மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

தி வைல்ட் பியர் ட்ரீ (The Wild Pear Tree)  உருவான கதை: நூரி பெல்கெ சைலான்

ஜூலை 2015. அசோஸில் இருக்கின்ற எங்களது கோடைகால இல்லத்தைச் சுற்றி நாங்கள் லெகுவான மனநிலையுடன் உலவிக் கொண்டிருந்தோம்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:56 pm

ராம் முரளி

ஜூலை 2015. அசோஸில் இருக்கின்ற எங்களது கோடைகால இல்லத்தைச் சுற்றி நாங்கள் லெகுவான மனநிலையுடன் உலவிக் கொண்டிருந்தோம். அது விடுமுறை என்பதால், கடற்கரையில் அதிக எண்ணிக்கையிலான மனிதர்கள் குவிந்திருந்தார்கள். அங்கிருந்து சிலமணி நேர பயண தூரத்தில், அடர்ந்த பைன் மரங்கள் சூழ்ந்திருக்கும் சிறிய கிராமமொன்று இருக்கிறது. எனது சிறு வயதின் மிகச் சிறந்த நினைவுகளை அந்த கிராமம் தனக்குள் கொண்டிருக்கிறது. அந்த கிராமம் தனது அழகையெல்லாம் இழந்து, ஒரு பழைய பொலிவற்ற சிற்றூராக நிலைத்திருக்கிறது என்றாலும், அதன் காற்று இன்னமும் தூய்மை இழக்காதிருந்தது. நாங்கள் அந்த கிராமத்திற்கு செல்லலாம் என முடிவு செய்தோம்.

சிறுவர்கள் மற்றும் வேறு பல பயணிகளுடன் நாங்கள் அந்த கிராமத்திற்கு அழைத்துச் செல்லும் சாலையில் இறங்கி நடக்கத் துவங்கினோம். வேறு சில கிராமங்களும் எங்களது பயணத்தில் எதிர்பட்டன. அப்போது எதிர்பாராமல் எனது உறவினர் ஒருவரை சந்திக்கும் சந்தர்ப்பம் உண்டானது.

எனது உறவினரை மணந்திருந்த அவர் அவ்வூரில் இருந்த ஆரம்ப பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணி செய்து கொண்டிருந்தார். அவரை அவ்வூர் மக்கள், ‘மாஸ்டர்’ என்றே அழைத்து வந்தார்கள். அவர் உரையாடல்களுக்கு மிகுந்த சுவாரஸ்யமானவராகவும், தனக்கென  தனித்த பார்வையையும் கருத்துக்களையும் உருவாக்கிக் கொண்டுள்ளவராகவும், எனக்கு விருப்பமான வகையில் உரையாடக் கூடியவராகவும் இருந்தார். நாங்கள் அவரை நெருங்கி ஓடிச் சென்றோம். அப்போதுதான் ஆசிரியர் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றிருந்த அந்த மனிதர், தான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் குடியேறியிருந்தார். தனது தந்தைக்கு உரிமையான வறண்ட நிலத்தில் விவசாயம் செய்து பயிர்களை வளர்க்கும் அவரது நீண்டகால திட்டமிடல்களை அப்போதுதான் துவங்கியிருந்தார். அவருக்கும், அவரது தந்தையான முதியவருக்கும் இடையிலான உறவு சுமூகமாக இல்லை என்பதை அந்த கிராமத்தில் அனைவரும் அறிந்து வைத்திருந்தனர். எனக்கு இது குறித்து வியப்பு உண்டாக்கியிருப்பதைப் போன்ற பாவனையை நான் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில், அந்த ஆசிரியர் தனது தந்தையின் பொறுப்பற்ற அதே சமயத்தில் சகித்துக் கொள்ளவியலாத குணத்தைப் பற்றி தொடர்ந்து என்னிடம் கோபத்துடன் விவரித்துக் கொண்டிருந்தார்: ‘எனக்கு ஒரு மூத்த சகோதரன் இருக்கின்றான். உலகளவில் அதீத தனிமை உணர்வு கொண்டவர்களுக்கான போட்டியொன்றை நிகழ்த்தினால், அதில் அவன்தான் வெற்றி பெறுவான். எனது தந்தை அவனையே வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்’.

