நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

உள்ளத்தனையது உயர்வு

""ஒன்றுபடுதலில் ஒன்றி இருப்போம்'' இதுதான் ஆசிய பசிபிக் நாடுகளின் சிறை சீர்திருத்த நிர்வாகங்களின் கூட்டமைப்பின் உயரிய கோட்பாடு. ஒவ்வோர் ஆண்டும் இக்கூட்டமைப்பின் கருத்தரங்கு நடைபெறும். 2008-ம் ஆண்டு இக்

News image
Updated On :25 டிசம்பர் 2023, 1:38 pm

ஆர். நட​ராஜ்

""ஒன்றுபடுதலில் ஒன்றி இருப்போம்'' இதுதான் ஆசிய பசிபிக் நாடுகளின் சிறை சீர்திருத்த நிர்வாகங்களின் கூட்டமைப்பின் உயரிய கோட்பாடு. ஒவ்வோர் ஆண்டும் இக்கூட்டமைப்பின் கருத்தரங்கு நடைபெறும். 2008-ம் ஆண்டு இக் கருத்தரங்கு மலேசியா நாட்டில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியப் பிரதிநிதிக் குழுவில் இடம்பெற்று மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு நாடும் சிறை சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கவும் நல்ல செய்முறைகளை மற்ற நாடுகளும் நடைமுறைக்கு ஏற்ப பின்பற்றுவதற்கும் இக்கருத்தரங்கு வழி வகுத்தது. சட்டத்தின் பிடியில் சிக்கியவர்களை நியதிகளுக்கு உள்பட்டு சிறை இல்லங்களில் பாதுகாப்பது சிறை நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்பாகும். சிறை இல்லவாசிகளுக்கு நல்லியல்புகளைப் பயிற்றுவித்து சமுதாயத்தோடு மீண்டும் இணைவதற்கான சூழ்நிலையை உருவாக்குவது நிர்வாகத்தின் மற்றொரு முக்கியப் பணி. எல்லா நாடுகளிலும் சிறைகளில் நெரிசல் அதிகமாகவே உள்ளது என்பது உண்மை நிலை. சிறைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை அந்தந்த நாட்டின் மக்கள்தொகையோடு ஒப்பிட்டுக் கணக்கிடப்படுகிறது. ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளில் 100-க்கு மேற்பட்ட இல்லவாசிகள் உள்ளனர். சீனா உள்பட மற்ற ஆசிய நாடுகளில் இந்தக் கணக்கு சுமார் 60-லிருந்து 80 வரை. ஆனால் இந்தியாவில் 1 லட்சம் மக்கள்தொகைக்கு 30 இல்லவாசிகளே உள்ளனர். 111 மத்திய சிறைகள் உள்பட இந்தியாவில் உள்ள மொத்தச் சிறைகளின் எண்ணிக்கை 1336. சராசரி இல்லவாசிகளின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம். இதில் 20,000 பெண்களும் அடங்குவர். சிறையில் நெரிசலைக் குறைப்பதற்கு ஒரே வழி சிறை இல்லங்களை விரிவுபடுத்துவது மற்றும் தேக்கத்தில் உள்ள வழக்குகளைத் துரிதமாக முடித்தல். உலக அளவில் பொருளாதார நெருக்கடி சூழ்ந்திருக்கும் நிலையில் எல்லா நாடுகளிலும் குற்றங்கள் அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதை மனதில் கொண்டு பல நாடுகளில் சிறை விரிவாக்கப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு குற்றத்திற்குத் தண்டனை சிறைவாசம் என்று சட்டப்படி தீர்ப்பு வழங்கினால் சிறைக்கு அனுப்புவதுதான் தண்டனையே அன்றி சிறையில் மேலும் தண்டனை வழங்குவது முறையற்றது. சிறைச்சாலைகள் குற்றவாளிகளைத் துன்புறுத்தும் மையம் என்று மக்களிடையே தவறான கருத்து நிலவுகிறது. இல்லவாசிகளை சீர்திருத்துவது