கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தமிழ் சினிமா 2019: நட்சத்திரங்கள் பெற்ற விருதுகள்!

இந்த வருடம் தமிழ் சினிமா பெற்ற விருதுகள்...

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:07 am

எழில்

இந்த வருடம் தமிழ் சினிமா கலைஞர்களும் தமிழ்ப் படங்களும் பெற்ற விருதுகள்:

தேசிய விருது

Story image

இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.

கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படம் சிறந்த தெலுங்குப் படம் என்கிற தேசிய விருதைப் பெற்றது. மேலும் அதே படத்துக்காக சிறந்த நடிகை என்கிற தேசிய விருதையும் பெற்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். 

சிறந்த தமிழ் படத்துக்கான விருதை பாரம் திரைப்படம் பெற்றது. தமிழில் விருது பெற்ற ஒரேயொரு திரைப்படம் இதுவாகும். இப்படத்தை பிரியா கிருஷ்ணசாமி இயக்கியுள்ளார். 

இது தொடர்பாக இப்படத்தின் இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி கூறியதாவது: தமிழ்நாட்டின் சில இடங்களில் நீண்ட நாள்களாக நோய்வாய்ப்பட்டு இருக்கும் முதியவர்களை கருணைக் கொலை செய்யும் பழக்கம் உள்ளது. இதை "தலைக்கூத்தல்' என்பார்கள். இந்த 'தலைக்கூத்தலை'  மையப்படுத்தி இந்தப் படத்தை எடுத்தேன். தேசிய விருதால் மிகப் பெரிய கௌரவம் கிடைத்துள்ளது. இந்தப் படத்தை, தமிழ் இயக்குநர் வெற்றிமாறன்  மிகவிரைவில் வெளியிடவுள்ளார் என்றார் அவர். 

சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருதை கே.ஜி.எஃப். படத்துக்காக அன்புமணி, அறிவுமணி (அன்பறிவ்) ஆகியோர் பெற்றனர். இவர்கள், ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரட்டையர்களாவர். தமிழ் படங்கள் தேசிய விருது பெறுவது குறைந்துள்ளது கவலையளிப்பதாகவும், தேசிய விருதுகளை இலக்கு வைத்து தமிழ் திரையுலகம் இயங்க வேண்டும் என்று அன்புமணி, அறிவுமணி இருவரும்  தெரிவித்துள்ளனர்.

"ஜிடி நாயுடு த எடிசன் ஆஃப் இந்தியா' என்ற ஆவணப்படத்துக்கு, சிறந்த அறிவியல் தொழில்நுட்ப ஆவணப்படத்துக்கான விருது கிடைத்துள்ளது. கோயம்புத்தூரைச் சேர்ந்த விஞ்ஞானி ஜிடி நாயுடுவின் வாழ்க்கை குறித்த இந்த ஆவணப்படத்தை, ரஞ்சித்குமார் என்ற தமிழர் இயக்கியிருந்தார். மத்திய அரசின் மும்பை திரைப்படப்பிரிவில் பணிபுரியும் அவர் தமிழ்நாட்டின் திருக்கோயிலூரைச் சேர்ந்தவர். 

சிறந்த சூழலியல் படத்துக்கான விருதை சுப்பையா நல்லமுத்து பெற்றுள்ளார்.  இது தொடர்பாக அவர் கூறுகையில், "மச்சிலி என்ற புலியை  அதன் 12 வயதில் இருந்து 17 வயது வரை சுமார் 6 ஆண்டுகள் பின்தொடர்ந்து இந்தப் படத்தை எடுத்தேன். இந்தப் புலியின் மரபணுக்கள் மூலம் இந்தியாவில் 50 புலிக்குட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படியான சூழலியல் படங்களால் சூழல் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படும் என்றார் அவர்.

ரஜினிக்கு விருது

Story image

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சா்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-ஆவது சா்வதேச திரைப்பட விழா கோவாவில் 9 நாள்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், தகவல் ஒலிபரப்புத் துறைகளின் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ரஜினி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் கோவா திரைப்பட விழாவைத் தொடங்கிவைத்தார்கள்.  