அன்று பைரம் (விடுமுறை தினம்) என்பதால், உறவினரின் வீட்டில் ஏராளமான மனிதர்கள் குவிந்திருந்தார்கள். மதிய உணவுக்கு பின்பாக, நானும் ஆசிரியரும் அவரது வீட்டு தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மர நாற்காலிகளில் சாய்ந்தமர்ந்தோம். அவரது உரையாடல்களில் மிகத் தீவிரமான குற்றவுணர்வு மேலிட்டதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் தெரிவித்த விவரங்களினால் அல்லது அவரது முகத்தில் உண்டான நெளிவு சுழிவுகளால், அல்லது தனது கடின பணிச் சூழல் குறித்து நகைத்த படியே கூறியதால், எனக்கு அப்படியொரு எண்ணம் உருவாகியது. அவர் தனது பத்து பதினைந்து ஆடுகளுடன் மிகச் சிறிய உலகமொன்றை உருவாக்கிக் கொண்டு மகிழ்வுடன் இருந்தார். அந்த ஆட்டு கொட்டகையை நுணுக்கமான வகையில் அலங்காரமும் செய்திருந்தார். எந்தவொரு மனிதருக்கும் அவர் மீது பரிதாபமும், கோபமும் பெருக்கெடுக்க செய்யும் வகையிலான செயல்பாடுகள் அவை.

Story image

சூரியன் தாழ்ந்ததற்கு பிறகு, எங்களை அவர் புதிதாக பிறந்திருக்கும் ஆட்டுக் குட்டிகளை காண தனது நிலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்பினார். நானும், எனது மனைவியும் (ஈப்ரூ), எங்களது குழந்தைகள உடன் அழைத்துச் சென்றோம். அதோடு, வேறு சில உறவினர்களும் எங்களுடன் வருகை புரிந்தார்கள். அதுவொரு அற்புதமான நாளாக எங்களுக்கு அமைந்தது. ஆடுகளும், ஆட்டுக்குட்டிகளும், நீர் தேக்கங்களும், ஓக் மரங்களும், பருத்தி மர இலைகளின் தீராத மென் இரைச்சலும் எங்களது பயணத்தை அழகு மிகுந்ததாக மாற்றின. குழந்தைகளுக்கும் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகியிருந்தது. அவர்கள் ஆட்டுக் குட்டிகளை கைகளில் ஏந்தி, அதன் ரோமங்களை பரவசத்துடன் தொட்டு வருடினார்கள். பேரிக்காயையும், பிளாக்பெரி பழங்களையும் அவர்கள் விருப்பத்துடன் உண்டு மகிழ்ந்தனர். அவர்களது வாழ்க்கையிலேயே முதல் முறையாக அப்போதுதான் ஆமைகளையும், கொழுத்த கழுதைகளையும் பார்த்தார்கள். ஆனால், இவை அனைத்தையும் விடவும் எனது கவனத்தை வேறொன்று கவர்ந்திருந்தது. எனது உறவினர் ஆட்டுக்குட்டிகளின் அழகையும், நிலவெளியின் வண்ணத்தையும் அதன் வாசனையையும், அவைகளுடன் வாழ வேண்டுமென்கின்ற அலாதி நேசத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்த போது, அவ்வூர் மக்கள் முகச்சுளிப்புடன் தங்களை அவர் அவமானப்படுத்துகிறார் எனும் விதமாக ஏளனத்துடன் அவரைப் பார்த்தார்கள். அது ஒரு வகையில் மெளனமாக தங்களது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதைப் போல இருந்தது. ஆனால், அந்த ஆசிரியர் அவர்களது எரிச்சலூட்டும் செயல்களை பொருட்படுத்தவேயில்லை. அதீத உற்சாகத்துடன் தொடர்ந்து அவர் தனது வாழும் சூழல் குறித்த விவரணைகளை அடுக்கியபடியே இருந்தார். சமயங்களில் தனது சொற்களுக்கு தானே சிரித்துக் கொள்ளவும் செய்தார். ஆட்டுக்குட்டிகளின் மிருதுவான ரோம சுருள்களை பற்றியும், புல்லின் நிறத்தைப் பற்றியும், அதோடு நிலத்தின் மணத்தைப் பற்றியும் தொடர்ந்து அவர் விவரித்தபடியே இருந்தார்.  

