தமிழில் நடிக்கத் தெரிந்த நடிகைகளை பட்டியலிட்டால் அதில் ஈஸ்வரி ராவுக்கு நிச்சயம் இடம் தரலாம். நடித்தது வெகு சில திரைப்படங்களே என்றாலும் தன் வரையில் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை திருப்திகரமாகச் செய்து முடிக்கக் கூடிய நடிகைகள் லிஸ்டில் இவருண்டு. தமிழில் நாளைய தீர்ப்பில் விஜயின் இரண்டாம் நாயகியாக அறிமுகமாகியிருந்தாலும் இவருக்கு ஓரளவுக்கு பெயர் ஈட்டித் தந்த திரைப்படமென்றால் அது பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த ராமன் அப்துல்லா. ஈஸ்வரி ராவின் நடிப்புத் திறனை சற்றேனும் பயன்படுத்திய திரைப்படம் என்றால் அது இது ஒன்று மட்டுமே. அழகும், இளமையும், திறமையும் இருந்தும் ஏனோ 90 களின் இயக்குனர்கள் ஈஸ்வரியின் நடிப்பைச் சரியாகப் பொருட்படுத்தவே இல்லை. சிம்மராசி, குருபார்வை, அப்பு, குட்டி, தவசி, சரவணா என்று துண்டு, துக்கடா கேரக்டர்களிலேயே வந்து போனார். நடுவில் விரும்புகிறேன் என்றொரு திரைப்படத்தில் ஓரளவுக்கு நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள வேடமொன்றில் தோன்றி தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை வென்றார். 90 களில் இவருடன் இணைந்து அறிமுகமானவர்களில் கீர்த்தனா, ஸ்வாதி, யுவராணி, மகேஸ்வரி எனப் பலருக்கும் கூட இவரைப் போலவே நடிப்புத் திறனை வெளிக்காட்டும் விதமான பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அதனால் இவர்கள் அனைவருமே அப்போது தான் தமிழ்நாட்டில் சன், ராஜ், விஜய், ஜெயா தொலைக்காட்சிகளின் லேசாகப் பரவத் தொடங்கி இருந்த மெகா சீரியல் கலாச்சாரத்தில் ஐக்கியமாகி விட்டார்கள். ஈஸ்வரி ராவ் ஏக்தா கபூரின் பாலஜி டெலிஃபிலிம்ஸ் வழங்கிய ‘கஸ்தூரி’ சீரியலில் பிரதான நடிகையாகப் பல ஆண்டுகள் நடித்தார். பிறகென்ன காரணத்தாலோ இவரை நீக்கி விட்டு வேறொரு நடிகை அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து முடித்தார்.