செய்தியும் தாக்கமும்..
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் 2016 டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் பங்கேற்க தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் வந்திருந்தார்.


உமறுப்புலவருக்கு அரசு விழா
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் 2016 டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் பங்கேற்க தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் வந்திருந்தார். அப்போது எட்டயபுரத்தில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் நினைவிடம், இஸ்லாமிய தமிழறிஞர் உமறுப் புலவர் நினைவிடம் ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்.
அப்போது, எட்டயபுரம் உமறுப் புலவர் சங்கத் தலைவர் உ. காஜா மைதீன், ஆசிரியர் கி. வைத்தியநாதனை சந்தித்து உமறுப் புலவர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வேண்டுமென அழைப்பிதழ் தந்து, உமறுப் புலவருக்கு அரசின் சார்பில் விழா எடுப்பதற்கும் ஆவன செய்ய வேண்டுமென விருப்பம் தெரிவித்தார்.
இதையடுத்து, ஆசிரியர் கி. வைத்தியநாதன் வழிகாட்டுதலின்படி உமறுப் புலவருக்கு அரசு விழா எடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, விளாத்திகுளம் செய்தியாளர் எஸ். சங்கரேஸ்வரமூர்த்தியின் மூலம் கட்டுரை வடிவமைக்கப்பட்டது.
இஸ்லாமிய தமிழ்க் காப்பியங்களில் சிறந்து விளங்கும் சீறாப்புராணத்தை இயற்றி தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் சிறப்பு சேர்த்த தமிழறிஞர் உமறுப் புலவரின் தமிழ்த் தொண்டைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரது பிறந்த தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மீலாது நபி தினத்துக்கு அடுத்த நாள் எட்டயபுரத்தில் உள்ள அவரது நினைவு மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் அரசு விழா நடத்தப்பட வேண்டும். அவ்விழாவில் தமிழ் இலக்கியத்துக்குத் தொண்டாற்றும் இஸ்லாமிய தமிழ் அறிஞர்களை, தமிழ் எழுத்தாளர்களை கெளரவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து "உமறுப் புலவருக்கு ஏன் இல்லை அரசு விழா?' என்ற தலைப்பில் 2017 ஜனவரி 2-ஆம் தேதி தினமணியின் அனைத்துப் பதிப்புகளிலும் கட்டுரை வெளிவந்தது.
இந்தக் கட்டுரை தமிழக அரசின் கவனத்துக்குச் சென்றது. தினமணியின் கட்டுரையை மையமாக கொண்டு செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவின் உத்தரவின்பேரில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பூர்வாங்கப் பணிகளும், துறைரீதியான நடவடிக்கைகளும் தொடங்கி நடைபெற்றன.
2017 ஜூலை 5-ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் இஸ்லாமிய தமிழறிஞர் உமறுப் புலவரின் பிறந்த நாள் விழா மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2017 அக்டோபர் 23-ஆம் தேதி எட்டயபுரத்தில் தமிழக அரசின் சார்பில் உமறுப் புலவருக்கு முதலாவது அரசு விழா, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது.
- எஸ். சங்கரேஸ்வரமூர்த்தி
***
நனவாகிறது சுப்பிரமணிய சிவாவின் கனவு...
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்று விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா கண்ட கனவு அரசின் அறிவிப்பால் நனவாகியுள்ளது. இந்த நீண்ட நெடிய பாதையில் தினமணி நாளிதழும் தொடர்ந்து செய்தி வெளியிட்டு, தியாகிகள், பற்றாளர்களுடன் துணை நின்றுள்ளது.

தற்போதைய திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் பிறந்தவர் சுப்பிரமணிய சிவா. இவர் 1906ஆம் ஆண்டு தன்னை விடுதலை வேள்வியில் இணைத்துக் கொண்டார். வ.உ.சி.யுடன் தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்று சிவா ஆற்றிய எழுச்சியுரை அன்றைய ஆங்கில அரசை அச்சம் கொள்ள வைத்தது.