அசோஸில் இருந்து திரும்புகையில், நானும் ஈப்ரூவும் ஆசிரியரை அவ்வூர் மக்கள் நடத்திய விதம் பற்றி தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். இதே வகையிலான குணவியல்புகளை எனது தந்தையிடத்திலும் நான் உணர்ந்திருப்பதால், கிராமத்தினர் இவ்வகையிலான பண்புகளை அர்த்தமற்ற, குழந்தைத்தனம் நிரம்பிய, பொருட்பாடு செய்ய அவசியமில்லாத வெறுமையான செயல்கள் என வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

அந்த நிலத்தில் மரபுகளுக்கோ, தங்களது பாரம்பரிய கலாச்சார விழுமியங்களுக்கோ துளியும் மரியாதை இல்லாதிருந்தது. தங்களை முற்றிலும் உள்ளார்ந்த அதே சமயத்தில் சமூக கண்னோட்டத்தில் ஏற்றுக் கொள்ளவியலாத வகையில் வித்தியாசமானவர்களாக உணரும் இத்தகைய மனிதர்கள், அவர்களது தார்மீக வரம்புகளை இயல்பாகவே கடந்து விடுகிறார்கள். அத்தகைய மனிதர்கள் தனித்து விடப்பட்ட தங்களது இருத்தலில் நிலவுகின்ற முரண்பாடுகளை சகித்து கொள்ள முடியாமல் போராடுகிறார்கள். இவர்கள் அத்தகைய முரண்பாடுகளை படைப்பூக்கத்துடன் கையாளுவதற்கான எல்லைக்கும், அதனை நிராகரிக்க முடியாத யதார்த்த நிலைக்கும் இடையில் ஊசலாடுகிறார்கள். அவர்கள் தங்களது முற்றிலும் வித்தியாசமானதொரு நிலையை ஒரு குற்றத்தைப் போலவும், ரகசியமாக காக்கப்பட வேண்டிய பாவச் செயலைப் போலவும்,  நோய்மையைப் போலவும், வாழ்நாள் முழுமைக்கும் சுமந்து திரிய வேண்டிய பெரும் பாரத்தைப் போலவும் கருத துவங்கிவிடுகிறார்கள். ஆனால் அவர்களது அக உணர்வு அவர்களது இத்தகைய எண்ணங்களின் மீது அழுத்தமான ஆதிக்கத்தை செலுத்தி, அபத்தமான வேடதாரிகளைப் போன்று உணரும் அவர்களது விநோதமான கருத்துருவாக்கங்களை விரைவாக கலைத்து விடவும் செய்கிறது.

எங்களை சூழ்ந்திருந்த அவ்வூர் சார்ந்த கசப்பான உணர்வலைகள் பற்றி நகர் திரும்புகையில் நானும், ஈப்ரூவும் தொடர்ந்து உரையாடி வந்ததில் எங்களிடம் ஒரு திரைப்படத்துக்கு தேவையான கட்டுமானம் உருவாகியிருப்பதாக எண்ணம் தோன்றலாயிற்று. அந்த தருணத்தில்தான், ஆசிரியரின் மகனின் நினைவு எங்களுக்கு வந்தது. அகின் எனும் பெயருடைய அந்த இளைஞனும் அப்போது ஆசிரியர் பயிற்சியை முடிந்திருந்தான். எனினும், பணியில் சேர இயலாத சூழலில், கனேகாலில் இருந்த ஒரு செய்தித்தாள் நிறுவமொன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தான். நானும் ஈப்ரூவும் கிராமத்தில் எதிர்கொண்ட சம்பவங்கள் தொடர்பாக அவனை சந்தித்து விவாதித்தால் என்னவென்று ஆலோசனை செய்தோம்.

ஒரு வாரத்திற்கு பின்னர், ஜூலையில் அகினை நான் தொடர்பு கொண்டு அசோஸில் இருந்து ஒருமணி நேரப் பயண தூரத்தில் இருக்கும் கனேகாலில் சந்தித்தேன். கடற்கரையை ஒட்டியிருந்த மிகப் பெரிய தேயிலை தோட்டமொன்றின் நிழலில் அமர்ந்து நாங்கள் மணிக்கணக்காக உரையாடினோம். அகினிடம் நான் எங்கள் இருவரது தந்தைக்கும் இடையில் இருக்கின்ற ஒற்றுமைகள் குறித்தும், அவர்களது பெரு மதிப்புமிக்க ஆனால் துயரார்ந்த இறுதி தினங்களை பற்றியும் விவரித்தேன். அதோடு, நாங்கள் இப்போது வேறொரு திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறோம் என்றும், பிற்பாடு இந்த தலைப்பின் கீழ் ஒரு திரைக்கதை எழுதலாம் என்று உத்தேசித்திருக்கிறோம் என்றும் தெரிவித்தேன். காலத்தை விரயமாக்க வேண்டாம் என்பதால், நான் எனது புதிய திரைப்படத்தில் வேலை செய்திடும் போது, அகினை இது  தொடர்பாக நிறைய தகவல்களை சேகரிக்கும்படியும், முடிந்தால் அவனது சிறுவயது நினைவுகளையும் அதில் அவனது தந்தையின் பங்களிப்பு குறித்தும் எழுதும்படியும் கோரியிருந்தேன்.