சா்வதேசத் திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்களிப்பு செய்த திரைப்பட கலைஞா்களை கெளரவிக்க மத்திய அரசு முடிவு செய்தது. 50-ஆவது ஆண்டு சா்வதேச திரைப்பட விழாவின் கெளரவ விருதை நடிகா் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக அறிவித்தது மத்திய அரசு. ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ என்ற விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வழங்கினார். விருது வழங்குவதற்கு முன்பு ரஜினி குறித்த குறும்படம் ஒன்று விழா அரங்கில் திரையிடப்பட்டது.

இந்த விழாவில் பேசிய ரஜினி, இந்த விருதை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார். தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ரசிகர்களுக்கு இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன் என்றும் கூறினார். பிறகு, என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என்று கடைசியாக தமிழில் பேசி தனது உரையை முடித்துக்கொண்டார்.

விருது பெற்ற பரியேறும் பெருமாள்

Story image

பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது.

அந்த மாநில அரசின் செய்தி விளம்பரத் துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம், அலையன்ஸ் பிரான்சிஸ் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய இந்திய திரைப்பட விழாவின் தொடக்க விழாவில், சிறந்த பிராந்திய மொழித் திரைப்படமாக "பரியேறும் பெருமாள்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு, சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது.

கலைமாமணி விருது

Story image

கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கலைமாமணி விருது ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது.  கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் கலைமாமணி விருது பெறுவோரின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. 

திரைப்படம்,  இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கான கலைமாமணி விருதுகள் ஆகஸ்ட் மாதம் அளிக்கப்பட்டன. 3 சவரன் எடையுள்ள பதக்கம், சான்றிதழ் அடங்கிய இந்த விருதுடன், பாரதி, பாலசரஸ்வதி, எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோர் பெயரிலான விருதுகளும் அளிக்கப்பட்டன. 200 பேருக்கு கலைமாமணி விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார். 

கலைமாமணி விருதுகள் - ஆண்டு வாரியாக விருது பெற்ற திரைக்கலைஞர்களின் விவரம்:

2011-ஆம் ஆண்டு: ஆர்.ராஜசேகர் (நடிகர்), பி.ராஜீவ் என்கிற பி.ராஜசேகர் ( நடிகர்), குட்டி பத்மினி ( நடிகை), பி.பாண்டு (நகைச்சுவை நடிகர்),  புலியூர் எஸ்.சரோஜா ( நடன இயக்குநர்),  பி.எஸ்.சசிரேகா (பின்னணிப் பாடகி), பி.காசி (திரைப்பட உடை அலங்காரம்).
2012-ஆம் ஆண்டு: டி.ராஜஸ்ரீ ( நடிகை),  பி.ஆர்.வரலட்சுமி ( நடிகை), எஸ்.உலகநாதன் (கானா பாடல் கலைஞர்),  சித்ரா லட்சுமணன் (திரைப்பட இயக்குநர்), பாபு என்கிற என்.வி. அனந்தகிருஷ்ணன் ( ஒளிப்பதிவாளர்)
2013-ஆம் ஆண்டு: ஆர்.கிருஷ்ணராஜ் (பின்னணிப் பாடகர்), பிரசன்னா (நடிகர்), நளினி ( நடிகை), காஞ்சனா தேவி ( நடிகை), சாரதா ( நடிகை), ஆர்.பாண்டியராஜன் (நடிகர்), டி.பி.கஜேந்திரன் (நடிகர்), ஜூடோ கே.கே.ரத்னம் (சண்டைப் பயிற்சியாளர்), வேல்முருகன் (நாட்டுப்புற பாடல் கலைஞர்), பரவை முனியம்மா (நாட்டுப்புற பாடகி)
2014-ஆம் ஆண்டு: கார்த்தி (நடிகர்), சரவணன் (நடிகர்), பொன் வண்ணன் (நடிகர்), சுரேஷ் கிருஷ்ணா (இயக்குநர்), மாலதி (பின்னணிப் பாடகி), என்.ஏ.தாரா மாஸ்டர் (நடன இயக்குநர்), பிலிம் நியூஸ் ஆனந்தன் (மூத்த பத்திரிகையாளர்)
2015-ஆம் ஆண்டு: பிரபு தேவா (திரைப்பட நடிகர்), ஏ.என்.பவித்ரன் (திரைப்பட இயக்குநர்), விஜய் ஆண்டனி (இசையமைப்பாளர்), யுகபாரதி (பாடலாசிரியர்), ஆர்.ரத்தினவேலு (ஒளிப்பதிவாளர்), கானா பாலா (பாடகர்) 
2016-ஆம் ஆண்டு: ஸ்ரீலேகா ராஜேந்திரன் (சின்னத்திரை), சசிகுமார் (நடிகர்), எம்.எஸ்.பாஸ்கர் (நடிகர்), தம்பி ராமையா (நடிகர்), எம்.சூரி (நடிகர்) 
2017-ஆம் ஆண்டு: விஜய் சேதுபதி (நடிகர்), பிரியா மணி (நடிகை), சிங்கமுத்து (நடிகர்), ஜி.ஹரி (இயக்குநர்), யுவன் சங்கர் ராஜா (இசையமைப்பாளர்), கலைஞானம் (தயாரிப்பாளர்)
2018-ஆம் ஆண்டு: ஸ்ரீகாந்த் (நடிகர்), சந்தானம் (நகைச்சுவை நடிகர்), ஏ.எம்.ரத்னம் (தயாரிப்பாளர்), ரவிவர்மன் (ஒளிப்பதிவாளர்), உன்னிமேனன் (பின்னணிப் பாடகர்)