தான் சிறைத்துறையின் தலையாய பொறுப்பு என்பதை எல்லா நாடுகளும் உணர்ந்துள்ளன. சிறை என்றாலே வானுயர சுவர்கள், ராட்சத கதவுகள், தப்பிக்க முடியாதபடி தானியங்கி தடுப்புகள் என்று உள்ளே வருபவருக்கு அச்சத்தையும், அசாதாரண பிரமிப்பையும் ஏற்படுத்தும். ஆதலால் சிறை வளாகங்களின் உள்ளமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அமைய வேண்டும் என்பது வல்லுநர்களின் கருத்து. மலேசிய நாட்டில் சிறை இல்லவாசிகளை சீர்திருத்தும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இல்லவாசிகளின் மனித வளத்தை மேம்படுத்தும் விதத்தில் புதிய உத்திகள் கையாளப்படுகின்றன. சிறைக்கு வருபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. பின்னர் மனோதத்துவ நிபுணர் உள்ளிட்ட விசேஷக் குழு மூலம் விரிவான நேர்காணல் நடத்தப்பட்டு, அவர்களது மனநிலைக்கு ஏற்ப எந்தவிதமான பயிற்சி கொடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்படுகிறது. இல்லவாசிகளை சிறு குழுக்களாகப் பிரித்து, அவர்களது தற்போதைய நிலைகள் பற்றி மனந்திறந்து விவாதிக்கவும், அவர்களது கடந்தகால அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. உடற்பயிற்சி, மன அமைதி ஏற்படுத்துவதற்கான பயிற்சி கொடுக்கப்பட்டு, தொழிற்கல்வியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மலேசிய சிறைகளில் நன்கு அமைக்கப்பட்ட சிறைத் தொழிற்சாலைகள் உள்ளன. மரச்சாமான்கள், ஆயத்த ஆடைகள், கைவினைப் பொருள்கள், நாட்டு மருந்து வகைகள் என்று பலதரப்பட்ட பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. மலேசிய சிறை நிர்வாக முறையில் தண்டனை பெற்றவர் சிறைக்கு வரும்பொழுதே மூன்றில் ஒரு பங்கு சிறை குறைப்பு அவரது எதிர்கால நன்னடத்தையின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. சிறைக் குற்றங்களில் ஈடுபட்டாலோ, விதிகளை மீறினாலோ அது அவரது சிறை குறைப்பைப் பாதிக்கும். ஒழுக்கமாக சிறையில் இருப்பவர்கள் எல்லோருக்கும் ஒரே அளவில் சிறை குறைப்போடு இணைந்த நன்னடத்தை விதிகள் சிறை நிர்வாகத்துக்கு உதவுகிறது. ஒருவர் சிறையிலிருந்து விடுதலையாவதற்கு ஓராண்டுக்கு முன்னர் விதிகள் தளர்த்தப்பட்டு, அவர் குடும்பத்தோடும் சார்ந்திருக்கும் மக்களோடும் இணைவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. நேர்காணல் முறைகளை எளிதாக்கி அவருக்கு அறிவுரையும் கொடுக்கப்பட்டு, தயார் நிலையில் அவர் விடுதலையாக ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆஸ்திரேலிய நாட்டு சிறை நிர்வாகத்திலும் விடுதலையாகும் இல்லவாசிகளைத் தயார் செய்யும் முறை சிறப்பாக அமல்படுத்தப்படுகிறது. தாய்லாந்து நாட்டில் கர்ப்பமடைந்த தண்டனை பெற்ற பெண்கள் பேறுகாலத்தில் குடும்பத்தோடு இருக்க மூன்று வருடம் வரை தண்டனையை ஒத்திவைக்க சட்டத்திருத்தம் 2007-ல் அமல்படுத்தப்பட்டது. இந்தத் தண்டனை தள்ளிவைப்பு சில கொடூரக் குற்றங்களுக்குப் பொருந்தாது. சிறையில் பிறப்பு என்ற அவப்பெயரைத் தவிர்த்து, குழந்தைகளுக்குத் தாயின் அரவணைப்பு