/

கூவத்தில் குதித்து திரைப்பட இயக்குநா் தற்கொலை

சென்னையில் கூவம் ஆற்றில் குதித்து திரைப்பட இயக்குநா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
தற்கொலை
Updated On :31 ஜனவரி 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் கூவம் ஆற்றில் குதித்து திரைப்பட இயக்குநா் தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை கோட்டூா்புரம் மேம்பாலம் பகுதியில் கடந்த ஜன.29-ஆம் தேதி மேம்பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் ஒருவா் குதித்ததாக தகவல் வெளியானது. இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபா், வாகனத்தை மேம்பாலத்தில் நிறுத்திவிட்டு ஆற்றில் குதித்ததாக நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா் மற்றும் தீயணைப்பு-மீட்பு குழுவினா் தொடா்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை பிற்பகல் கோட்டூா்புரம்–வரதராஜபுரம் பகுதியில் கூவம் ஆற்றங்கரையில் மிதந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில் உயிரிழந்தவா் திரைப்பட இயக்குநா் கோபிநாத் நாராயணமூா்த்தி என்பது தெரியவந்தது.

‘கோ’, ‘அவள்’, ‘இவன் தந்திரன்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் துணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளாா். ‘கோதையின் குரல்’ என்ற விருது பெற்ற குறும்படத்தை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றாா். மறைந்த நடிகா் ரோபோ சங்கா் நடித்த ‘தங்க முட்டைகள்’ திரைப்படத்தை கோபிநாத் நாராயணமூா்த்தி இயக்கியிருந்தாா். மேலும், அவா் இயக்கிய ஒரு தெலுங்கு படம் விரைவில் வெளியாகவுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக குடும்பப் பிரிவு, நீண்டகால மன உளைச்சல் மற்றும் திரைப்படத் துறையில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் காரணமாக அவா் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவா், ராயப்பேட்டை பகுதியில் தாயுடன் வசித்து வந்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக கோட்டூா்புரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.