தொழிலாளர் போராட்டம், சுதந்திரத்துக்கான போராட்டங்களில் பல முறை சிறை சென்றவர். அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டபோது, தருமபுரி மாவட்ட விடுதலைப் போராட்டத் தியாகிகளின் நட்பு சிவாவுக்குக் கிடைத்தது. இந்த நட்பு மூலம் தருமபுரி மாவட்டத்துக்கு வந்த சிவா, தனது நண்பரான சின்னமுத்து முதலியார், விடுதலைப் போராட்ட வீரர்களின் துணையோடு பாப்பாரப்பட்டியில் 6 ஏக்கர் 21 சென்ட் நிலம் வாங்கினார். அந் நிலத்துக்கு பாரதபுரம் எனப் பெயரிட்டு, தனது தோழர்களுடன் தங்கி விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து வந்தார். பாரதபுரத்தில் பாரத மாதா ஆலயம் எழுப்ப வேண்டும் எனத் திட்டமிட்டு, அதற்கான செயலில் இறங்கினார். அப்போதைய காங்கிரஸ் தலைவர் சித்தரஞ்சன் தாஸை அழைத்து வந்து பாரத மாதா ஆலயத்துக்கு 1923 ஜூன் 22-ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். ஆனால், ஆலயப் பணிகள் நிறைவேறாமல் 1925 ஜூலை 23-இல் சிவா உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, நாடு விடுதலை பெற்ற பின்பும், பாப்பாரப்பட்டியில் சிவா அடிக்கல் நாட்டிய அதே இடத்தில் பாரத மாதாவுக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என பாப்பாரப்பட்டி மற்றும் தருமபுரி மாவட்ட விடுதலைப் போராட்ட தியாகிகள், அவர்களது வாரிசுகள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில், குமரி அனந்தன் நடைப்பயணம், உண்ணாவிரதம் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டதோடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார்.
சிவா கண்ட கனவை நனவாக்கிட பாரத மாதா ஆலயம் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை தினமணியும் முன்னெடுத்து, சிறப்பு செய்திகளை பல முறை வெளியிட்டது. இது மட்டுமல்லாது, அந்தப் பகுதியினர், தியாகிகள், அவர்களது வாரிசுகள், அமைப்புகள், அரசியல் கட்சியினர் அவ்வப்போது இந்த ஆலயம் தொடர்பாக எழுப்பும் கோரிக்கைகளும் தினமணியில் செய்திகளாக வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் அமைந்துள்ள வளாகத்தில் பாரத மாதா நினைவாலயம் எழுப்பப்படும் என தமிழக அரசு 2018 செப்டம்பர் 5-ஆம் தேதி அறிவித்தது. ரூ.1.50 கோடியில் நூலகத்துடன் இந்த ஆலயம் அமையும். மேலும், ஆலயத்தில் பாரத மாதாவுக்கு 7.5 அடி உயரத்தில் வெண்கலத்தில் சிலையும், 3.25 அடி உயரத்தில் வெண்கலத்தில் சிங்கம் சிலையொன்றும் இந்த ஆலயத்தில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணிகள் 2019 மார்ச் மாதம் துவங்கப்பட்டன. ஆலய கட்டுமானப் பணிகள் தொடக்க நிலையிலும், நூலகக் கட்டடப் பணி 90 சதவீதமும் நிறைவடைந்துள்ளன. ஓரிரு மாதங்களில் ஆலயக் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று, சுப்பிரமணிய சிவா கனவு நனவாக உள்ளது.
- ஆர். ராதாகிருஷ்ணன்
***
வறுமையில் வாடிய வ.உ.சி. வாரிசுகளுக்கு விடிவு..

தியாகச் சுடரான வ.உ.சிதம்பரனாரின் மூத்த மகன் ஆறுமுகம். இவரது மகள் கமலாம்பாள். இவரது கணவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஞானவடிவேலு.