தினமணி விருது

Story image

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தினமணி 'மகளிர் மணி' சார்பில் நட்சத்திர சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் மார்ச் 8 அன்று நடைபெற்றது. 

தினமணியின் இணைப்பான 'மகளிர் மணி' சார்பில் உலக மகளிர் தினத்தன்று சாதனை மகளிருக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது. தமிழ்த் திரையுலகில் 1950 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில் தங்களின் நடிப்பாற்றலால் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த நடிகைகள் ஒன்பது பேருக்கு "சாதனை நட்சத்திரங்கள்' விருது வழங்குகிறது தினமணி. நடிகைகள் வைஜயந்தி மாலா, சௌகார் ஜானகி,  ஜமுனா, சாரதா, காஞ்சனா, ராஜஸ்ரீ, கே.ஆர்.விஜயா, வெண்ணிற ஆடை நிர்மலா,  சச்சு ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. 

ஃபிலிம்ஃபேர் விருது

Story image

66-வது ஃபிலிம்ஃபேர் விருதுக்குத் தேர்வான தமிழ்க் கலைஞர்கள்: 

சிறந்த படம் - பரியேறும் பெருமாள்
சிறந்த இயக்குநர் - ராம் குமார் (ராட்சசன்)
புகழ்பெற்ற சிறந்த நடிகர் - தனுஷ் (வட சென்னை), விஜய் சேதுபதி (96)
விமரிசகர்களின் சிறந்த நடிகர் - அரவிந்த் சாமி (செக்கச் சிவந்த வானம்)
புகழ்பெற்ற சிறந்த நடிகை - த்ரிஷா (96)
விமரிசகர்களின் சிறந்த நடிகை - ஐஸ்வர்யா ராஜேஷ் (கனா)
சிறந்த குணச்சித்திர நடிகர் - சத்யராஜ் (கனா)
சிறந்த குணச்சித்திர நடிகை - சரண்யா பொன்வண்ணன் (கோலமாவு கோகிலா)
சிறந்த பாடல்கள் - 96 (கோவிந்த் வசந்தா)
சிறந்த பாடகர் - சித் ஸ்ரீராம் (ஹே பெண்ணே, ப்யார் பிரேமா காதல்)
சிறந்த பாடகி - சின்மயி (காதலே காதலே, 96)
சிறந்த பாடலாசிரியர் - கார்த்திக் நேத்தா (காதலே காதலே, 96)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.