பிக்பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சிக்காக தெலுங்கு ஸ்டார் மா தொலைக்காட்சி சார்பில் நடிகையும் தொலைக்காட்சி வர்ணனனையாளருமான காயத்ரி குப்தா என்பவர் கடந்த மாதமே அணுகப்பட்டிருக்கிறார். அவரிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொள்வதற்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் குறித்தெல்லாம் தெளிவாகப் பேசி ஒப்பந்தமும் போட்டிருக்கிறார்கள். அப்போது, தனக்கிருக்கும் ஆரோக்யக் குறைபாட்டை குறிப்பிட்டு அதற்கான சிகிச்சை மற்றும் மருந்து வசதிகள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதையும் தனது விண்ணப்பங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டு அதற்கு ஸ்டார்மா தரப்பில் ஒப்புதலும் பெற்றிருக்கிறார் காயத்ரி. காயத்ரியை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு அவரைப் பற்றிய தகவல்களையும் அவரது ஒப்புதலையும் பெறுவதற்காக ஸ்டார் மா சேனலின் பிக்பாஸ் சீஸன் 3 ஒருங்கிணைப்பாளர்களான அபிஷேக், ரவிகாந்த், ரகு உள்ளிட்ட மூவர் குழுவினர் காயத்ரியின் வீட்டுக்கே சென்று அவரைச் சந்தித்திருக்கிறார்கள். அப்படித்தான் ஸ்டார்மா நடத்தும் பிக்பாஸ் சீஸன் 3 போட்டியாளரானார் காயத்ரி குப்தா. அதற்காக 100 நாட்களுக்கு அவருடைய தேதிகள் முடக்கப்பட்டதோடு வேறு எந்த ஒரு படத்திலோ அல்லது தொலைக்காட்சி ஷோக்களிலோ பங்கு பெறக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. எல்லாம் முடிந்து போட்டி தேதி அறிவிக்கப்படவிருக்கும் நேரத்தில் காயத்ரி குப்தா, தன்னை ஒப்பந்தம் செய்த ஸ்டார்மா ஒருங்கிணைப்பாளர்கள் மூவர் மீது பாலியல் வன்முறை குற்றத்தின் கீழ் பஞ்சாரா ஹில்ஸ் காவல்நிலையத்தில் ஜூலை 14 ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.