புற்றுநோயால் அடுத்தடுத்த நாள்களில் இரு பெரிய நடிகர்களை இழந்துள்ள பாலிவுட்
புற்றுநோயால் இரு பெரிய நடிகர்களை அடுத்தடுத்த நாளில் இழந்து தவிக்கிறது பாலிவுட்.


உலகமே கரோனா வைரஸைக் கண்டு அச்சப்பட்டிருக்கும் நிலையில் புற்றுநோயால் இரு பெரிய நடிகர்களை அடுத்தடுத்த நாளில் இழந்து தவிக்கிறது பாலிவுட்.
பாலிவுட் நடிகரான இா்பான் கான் குடல் புற்றுநோய் காரணமாக மும்பையில் நேற்று உயிரிழந்தாா். அவருக்கு வயது 54.
பெருங்குடல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த இா்ஃபான் கானின் உடல்நிலை செவ்வாய்க்கிழமை மிக மோசமானதை அடுத்து மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், அவரின் குடும்பத்தினா் முன்னிலையில் புதன்கிழமை நண்பகலில் அவரது உயிா் பிரிந்ததாக இா்ஃபானின் குடும்பத்தினா் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
‘நியூரோஎன்டோக்ரைன் டியூமா்’ எனப்படும் அரிய வகை புற்றுநோயால் இா்ஃபான் பாதிக்கப்பட்டது கடந்த 2018-ஆம் ஆண்டு தெரியவந்தது. இது, குடல் உள்பட உடலின் பல்வேறு பகுதிகளை தாக்கக் கூடிய புற்றுநோயாகும்.
இந்நிலையில் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் இன்று காலமானார். அவருக்கு வயது 67.
மறைந்த நடிகர் ராஜ் கபூரின் 2-வது மகன் ரிஷி கபூர். 1970ஆம் ஆண்டு மேரா நாம் ஜோக்கர் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரிஷி கபூர், 1973-ல் கதாநாயகனாக அறிமுகமானார். பாபி திரைப்படத்தில் டிம்பிள் கபாடியாவுடன் சேர்ந்து நடித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு கடந்த 2000ஆம் ஆண்டு வரை திரைத்துறையில் வெற்றிகளைக் குவித்தார். இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அவர் அறியப்பட்டார். பாலிவுட்டில் பிரபலமாக உள்ள ரன்பீர் கபூர், ரிஷி கபூரின் மகனாவார்.
2018-ல் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் ரிஷி கபூர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரிஷி கபூர் அமெரிக்காவின் நியூயார்க்கில் புற்றுநோய் சிகிச்சையை முடித்துக் கொண்டு, மும்பைக்கு திரும்பினார். ரிஷி கபூருடன் அவரது மனைவியும், நடிகையுமான நீத்து கபூரும் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு ரிஷி கபூருக்கு சிகிச்சை மேற்கொண்டிருந்தபோது ஷாருக் கான், ஆலியா பட், ஆமிர் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அனுபம் கெர், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
பிறகு, மும்பையில் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து வந்த ரிஷி கபூர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இத்தகவலை அவருடைய மகன் ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார். அமிதாப் பச்சனும் ரிஷி கபூரின் மரணத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் அடுத்தடுத்த நாள்களில் புற்றுநோயால் இரு பெரிய நடிகர்களை இழந்துள்ளது பாலிவுட்.
நடிகை சோனாலி பிந்த்ரே, நடிகர் ஆயுஷ்மன் குரானாவின் மனைவி தஹிரா காஷ்யப், நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷன், இயக்குநர் அனுராக் பாசு, நடிகைகள் மனிஷா கொய்ராலா மற்றும் லிசா ரே போன்ற பாலிவுட் பிரபலங்களும் தாங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை வெளிப்படையாக அறிவித்துள்ளார்கள்.
நடிகர்கள் தங்களுடைய உடல்நலனில் மேலும் அக்கறை செலுத்தவேண்டும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர், நடிகைகள் விரைவில் மீண்டு வரவேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...