும்.

உலகைப் பயமுறுத்தும் பூமி வெப்பமாவதைத் தடுப்பது குறித்து வருகின்ற டிசம்பரில் நடைபெறும் கோபன்ஹேகன் மாநாட்டில் விவாதித்து உரிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு உடன்படாத நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை உலக அளவில் விதிக்க வேண்டும். அமெரிக்கா உள்பட எந்த நாடும் இதற்கு விதிவிலக்காகக் கூடாது.

உலக அளவில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை அனைவரின் கூட்டு முயற்சியைக் கொண்டு ஒழிக்க அனைவரின் முயற்சிகளும் இதய சுத்தியோடு இருக்க வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியாமல் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பாலஸ்தீனப் பிரச்னை, இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் போன்றவை நிரந்தரமாகத் தீர்த்துவைக்கப்பட வேண்டும்.

இலங்கையில் சொந்த நாட்டில் அகதிகளாக பல லட்சம் தமிழர்கள் கம்பி வேலிக்குள் தவித்துக் கொண்டிருக்கும் நிலைமையைப் பார்த்து உலகமே கொதித்துக் கொண்டிருக்கிறது. அங்கே நடப்பது இனப்படுகொலை என்பதும் மனித உரிமை மீறல் என்பதும் உலகம் ஏற்றுக்கொண்ட உண்மைகள். இவை ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்னை என்றுகூறி ஒதுக்கிவிட முடியாது.

இந்தப் பிரச்னையில் ஐ.நா. தன்னிச்சையாகத் தலையிட்டு ஈழத் தமிழர்களின் புனர்வாழ்வுக்கும் மனித உரிமையை நிலைநாட்டுவதற்கும் முயற்சித்தால் மட்டுமே உலக நாடுகளின் பிரதிநிதி என்கிற மரியாதையை ஐ.நா. தக்க வைத்துக் கொள்ள முடியும். அதிகாரம் கொண்ட அவையாக ஐ.நா.வை மாற்றி மேலும் பல சீர்திருத்தங்களை ஏற்படுத்த வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.