குடியரசுத் தலைவராக இருந்த பாபு ராஜேந்திர பிரசாத், ஞானவடிவேலுவுக்கு தொழிலாளர் நலத் துறையில் பணி வாய்ப்புக்கு ஏற்பாடு செய்தார். ஞான வடிவேலு-கமலாம்பாளின் மூத்த மகள் தனலெட்சுமி (52). மகன்கள் சங்கரன் (46), ஆறுமுகம் (40), சோமசுந்தரம் (40).
தாய் இறந்த நிலையில் தந்தையே இவர்களை வளர்த்துள்ளார். அருப்புக்கோட்டையில் குடும்ப கோயிலுக்கு சொந்தமான வீட்டில் வசித்துள்ளனர். அப்போது, பங்காளிகளுக்குள் ஏற்பட்ட சொத்துப் பிரச்னை காரணமாக கல்லூரணி என்ற ஊருக்கு வாடகை வீட்டில் குடிபெயர்ந்தனர்.
இந்நிலையில், தனலெட்சுமி, சங்கரன் ஆகியோருக்குத் திருமணமாகியது. சங்கரன் மதுரை மூன்றுமாவடி சம்பக்குளம் பகுதியில் குடியேறி பெயிண்டிங் தொழில் செய்தார். அவரது சகோதரரான ஆறுமுகமும் உடன் வசித்தார்.
காதல் திருமணம் செய்த தனலெட்சுமி கணவரைப் பிரிந்தார். 2003-இல் ஞானவடிவேலு இறந்துவிட்டார். ஆறுமுகம் பெயிண்டிங் வேலை செய்தபோது ஏற்பட்ட விபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் திருமணமாகவில்லை.
கணவரும் பிரிந்து, ஆதரித்த தந்தையும் இறந்துவிட்டதால், மதுரை வந்த தனலெட்சுமி மூன்று மாவடிப் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி முறுக்கு வியாபாரம் செய்தார். ஆனால் சொத்துப் பிரச்னை வழக்கு தொடர்பாக அருப்புக்கோட்டைக்கு அடிக்கடி சென்றதால் வியாபாரத்தைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை.
மாதாமாதம் வாடகை தராததால் வீட்டைக் காலி செய்துவிட்டனர். தனலெட்சுமியின் சகோதரர் சங்கரனுக்கும் பெயிண்டிங் தொழிலில் போதிய வருவாய் இல்லை.
அவராலும் வீட்டு வாடகையைக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார்.
அப்போது தனலெட்சுமியும் அவரது சகோதரர்களும் மூன்று மாவடி பஸ் நிலையம் அருகே உள்ள "கண்ணன் கருப்பன் ஆஞ்சநேயர் கோயில்' வளாகத்தில் தங்கியுள்ளனர்.
சங்கரனும், தனலெட்சுமியும் கிடைக்கும் கூலி வேலைக்குச் சென்று வந்தனர். அவரது சகோதரர் ஆறுமுகமும் அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்குச் சென்று வந்துள்ளார். இவர்களை யாரென்று அப்பகுதியில் உள்ளோருக்குத் தெரியவில்லை.
வெட்டவெளியில் கோயிலுக்கு அருகே விற்பனைக்கு குவிக்கப்பட்ட மணல், செங்கல் இடையேதான் தனலெட்சுமியும், அவரது சகோதரர்களும் தினமும் இரவில் உறங்குகின்றனர் என்றார்கள் அப்பகுதி மக்கள்.
இவர்களது அவல நிலை குறித்து தினமணியில் 2008 ஆகஸ்ட் 24-இல் செய்தி வெளியானது.
உடனடி தீர்வு
செய்தி வெளிவந்ததும் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெ.ஜவஹர் புதூர் பகுதியின் வட்டாட்சியரை அனுப்பி அவர்களுக்கான உதவிகளை செய்ய உத்தரவிட்டார்.
தினமணியின் சென்னை, மதுரை அலுவலகங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வ.உ.சி. கொள்ளுப் பேத்தி, பேரனுக்கு உதவிடத் தயாராக இருப்பதாக கூறினர்.