உறுதி செய்யும் இத்திட்டம் நமது நாட்டிலும் கொண்டு வரப்பட வேண்டும். சிங்கப்பூரில் ஆண்டில் ஒரு நாள் மஞ்சள் கொடி தினம் என்று சிறை இல்லவாசிகள் நாளாக அனுசரிக்கப்படுகிறது. அன்று சிறைத்துறை நடவடிக்கைகள் பிரதானப்படுத்தப்படுகின்றன. சிறைவாசிகள் நிலைமை அவர்களை எவ்வாறு நல்வழிப்படுத்துவது, சீர்திருத்தும் நடவடிக்கையில் சமுதாயத்தின் பங்கு, சிறைச்சாலைகளில் உள்ள தொழிற்சாலைகளை மேம்படுத்தும் பணிகள் போன்றவை பொதுமக்களிடையே பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் கலையுலக, தொழில் மற்றும் சமூகநல பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. பல நாடுகளில் எல்லாக் குற்றங்களுக்கும் சிறைத்தண்டனை என்றில்லை. சமூக நலச் சட்டத்தில் உள்ள குற்றங்களுக்குச் சமுதாய நற்பணி தண்டனையாக வரையறுக்கப்பட்டு, சிறைத்தண்டனை தவிர்க்கப்படுகிறது. இதன்மூலம் குற்றம் புரிந்தவர்களின் பணி சமுதாயத்திற்குக் கிடைக்கிறது. இத்தகைய மாற்று தண்டனை முறை நமது நாட்டிலும் வரவேண்டும். சமுதாயத்தில் நலிந்தவர்களும், வறுமையில் உழல்பவர்களும் தான் சிறைத் தண்டனைக்கு உள்ளாகும் நிலை நமது நாட்டில் உள்ளது. மருத்துவ வசதி இல்லாத சூழலில் இருந்து இவ்வாறு சிறைக்கு வருபவர்களின் உடல்நிலை மோசமாக இருப்பதால் சிறையில் மருத்துவ வசதியை மேம்படுத்துவது அவசியம். உடல்நிலையோடு அவர்களது மனநிலையும் பாதிப்புக்கு உள்ளாகிறது. பலர் மதுவுக்கும், போதைப் பொருளுக்கும் அடிமையாகி அவை கிடைக்காதபோது உள்ளம் ஏங்கும் நிலையில் பித்தம் முதிர்ந்த எல்லைக்குத் தள்ளப்படுகின்றனர். எப்படியேனும் போதைப் பொருள்களை மறைமுகமாகக் கொண்டுவர எத்தனிக்கின்றனர். ஆசனவாயிலும், பார்க்க வருபவர்கள் கொண்டு வரும் பொருள்களில் மறைத்துக் கடத்தவும் முயற்சிக்கின்றனர். இத்தகைய நூதன கடத்தல் முறைகள் பற்றியும், இதனைத் தவிர்க்க சிறை நிர்வாகம் எடுக்கும் முறைகள் பற்றியும் கலந்தாயப்பட்டது. மலேசிய நாட்டில் உடல் பாகங்களில் இவ்வாறு மறைக்கப்படும் போதைப் பொருள்களைக் கண்டுபிடிக்க நுணுக்கமான புகைப்படம் எடுக்கும் முறை செயலாக்கத்தில் உள்ளது. மலேசிய நாடு பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்தபோது கட்டப்பட்ட அலோர் செடார் சிறை சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது. பினாங் மாகாணத்தில் உள்ள போகாக் சேனா சிறை சுமார் 15 மில்லியன் டாலர் மதிப்பில் கட்டப்பட்ட அதி நவீன சிறை வளாகம். நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மதில் சுவர்களில் மின்னணுக் கருவிகள். தானியங்கிக் கதவுகள், தானியங்கி சமிக்ஞைகள் இவையாவும் மத்தியக் கட்டுப்பாட்டு அறை மூலம் இயங்குகிறது. எல்லா வசதிகளுடன் கூடிய சிறை என்றாலும் அங்கு உள்ள விசாரணை இல்லவாசிகளின் நிலை மனதை நெருடாமல் இல்லை. ஒரே அறையில் பலர் என்று சிறை நெரிசலைக் காண முடிந்தது. அறைகளில் மின் விசிறியில்லை, புழுக்கத்தில் குமைவதை உணர முடிந்தது. இந்தியாவில் எல்லா சிறை இல்லங்களிலும் மின் விசிறி வசதி உள்ளது. அதுவும் நமது தமிழகச் சிறைகளில் மின் ஊக்கி உள்ளதால் மின்சார வெட்டுக்கு இடமில்லை. மலேசியாவுக்கு இந்தோனேஷியாவில் இருந்து முகாந்தரமின்றி கடல் வழியாக கள்ளத் தோணியில் வருபவர் எண்ணிக்கை அதிகம். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சிறையில் வைக்கப்படுகின்றனர். இவ்வாறு அனுமதிப் பத்திரம் (விசா) இன்றி பிடிபடுபவர்களில் தமிழர்களும் அடங்குவர் என்பது வேதனை தந்தது. "ஐயா, ரொம்பக் கஷ்டப்படுகிறோம்' என்று பல தமிழ் இல்லவாசிகளின் வேதனைக்குரலைக் கேட்க முடிந்தது. மலேசிய சிறைகளில் உள்ள இல்லவாசிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம். அதில் சுமார் 90,000 பேர் இந்தோனேஷியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். மலேசிய சிறைப் பணியாளர்களில் சிலர் தமிழர்கள். அவர்கள் நம்மிடம் தமிழில் பேசுவதற்குத் தயங்கியது மலேசிய நாட்டில் அவர்களது இரண்டாந்தர நிலையை விளக்கியது. தாங்கள் மலேயர்கள் என்பதைக் காட்டிக்கொள்ள தமிழில் பேசுவதைத் தவிர்த்தனர். ஆனால் மலேசிய குடியுரிமை பெற்ற வடஇந்தியர்கள் இந்தியர்களைப் பார்த்து சந்தோஷமாக இந்தியில் உரையாடினர். தமிழருக்கு மட்டும் ஏன் இந்த தன்னம்பிக்கை வரவில்லை - வருத்தமளித்தது. சிங்கப்பூரில் குற்றவியல் ஆளுமையின் கீழ் தண்டனை கடுமையானது. அதுவும் போதைப் பொருள் கடத்தலுக்குத் தடுப்புத் தண்டனை வழங்கப்படுகிறது. சிங்கப்பூர் தண்டனை முறையில் கசையடியும், பிரம்படியும் குறிப்பிட்ட குற்றங்களுக்கு தண்டனையாகக் கொடுக்கப்படுகின்றன. உலக அளவில் மனித உரிமைகள் பற்றியும், தனிமனித துன்புறுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வும் பரவியுள்ள நிலையில், சித்திரவதைக்குள்ளாக்கும் தண்டனையை இன்றும் நடைமுறைப்படுத்துவது கொடுமையானது. ஆனால் சிறிய நாடு என்பதால் சில பிரச்னைகளுக்கு இம்மாதிரியான தண்டனையை முக்கியத் தடுப்பு நடவடிக்கையாகப் பார்க்கிறார்கள். சிறைகளில் கசையடி கொடுக்கும்பொழுது மருத்துவர் கண்காணிப்பில் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஏதோ மருத்துவர் இருந்தால் வலி குறையும் என்பதுபோல விளக்கம் கொடுக்கப்படுகிறது. இத்தகைய இடைநிலைக் காலத்திய கொடுங்கோலர்களின் தண்டனை முறைகள் முன்னேற்றம் அடைந்த நாடு என்று பெருமிதம் கொள்ளும் சிங்கப்பூருக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. உள்ளத்தனையது உயர்வு என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப இல்லவாசிகளை உயர்த்த கல்வி, தொழிற்கல்வி இவை இரண்டையும் அடிப்படையாக வைத்து சீர்திருத்த நடவடிக்கைகள் தமிழகச் சிறையில் மேற்கொள்ளப்படுகின்றன. மனித உரிமைகளைப் பேணுதல் இல்லவாசிகளுக்கு நல்வழி புகட்டுதலில் மற்ற ஆசிய நாடுகளை ஒப்பிடுகையில் தமிழகச் சிறைகளில் சீராகப் பணிகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதை உறுதியாகக் கூறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.