Story image

இதனை அகினிடம் தெரிவிக்கையில், அவன் முன்னதாகவே ஒன்றிரண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறான் என்கின்ற தகவலை நான் அறிந்து வைத்திருந்தேன். அவனது தாயார் சில வருடங்களுக்கு முன்பு அவர்களது கிராமத்திற்கு சென்றிருந்த என்னிடத்தில் அகினின் ஒரு புத்தகப் பிரதியை கொடுத்திருந்தார். ஆனால், நேர்மையாக சொல்ல வேண்டுமானால், அதனை நான் வாசித்திருக்கவில்லை. அகினையும் முன்னதாக கிராமிய விழாக்களிலும், இஸ்தான்புல்லிலும் சந்தித்திருக்கிறேன் என்றாலும் அவனுடன் முன்னதாக உரையாடியதே இல்லை. அவன் ஒருவகையில் உள்ளொடுங்கிய தனிமையை விரும்புகின்ற இளைஞன். அவனது தந்தையுடன் நான் உரையாடிய எந்தவொரு பொழுதிலும், அவர் அந்த உரையாடலில் பங்கு கொண்டதில்லை. ஆனால், தேயிலை தோட்டத்தில் எங்களது சந்திப்பு நிகழ்ந்தபொழுது அவனது அறிவாற்றலையும், பல்வேறு தகவல்களை அவர் சேகரம் செய்திருப்பது குறித்தும் எனக்கு மிகப் பெரிய ஆச்சர்யம் உருவாகியது. அவன் ஏராளமான புத்தகங்களை வாசித்திருந்தான். நான் குறிப்பிட்ட அனைத்து புத்தகங்களும் அவனுக்கு அறிமுகமாகியிருந்தது. ஒரு முப்பது வயது இளைஞனிடம் இயல்பாக எதிர்பார்க்கக் கூடிய அளவை கடந்தும் அவனது வாசிப்பு விரிந்திருந்தது. எவருக்கும் ஈடுபாடு இல்லாத இலக்கிய உலகத்தில் தன்னையொரு தனியனாக உருவகப்படுத்தியபடியே அவன் வாழ்ந்துக் கொண்டிருந்தான். அகினின் தந்தை உலகத்தை பற்றிய எங்களது பதற்றமிக்க ஆர்வம் இப்போது ஒரு ஆரம்ப புள்ளியை எட்டியிருந்தது. இதுதான் திரைப்படம் உருவாக்கும் எங்களது நோக்கத்தை அடுத்தடுத்த நிலைகளுக்கு விரிவுப்படுத்திய துவக்க நிலை.

சில மாதங்கள் கடந்தது. நாங்கள் இஸ்தான்புல்லுக்கு திரும்பியிருந்தோம். ஈப்ரூவும் நானும் அப்போதும் வேறொரு திரைக்கதையில் தீவிரமாக ஈடுபாடு செலுத்திக் கொண்டிருந்தோம். அந்த காலவெளியில் அகின் எங்களை எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவில்லை என்பதால், அது குறித்த சிந்தனையே எங்களுக்கு முற்றிலுமாக மறைந்திருந்தது. ஆனால், அக்டோபர் துவக்கத்தில் அகின் எங்களது மெயிலுக்கு 80 பக்க அளவிலான குறுநாவலை அனுப்பியிருந்தான். அந்த குறுநாவலின் எழுத்து மிகச் சிறப்பானதாகவும் சீரான கோர்வையில் எழுதப்பட்டிருந்ததாலும் உடனடியாக நேரத்தை வீணடிக்காமல் அதனை முழுமையாக வாசித்து முடித்தேன். அகினின் சொற் பிரயோகம் அற்புதமாக இருந்தது. அவனுக்கும் அவனது தந்தைக்கும் இடையிலான உறவு நெருக்கத்தை மையமாக கொண்டிருந்த அந்த குறுநாவல் அகினின் வாழ்வின் பல்வேறு பகுதிக்குள்ளும் ஊடுருவியிருந்தது. பல தருணங்கள் மிகுந்த உணர்வெழுச்சியை தூண்டும் வகையிலும், மனதுக்கு நெருக்கமாகவும் எழுதப்பட்டிருந்ததால், உடனடியாக அது நாள்வரையிலும் நாங்கள் வேலை செய்து கொண்டிருந்த திரைக்கதையை விடுத்து, அகின் அனுப்பிய குறுநாவலை படமாக்கும் சாத்தியங்களுக்குள் நகரலானோம்.