வ.உ.சி. கொள்ளுப் பேத்தி, பேரனை காங்கிரஸ் தத்தெடுக்கும் என அப்போதைய காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு அறிவித்ததுடன், நிர்வாகிகளை அனுப்பி உடனடி நிதி உதவியும் வழங்கினார்.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மதுரை மாவட்டத் தலைவர் சின்மயா சோமசுந்தரம், உடனடியாக அவர்களுக்கு மதுரை அண்ணாநகர் வண்டியூர் பகுதியில் வாடகை வீடு பிடித்துக்கொடுத்து குடியேற்றினார். தமிழகம் முழுவதும் உள்ள வ.உ.சி. பேரவையினரும், சமூக நீதிக் கட்சித் தலைவர் சண்முகமும் உதவிட முன்வந்தனர்.
செய்தியைத் தொடர்ந்து, பல நாள்கள் வ.உ.சி.கொள்ளுப் பேத்திக்கு உதவிட ஆயிரக்கணக்கானோர் முன்வந்தனர்.
ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் உதவிட முன்வந்ததால் தனலெட்சுமி, ஆறுமுகம் ஆகியோர் நெகிழ்ச்சியில் திணறிப்போனார்கள். ஆனால், அவர்கள் மாவட்ட நிர்வாகம் தந்த உதவியுடன், சிலர் உதவியை ஏற்றுக்கொண்டு மற்றவற்றை மறுத்துவிட்டனர். அவர்களுக்கு நாராயணபுரம் பகுதியில் உழவர் உணவுக் கூடத்தில் சிறு கடை அளிக்கப்பட்டது.
- வ. ஜெயபாண்டி
***
மொழிப் போர் தியாகிகளுக்கு மகுடம் சூட்டிய தினமணி!
தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது 1937-இல் தொடங்கி இன்று வரையிலும் பல்வேறு வடிவங்களில் அரங்கேறி கொண்டிருந்தாலும் 1939, 1964, 1965 ஆண்டுகள் மட்டுமே இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை இழக்கும் வகையில் நடந்த போராட்டக் களமாக மாறிப்போனது.
1937-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று சென்னை மாகாணத்தின் (தற்போதைய தமிழகத்தையும், தெற்கு ஆந்திர பகுதிகளையும் உள்ளடக்கியது) முதல்வராக ஜூலை 14-இல் பதவியேற்றார் ராஜாஜி. தேர்தல் பிரசாரத்தின்போதே ஹிந்தி பயில வேண்டியதன் தேவையை விளக்கி வந்தார். இதன்படியே பதவிக்கு வந்த ஒரு மாத காலத்திலேயே பள்ளிகளில் ஹிந்தியை கட்டாயமாக்க இருப்பதைக் கொள்கை அறிக்கையாக ஆகஸ்ட் 11-இல் வெளியிட்டார்.

அதோடு மட்டுமல்லாமல், 1938 ஜூன் முதல் 6, 7, 8ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஹிந்தியை கட்டாயப் பாடமாக்கப் போவதாக அறிவித்தார். அம்மாணவர்கள் ஹிந்தியைக் கட்டாயமாகப் பயின்று அதில் தேர்வும் எழுதி போதிய மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்புக்குப் போக முடியும். முதலில் 100 பள்ளிகளில் இந்தத் திட்டத்தை வெள்ளோட்டம் பார்க்கப்போவதாகவும் அறிவித்தார்.
இதனை எதிர்த்து முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பாவேந்தர் பாரதிதாசன், மறைமலை அடிகள் ஆகியோர் திருச்சியில் முதல் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வலுப்பெற்றது.
சென்னை மாகாணத்தின் தமிழ் பேசும் மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்தது. இந்தப் போராட்ட களத்தில் 1938 டிசம்பர் 5-இல் கைது செய்யப்பட்ட நடராசன் காவல் துறையின் சித்திரவதையால் 1939 ஜனவரி 15இல் உயிரிழந்தார்.
