கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

2020-ல் வெளியாகவுள்ள பிரபல நட்சத்திரங்களின் படங்கள்!

2020-ம் வருடம் வெளியாகவுள்ள பிரபல தமிழ் நடிகர்களின் படங்கள் குறித்த ஓர் அலசல்..

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:07 am

எழில்

2020-ம் வருடம் வெளியாகவுள்ள பிரபல தமிழ் நடிகர்களின் படங்கள் குறித்த ஓர் அலசல்:

ரஜினி

Story image

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. அடுத்ததாக, சிவா இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இது ரஜினியின் 168-வது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் கடந்த வாரம் தொடங்கியது. 

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்குகிறார். தலைவர் 168 என்று இப்போதைக்குக் குறிப்பிடப்படும் இப்படத்துக்கு இசை - இமான். கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி போன்றோர் நடிக்கிறார்கள்.  

கமல்

Story image

1996-ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் பெரிய வெற்றியடைந்தது. இந்நிலையில் இப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. கமல், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், வித்யுத் ஜமால், ப்ரியா பவானி சங்கர் போன்றோர் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்கள். இசை - அனிருத்.

இதற்கடுத்ததாக தலைவன் இருக்கின்றான் என்கிற படத்தை நடித்து இயக்குகிறார் கமல். இந்தப் படத்துக்கு இசை - ஏ.ஆர். ரஹ்மான்

விஜய்

Story image

பிகில் வெற்றிப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். 

தளபதி 64 என்று தற்போதைக்குக் குறிப்பிடப்படும் இந்தப் படத்துக்கு இசை - அனிருத். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. விஜய்யின் 64-வது படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா போன்றோர் நடிக்கிறார்கள். 

அஜித்

Story image

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணையும் இப்படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் முதல் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. 

சிவகார்த்திகேயன்

Story image

இந்த வருடம் நம்ம வீட்டுப் பிள்ளை, மிஸ்டர் லோக்கல், ஹீரோ என மூன்று படங்கள் வெளியாகின. அடுத்த வருடமும் மூன்று படங்கள் வெளியாகவுள்ளன. 

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் - டாக்டர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸும் கேஜேஆர் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரிக்கின்றன. 

ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வரும் அறிவியல் தொடர்பான படமும் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், பானுபிரியா, யோகி பாபு போன்றோரும் நடிக்கிறார்கள்.

இதன்பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்குவது சிவகார்த்திகேயனின் 17-வது படம். பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா இப்படத்தைத் தயாரிக்கிறது. இசை - அனிருத். 

சூர்யா

Story image

‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கராவின் அடுத்தப் படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம்.

கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி.

சூர்யாவின் 2டி நிறுவனமும் குனீத் மோங்காவின் சிக்யா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. குனீத் மோங்கா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகத் தமிழில் அறிமுகமாகிறார். ஹிந்தியில் லஞ்ச்பாக்ஸ், மாசான் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். ஏப்ரல் 8 அன்று படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ஜனவரி மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கு அடுத்ததாக தாணு தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா.

விஜய் சேதுபதி

Story image

விஜய் சேதுபதி நடித்துக் கடைசியாக வெளியான படம் - சங்கத் தமிழன். இந்த வருடம் விஜய் சேதுபதி நடிப்பில் ஏழு படங்கள் வெளிவந்தன.

எனில், 2020-ல் எத்தனை படங்கள்?

கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், தளபதி 64, க/பெ ரணசிங்கம், ஓ மை கடவுளே, யாதும் ஊரே யாவரும் கேளிர், அமீர் கானுடன் ஹிந்திப் படம் என 8 படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. எனவே இந்த வருடமும் விஜய் சேதுபதி காட்டில் மழை தான்.

விக்ரம்

Story image

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் கோப்ரா என்கிற படத்தை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து.

அடுத்த வருட ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிக்கிறார். கோப்ரா, அடுத்த வருட ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. 

இதுதவிர மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார் விக்ரம். ஆர்.எஸ். விமல் இயக்கும் மஹாவீர் கர்ணா, கெளதம் மேனன் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் ஆகிய இரு படங்களும் அடுத்த வருடம் வெளியாகவுள்ளன. 

தனுஷ்

Story image

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் - பட்டாஸ். தனுஷ், சினேகா, நவீன் சந்திரா, மெஹ்ரீன், நாசர், சதீஷ் போன்றோர் நடித்துள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு இசை விவேக் - மெர்வின். பட்டாஸ், ஜனவரி 16 அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் தனுஷ்.

பேட்ட படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். வொய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடிக்கிறார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். கேங்ஸ்டர் - த்ரில்லர் வகையில் உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ நடிக்கவுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார். பிரேவ் ஹார்ட், டிராய் போன்ற படங்களிலும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரியலில் லார்ட் கமாண்டர் ஜோர் மோர்மண்ட்டாகவும் அவர் நடித்துள்ளார்.   

கார்த்தி

Story image

 தேவ், கைதி, தம்பி என இந்த வருடம் மூன்று படங்கள் வெளியாகின.

மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் அடுத்ததாக நடித்து வருகிறார் கார்த்தி.

ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணனின் அடுத்தப் படம் - சுல்தான். கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துக் கவனம் பெற்றுள்ள நடிகை ராஷ்மிகா, இப்படத்தில்  கார்த்தியின் ஜோடியாக நடிக்கிறார். 

ஜெயம் ரவி

Story image

டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி என ஹாட்ரிக் வெற்றிகளைக் கண்ட ஜெயம் ரவியின் படங்களுக்குத் தமிழ்த் திரையுலகில் நல்ல வரவேற்பு உள்ளது. 

கோமாளி பட வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் - பூமி. 

ஜெயம் ரவி நடிப்பில் லக்‌ஷ்மண் இயக்கி வரும் படத்துக்கு பூமி எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை லக்‌ஷ்மண் இயக்கியுள்ளார். இசை - இமான். ஜெயம் ரவியின் ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்கிறார்.

அடுத்த வருடம் - பூமி, ஜன ஜன மன, பொன்னியின் செல்வன் என ஜெயம் ரவி நடிப்பில் மூன்று படங்கள் வெளிவரவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.