ஈப்ரூவுக்கும் அந்த குறுநாவல் அதிகளவில் பிடித்துப் போயிருந்தது. மிக நேர்மையாக எழுதப்பட்டிருந்த மன்னிப்பு கோரும் வகையிலான தொனியில் எழுதப்பட்ட குறுநாவல் அது. கதைச் சொல்லி எந்தவொரு தருணத்திலும் தன்னை மேன்மையுற்றவனாக வலிந்து முன்னிருத்திக் கொள்ளாமல், தனது அத்தனை சிறுமைத்தனங்களையும், பலவீனத்தையும் மிக வெளிப்படையாக விவரித்திருந்தது என்னை பெரிதும் கவர்ந்துவிட்டது. அகினின் இரக்கமற்ற சுய வெளிப்பாட்டு செயலால் எவ்வித ஜோடனை பேச்சுகளிலும் எங்களது நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக மிக பக்குவமான உரையாடல்களை துவங்கினோம். முந்தைய தருணத்தில் கனேகாலில் சந்தித்து நாங்கள் உரையாடிய போது, பெரிதும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத அகின், நான் ஏன் இந்த திரைப்படத்தை இயக்க விரும்புகின்றேன் என்கின்ற நோக்கத்தை முழுமையாக உள்வாங்கி இருக்கிறான் என்பது அவனது எழுத்தின் வழியாக எனக்கு புரிந்தது. இன்னும் உண்மையாக சொல்ல வேண்டுமானால், தனது அதீத துணிச்சலால், எனது அணுகுமுறைக்கு சவால் விடுத்திருப்பதோடு, இக்களத்தில் என்னை விட ஒரு அடி முன்னால் போய் நின்றிருந்தான்.    

திரைக்கதை எழுத்துப் பணியில் உடனிருக்க நாங்கள் அகினை இஸ்தான்புல்லுக்கு அழைத்தோம். அவனும் வருகை புரிந்திருந்தான். ஒரு மாத கால அளவில் நானும், அகினும், ஈப்ரூவும் ஒன்றாக எங்களது அலுவலகத்தில் அமர்ந்து திரைக்கதை குறித்து விவாதித்துக் கொண்டிருந்தோம். அகின் எழுத்து கட்டமைத்திருந்த உலகத்தில் இருந்து எனது திரைப்படத்துக்கு தேவையான காட்சி தொகுப்புகளை நான் உருவாக்க வேண்டியிருந்தது. அகின் தனது வாழ்க்கையை சிறு வயது நினைவுகளில் இருந்து துவங்கி நெடுங்கதையாக எழுதியிருந்தான் என்பதால், நாங்கள் அதனை குறுக்கி தற்காலத்தில் நிகழும் சம்பவங்களை மட்டும் தொகுப்பதென்று முடிவு செய்தோம். மகன் கதாப்பாத்திரத்தின் வழியாகவே அனைத்தையும் அணுகுவதென்று முடிவு செய்தோம். பிறகு, தந்தையின் கதாபாத்திரத்தை அவரது மகனுடனான உறவுநிலை சார்ந்தே உருவாக்கினோம். இருவருக்குமிடையிலான உறவில் நிலவுகின்ற முரண்களை மையப்படுத்தியே மற்ற அனைத்து முக்கிய சிக்கல்களையும் பேசிவிடுவதென்று முடிவு செய்யப்பட்டது. திரைக்கதைக்கான முதல் வரைவை நிறைவு செய்ய ஒரு மாத காலம் தேவைப்பட்டது. எனினும், அடுத்த ஒன்பது மாதங்கள் மெயில் வழியே அகினும் நாங்களும் தொடர்ந்து உரையாடுவதன் வழியே, திரைக்கதையை மேலும் மேலும் செழுமைப்படுத்தினோம். இவ்வகையில்தான், படப்பிடிப்புக்கான எழுத்து மேற்கொள்ளப்பட்டது என்றாலும், ஒருபோதும் இப்பணி நிறைவு பெறவில்லை. படப்பிடிப்பு நிகழும் காலம் முழுக்க, படத்தொகுப்புக்கும் படமாக்கப்படும் காட்சிக்கும் இடையிலான சந்தத்தை சரியாக கொண்டுவந்துவிட வேண்டுமென்று தொடர்ந்து தீவிரமாக திரைக்கதையை செறிவுப்படுத்தியபடியே இருந்தோம்.