இதேபோல, 1939 பிப்ரவரி 11-இல் கைது செய்யப்பட்ட தாளமுத்துவும், காவல் துறையின் சித்திரவதையால் மார்ச் 13-இல் உயிரிழந்தார். இந்த இருவரே முதல் மொழிப் போர் தியாகிகளாவர்.
இதன் தொடர்ச்சியாக ஹிந்தி திணிப்புக்கு எதிராக 1964-இல் நடைபெற்ற தன்னெழுச்சிப் போராட்டத்தில் அப்போதைய திருச்சி மாவட்டத்தின், கீழப்பழுவூரைச் சேர்ந்த சின்னசாமி (27) ஜனவரி 24-ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் முன் நின்று தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
1965 பிப்ரவரி 23-இல் விஷம் குடித்த திருச்சி மாவட்டம், விராலிமலையைச் சேர்ந்த சண்முகம் பிப்ரவரி 25-இல் உயிரிழந்தார். மொழிப் போர் தியாகிகள் தாளமுத்து, நடராசனுக்குப் பிறகு, சின்னசாமியும், சண்முகமும் தியாகிகள் பட்டியலில் குறிப்பிடத் தகுந்தவர்களாயினர். சின்னசாமி, சண்முகம் ஆகிய இருவரது கல்லைறைகளும் தென்னூர் பகுதியில் உள்ளன.

விடுதலைப் போராட்டத்தைப் போன்று வீறுகொண்டு நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் திருச்சி மாவட்ட தளபதிகளாக விளங்கிய கீழப்பழுவூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகிய இருவருக்கும் தமிழக அரசு உரிய கௌரவம் அளிக்க வேண்டும் என தினமணியில் தொடர்ந்து அவ்வப்போது செய்திகள் வெளியாயின.
11.11.2006-இல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, திருச்சிக்கு வந்தபோது பிரத்யேக கட்டுரையை வெளியிட்டது தினமணி.
இதையடுத்து, திருச்சியில் நடைபெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி, பாலக்கரை மேம்பாலத்தை திறந்து அந்தப் பாலத்துக்கு மொழிப் போர் தியாகிகள் சின்னசாமி-சண்முகம் நினைவு மேம்பாலம் என பெயர் சூட்டினார். இதன்படி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் மொழிப் போர் தியாகிகள் இருவரது பெயரில் பொறிக்கப்பட்ட பொன் எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டு பாலத்தின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டது.
இதேபோல, சின்னசாமிக்கு திருச்சியில் சிலை அமைக்க வேண்டும் என தொடர்ந்து தினமணியில் செய்திகள் வெளியிட்டதால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, திருச்சியில் சின்னசாமிக்கு சிலை அமைக்கப்படும் என 2011-இல் அறிவித்தார். சாஸ்திரி சாலை சந்திப்பு பகுதியில் பீடம் அமைக்கப்பட்டு சிலை அமைப்பதில் தொய்வு ஏற்படுவதையும் தினமணி சுட்டிக் காட்டியது. இதையடுத்து கம்பரசம்பேட்டை தடுப்பணை பூங்கா வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.9 லட்சம் மதிப்பில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையை 2016 பிப்ரவரியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். இதேபோல, தென்னூர் அண்ணா நகரில் உள்ள தியாகிகள் கல்லறை மற்றும் மேம்பால கல்வெட்டு பராமரிக்கப்படாமல் இருப்பதையும் அவ்வப்போது சுட்டிக் காட்டி செய்தி வெளியிடுவதில் தினமணி இன்றளவும் முக்கிய பங்காற்றி வருகிறது.
- ஆர்.முருகன். படங்கள் - எஸ்.அருண்.
***
தியாகத்தின் சம்பளம் இதுதானா..
"வைத்தியநாதய்யரின் சிலை பராமரிப்பு குறித்த செய்தி வெளியானதும் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி, மதுரை மேயரை தொடர்புகொண்டு சிலையை முறையாக பராமரிக்க அறிவுரை வழங்கினார்.
