ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தமிழாற்றுப்படைக்கு தளம் அமைத்துக் கொடுத்த தினமணி!

தினமணி எனக்குப் பதினொரு வயதில் அறிமுகம். தொடக்கப் பள்ளி ஆசிரியர் சுப்பையா எங்களுக்கு அடுத்த வீட்டிலிருந்தார்.

News image
வைரமுத்து
Updated On :31 ஜனவரி 2024, 10:08 am

வைரமுத்து

தினமணி எனக்குப் பதினொரு வயதில் அறிமுகம். தொடக்கப் பள்ளி ஆசிரியர் சுப்பையா எங்களுக்கு அடுத்த வீட்டிலிருந்தார். அவர் தினமணியின் சந்தாதாரர். அவர் வீட்டுக்கு வரும் ஒரே பத்திரிகை தினமணி மட்டும்தான். 

எங்கள் வீட்டு மொட்டைமாடியில் நின்று பார்த்தால் அவர் தினமணி வாசிப்பது தெரியும். அவர் படித்து முடித்தபிறகு அவர் வீடு சென்று ஆசிரியரின் மனைவியிடம் அனுமதி பெற்று அந்தத் தினமணியை வாசிக்கும் இரண்டாம் வாசகன் நான்தான். 

அன்றைய சிற்றறிவுக்கு எட்டாத செய்திகளையும் அறிமுகம் செய்துகொள்ளும் வாய்ப்பு அப்படித்தான் கிட்டிற்று. 

பள்ளியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் செய்தி வாசிக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டதும் நான் பத்திரிகைகளின் பைத்தியமானேன். அதிகாலையில் கிணற்றில் தாவிக் குளித்துவிட்டு ஈரத்தலையை உலர்த்திக் கொண்டே உள்ளூர் நூலத்திற்கு ஓடோடிச் சென்று மாநில - தேசிய - உலகச் செய்திகள் என்று வகைபிரித்துத் தொகுத்தெழுதி பிரார்த்தனைக் கூட்டத்திற்குப் பறந்துசென்று வாசிப்பது என் வழக்கம். இந்த என் பணிக்குச் சில பத்திரிகைகள் பயன்பட்டன என்றாலும் பெரிதும் துணைநின்றது தினமணிதான். 

தினமணியின் செய்திகளை உள்வாங்கிக் கொண்டு அதில் இடம்பெற்ற வடசொற்களைத் தமிழ்ப்படுத்தி வாசிப்பதுதான் 12 வயதுமுதல் நான் பெற்ற பயிற்சியாக இருந்தது. நூலகத்தில் வாசித்து வாசித்து தினமணிக்கு வசப்பட்டேன். 

சென்னை பச்சையப்பன் கல்லூரிக்குப் பயில வந்த பிறகு தினமணிக்கும் எனக்குமான தொடர்பின் தொடர்ச்சி அறுந்துவிட்டது. திரைத் துறைக்கு வந்து சற்றே வசதியான பின்பு தினமணி வாசிப்பைத் தொடர்ந்தேன். 1980 முதல் தினமணிக்கு நான் சந்தாதாரர் ஆனேன். இன்று வரைக்கும் தினமணி என் அதிகாலையை அலங்கரிக்கிறது. ஆயுள் உள்ளவரை அது தொடரும் என்று நம்புகிறேன்.

தினமணியின் தலையங்கங்களால் நான் தேசிய அறிவையும் உலக அறிவையும் பெற்றேன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. 80-க்குப் பிறகு பணியாற்றிய தினமணியின் எல்லா ஆசிரியர்களும் எனக்கு நண்பர்கள்.

தினமணிக்குப் பேட்டி கொடுப்பதென்றால் நான் மகிழ்ச்சியடைவேன். அதே நேரத்தில் விழிப்பாகவும் இருப்பேன்.கவியரசு என்ற பட்டம் கண்ணதாசன் மறைவுக்குப் பிறகு தகுதிமிக்க பெருமக்களால் எனக்கு வழங்கப்பட்டது. அது கண்ணதாசனுக்கு மட்டுமே உரியது; வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு சர்ச்சை எழுந்தது. அந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தேன். 

தினமணி கதிர் என்னைப் பேட்டி எடுத்து அட்டைப்படமிட்டு ஒரு கட்டுரை வெளியிட்டது. அந்தப் பேட்டியில்தான் "கவியரசு பட்டத்தைத் துறக்கிறேன்; அதைக் கண்ணதாசனுக்கே காணிக்கை செய்கிறேன்' என்று பிரகடனம் செய்தேன். கவியரசு பட்டத்தை நான் துறப்பதற்கும் அதைத் துறந்ததனால் முத்தமிழறிஞர் அந்நாள் முதல்வர் கலைஞர் "கவிப்பேரரசு' என்று எனக்குப் பட்டம் சூட்டியதற்கும் தினமணியே மூலகாரணம். 

தினமணியின் பொன்விழா மதுரையில் நிகழ்ந்தபோது ஜெயகாந்தன், சிவகுமார் ஆகியோரோடு நானும் கலந்துகொண்டது ஈரம்காயாத இனிய நினைவு. 

தினமணிக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இன்று தமிழுலகம் கொண்டாடும் "தமிழாற்றுப்படை' பிறந்ததற்கு மூலமே தினமணிதான். தினமணியின் துடிப்புமிக்க ஆசிரியர்,அருந்தமிழ்மீது அடங்காக் காதல் கொண்ட கி.வைத்தியநாதன் அவர்கள் பாவேந்தர் பாரதிதாசன் குறித்து ஒரு கட்டுரை எழுதச் சொன்னபோது நெருக்கடியான பணிகளுக்கு மத்தியில் எழுதிக் கொடுத்தேன். அதுவரைக்கும் இல்லாத புதுமையாக அந்தக் கட்டுரை தினமணியின் முழுப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. 

அந்தக் கட்டுரை பெற்ற வரவேற்பும் தமிழுலகத்தின் பரவசமும் அதனால் நானடைந்த உற்சாகமும் என்னைப் பெருமகிழ்ச்சி கொள்ளவைத்தன. தொடர்ந்து ஒவ்வோர் ஆளுமையாக எழுதலாம் என்ற திட்டத்தை தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் முன்மொழிந்தார். நான் இடர்ப்பாடுகளுக்கிடையே வழிமொழிந்தேன். ஒவ்வோர் ஆளுமையாக எழுத எழுத ஒட்டுமொத்தத் தமிழ்ப்பரப்பையும் எழுத வேண்டும் என்ற கடப்பாடும் அரங்கேற்ற வேண்டும் என்ற ஆசையும் எனக்குள் விளைந்தன. கட்டுரைகளை அரங்கேற்ற வேண்டும் என்ற திட்டத்தைத் தினமணி ஆசிரியரே வகுத்துக் கொடுத்தார். அந்த வகையில் தமிழாற்றுப்படைக்குத் தளம் அமைத்துக் கொடுத்தது தினமணிதான். 

தமிழாற்றுப்படை முற்றுப்பெற வேண்டும் என்ற முழு வெறியில் நான் தமிழ்ச் சமூகத்தின் துணையோடு பல ஊர்களிலும் தமிழாற்றுப்படையைத் தொடர்ந்து அரங்கேற்றினேன். இன்று நூலாகவும் வெளியிட்டுத் தமிழின் காலடியில் காணிக்கையாக்கியிருக்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.