அதே தருணத்தில், அகின் 23 வயதில் எழுதியிருந்த அவனது முதல் புத்தகத்தை வாசித்திருந்த நான், மிகப் பெரிய வியப்பில் ஆழ்ந்து போயிருந்தேன். அந்த தொகுப்பில் இருந்த பல கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக, ‘காட்டு பேரிக்கையின் தனிமை’ எனும் கதை. இந்த கதையின் தலைப்பில் இருந்துதான் எனது திரைப்படத்துக்கான தலைப்பை நான் தருவித்துக் கொண்டேன். அந்தக் கதையில் விவரிக்கப்பட்டிருந்த தந்தை கதாப்பாத்திரத்தின் இளமை கால வாழ்க்கையை நாங்கள் படமாக்கியிருந்தோம். அப்பகுதிகளை படத்தின் துவக்கத்தில் முன்னுரை போல தொகுக்கலாம் என்று கருதினேன். எனினும், படத்தொகுப்பில் அவைகளை நீக்க வேண்டிய துர்லபம் ஏற்பட்டது. அந்த புத்தகத்தில் ஏராளமான குறிப்புகள் விவரிக்கப்பட்டிருந்ததால், அதிலிருந்து எங்களது திரைப்படத்துக்கு தேவையான சிற்சில கூறுகளை பயன்படுத்திக் கொண்டோம். அவைகளில் பெரும்பகுதி படத்தின் சீரான வடிவத்துக்கு ஒத்துவராததால், படத்தொகுப்பில் நீக்கப்பட்டுவிட்டன என்றாலும், புத்தகத்தில் இருந்து நாங்கள் பயன்படுத்தியுள்ள பல கூறுகள் இன்னமும் திரைப்படத்தில் இருக்கவே செய்கிறது.

முடிவில், எங்களால் திரைக்கதை எழுத்துப் பணியை ஒரு நிலையில் நிறுத்தவே முடியாமல் வளர்ந்தபடியே இருந்தது. கிட்டதட்ட எனது முந்தைய திரைப்படமான ‘Winter Sleep’ஐ விடவும் மிக நீளமானதாக இந்த திரைப்படத்தின் திரைக்கதை வளர்ந்துக் கொண்டிருந்தது. கதையின் நெகிழ்வுத்தன்மை காரணமாக, திரைக்கதையில் எழுதப்பட்டிருந்த அனைத்தையும் படமாக்கிவிட்டு, பின்னர் படத்தொகுப்பில் திரைப்படத்துக்கான வடிவத்தை தீர்மானம் செய்யலாம் என்று முடிவு செய்தேன். அதன் காரணமாக, பல காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன என்றாலும், இன்னமும் திரைப்படத்தில் பங்கேற்காமல் விலகியிருக்கும் கதாப்பாத்திரங்கள் நிறைய இருக்கின்றன. படத்தில் நிலவியிருக்க வேண்டிய ஆரோக்கியமான தொடர்ச்சிக்காகவும், ஹார்மோனிக்காகவும் அவர்கள் தங்களையே படத்தொகுப்பு மேசையில் இழக்க வேண்டியிருந்தது. எனினும், அவர்கள் நல்ல நோக்கத்திற்காகத்தான் அத்தகைய தியாகத்தை செய்திருக்கிறார்கள் என்கின்ற நம்பிக்கை என்னிடத்தில் உறுதியாகவே இருக்கிறது.            

தமிழில்: ராம் முரளி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.