'தியாகத்தின் சம்பளம் இதுதானா?' எனும் தலைப்பில் தினமணியின் மதுரை உள்ளிட்ட அனைத்துப் பதிப்புகளிலும் முதல் பக்கத்தில் வெளியான தியாகி ஏ.வைத்தியநாதய்யர் சிலை பராமரிப்பு குறித்த செய்தி தமிழக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மதுரையைச் சேர்ந்தவர் சுதந்திரப் போராட்டத் தியாகி ஏ.வைத்தியநாதய்யர். வழக்குரைஞரான இவர் காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரகம், கள்ளுக்கடை மறியல், சட்ட மறுப்பு இயக்கம் என பல போராட்டங்களில் தானும் பங்கேற்று, தனது குடும்பத்தினரையும் பங்கேற்கச் செய்தவர்.
உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின்போது, "புளியமர விளாரால்' அய்யரைத் தாக்கிய ஆங்கிலேய போலீஸார் அவரை சுமார் அரைகிலோ மீட்டர் தூரம் தரையில் இழுத்துச் சென்று சித்திரவதை செய்தனர். உடலெங்கும் காயத்துடன் சிறையிலும் அடைத்தனர்.

விடுதலைப் போராட்டத்துக்கான செலவுக்காகத் தனது மனைவியின் நகைகளையும், வீட்டுப் பொருள்களையும் அடகுவைத்தும், விற்றும் பணம் அளித்தவர்.
தனி நபர் சத்தியாகிரகப் போராட்டத்தில் தனது மனைவி அகிலாண்டம்மாளை ஈடுபடச் செய்தார். இதனால் அகிலாண்டம்மாள் பல மாதம் வேலூர் சிறையில் கடும்தண்டனையும் அனுபவித்தார். தனது இளைய மகன் சங்கரனையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவைத்தார். சங்கரனும் பல மாதங்கள் சிறையில் வாடினார்.
வைத்தியநாதய்யர் அலிப்புரம் சிறையில் இருந்தபோது அவரது மூத்த மகன் இறந்தார். இதனால் அவரால் மகனின் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்க முடியவில்லை. மகளின் திருமணத்தைக்கூட சிறைத் தண்டனை பரோல் காலத்திலேயே நடத்தமுடிந்தது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரை 1939 ஜூலை 8-ஆம் தேதி அழைத்துச்சென்று தமிழகத்தில் முதன்முறையாக ஆலயப் பிரவேசம் நடத்தியவர்.
வைத்தியநாதய்யர் 1955 பிப்ரவரி 23இல் உயிரிழந்தார். அவருக்கு மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே உள்ள பூங்காவில் 26.8.1975-இல் சிலை அமைக்கப்பட்டது. அப்போதைய மதுரை மேயர் முத்து தலைமையில், மாநில மேலவை துணைத் தலைவர் ம.பொ.சிவஞானம் சிலையைத் திறந்துவைத்தார்.
ஆண்டுதோறும் அவரது நினைவு நாள் பிப்ரவரி 23-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், அவரது சிலைக்கு யாரும் மாலை அணிவிக்கக்கூட முன்வரவில்லை. மேலும், அவரது சிலை போதிய பராமரிப்பின்றியும் இருந்தது.
இதுகுறித்து விரிவாக, "தியாகத்தின் சம்பளம் இதுதானா?' என்ற தலைப்பில் தினமணியில் 2010 பிப்ரவரி 24 -ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.
செய்தி ஏற்படுத்திய தாக்கம்
வைத்தியநாதய்யரின் சிலை பராமரிப்பு குறித்த செய்தி வெளியானதும் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி மதுரையில் மேயராக இருந்த கே.தேன்மொழியைத் தொடர்புகொண்டு சிலை பராமரிப்பு குறித்து கேட்டறிந்துள்ளார். மேலும், மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதையடுத்து, தியாகி வைத்தியநாதய்யர் சிலையை மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து போட்டி போட்டுக்கொண்டு சுத்தம் செய்தனர். மேலும் சிலை பீடம், சிலை ஆகியவற்றுக்கு புதிய வர்ணம் தீட்டப்பட்டது. சிலை முன்பு வாகனங்கள் நிறுத்தமுடியாத அளவுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. புதுப்பொலிவு பெற்ற சிலைக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து சென்றனர்.
தினமணி செய்தி எதிரொலியாக வைத்தியநாதய்யர் சிலை அம்மன் சந்நிதி காந்தி சிலைக் குழுத் தலைவர் மு.சிதம்பரபாரதியின் தலைமையில் பராமரிக்கப்படுவதுடன் ஆண்டுதோறும் பிறந்த நாள், நினைவு நாளில் மரியாதை செலுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல, மதுரை சிம்மக்கல் ரவுண்டானாவில் உள்ள தியாகி சத்தியமூர்த்தியின் சிலை போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி அகற்றப்பட்டது குறித்தும் தினமணியில் செய்தி வெளியிடப்பட்டதால் மீண்டும் அதே இடத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.
- வ. ஜெயபாண்டி.
***
மீட்டெடுத்த அடிக்கல்
உலகில் எந்தவொரு கவிஞனுக்கும் கிடைக்காத பெருமை தேசியக் கவி பாரதிக்கு உண்டு. ஆம். உலகில் எங்கும் இல்லாத வகையில் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகையைக் கொண்டு ஒரு கவிஞனின் நினைவாக மணி மண்டபம் நிறுவப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மட்டுமே என்பதே பாரதிக்கு கிடைத்த அந்தப் பெருமை.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் ஞாபகார்த்தமாக எட்டயபுரம் சமஸ்தான மகாராஜா நன்கொடையாக அளித்த நிலத்தில், தமிழ் பெருமக்களின் பொருளுதவி கொண்டு நிர்மாணிக்கப்பட்ட எட்டயபுரம் பாரதி மணிமண்டப கட்டுமானத்துக்கு ராஜகோபாலாச்சாரியார் (மூதறிஞர் ராஜாஜி) 1945 ஜூன் 3ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு அழகிய வடிவமைப்புடன் மணிமண்டபமும் கட்டப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் 1981ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எட்டயபுரத்தில் பாரதி நூற்றாண்டு விழா நடைபெற்றபோது மணிமண்டபத்தை அரசு கையகப்படுத்துவதாக அறிவித்தது. அன்றுமுதல் தற்போது வரை தமிழக அரசே மணிமண்டபத்தைப் பராமரித்து வருகிறது.
ஆனால், மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவின்போது மூதறிஞர் ராஜாஜியால் நாட்டப்பட்ட மணிமண்டப அடிக்கல் திடீரென மாயமானதாகவும், அந்தக் கல்வெட்டை மீண்டும் மறு நிர்மாணம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பாக, 2018 டிசம்பர் 16-ஆம் தேதி வெளியான தினமணி கலாரசிகன் பகுதியில் ராஜாஜியால் அடிக்கல் நாட்டப்பட்ட கல்வெட்டின் நிலை குறித்து படத்துடன் செய்தி வெளியாகியது. ராஜாஜி நாட்டிய மணிமண்டப அடிக்கல் கல்வெட்டு மணிமண்டப வளாகத்தில் கழிவறை அருகே கிடப்பதையும், அதை மறு நிர்மாணம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்ட தகவல் அதிர்வலையை ஏற்படுத்தியது.

உடனடியாக கல்வெட்டை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், பாரதியார் மணிமண்டபத்தில் மறு நிர்மாணம் செய்ய உள்ளதாக அறிவித்தது. ஆனால், மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் அந்தப் பணிகள் சற்று காலதாமதமாகின. இருப்பினும், 38 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூலை 24 ஆம் தேதி அந்தக் கல்வெட்டு மீண்டும் புதுப்பொலிவுடன் மறு நிர்மாணம் செய்து அமைக்கப்பட்டது.
- தி. இன்பராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...