கர்நாடகாவில் காலா படம் வெளியாகுமா?: கர்நாடக முதல்வர் பதில்!
கர்நாடகாவில் காலா படம் வெளியாக கன்னட மக்களுக்கு விருப்பமில்லை என்று கர்நாடகத் திரைப்பட வர்த்தக சபை மனு அளித்துள்ளார்கள்...


கர்நாடகாவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தைத் திரையிடுவதற்கு அந்த மாநில திரைப்பட வர்த்தகசபை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது குறித்து அளிக்கப்பட்டுள்ள மனுவைப் பரிசீலித்து வருவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் ஜூன் 7 அன்று வெளிவருகிறது.
கபாலி படத்தை இயக்கிய இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள காலா படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் காலா படம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் ஓடும் என்பது அதன் தணிக்கைச் சான்றிதழ் வழியாகத் தெரியவந்துள்ளது. காலா பட டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதற்கிடையே, கர்நாடகாவில் 'காலா' திரைப்படத்தைத் திரையிடுவதற்கு அந்த மாநில திரைப்பட வர்த்தகசபை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பெங்களூரில் புதன்கிழமை கர்நாடகத் திரைப்பட வர்த்தக சபை ஆலோசனைக் கூட்டத்தில் அதன் தலைவர் சாரா.கோவிந்த் பேசியது:
ரஜினிகாந்த் நடித்த தமிழ்த் திரைப்படமான காலாவை கர்நாடகத்தில் வெளியிடும் உரிமையை செளரவ் என்பவர் பெற்றுள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்துக்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், காலா திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், படத்தை வெளியிட கர்நாடகத்துக்கான உரிமை பெற்றுள்ள செளரவும் மறுத்துள்ளார். அவர், மாநிலத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, நாடு, மொழி, நீர், நிலம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, மாநிலத்தில் எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அவருக்கு திரைப்பட வெளியீட்டாளர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவர் மட்டுமன்றி, வேறும் யாரும் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தைத் திரையிடுவதற்கு முயற்சிக்கக் கூடாது என்றார்.
இதனிடையே, கர்நாடகத்தில் காலா திரைப்படத்தை திரையிடக் கூடாது. மீறி திரையிட்டால் அதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட சலுவளிக் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ள கருத்துக்கு பல்வேறு கன்னட சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் காலா திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக தூத்துக்குடிக்குச் சமீபத்தில் சென்றார் ரஜினிகாந்த். சென்னையில் புறப்படுவதற்கு முன்பு, காலா படம் கர்நாடக மாநிலத்தில் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து ரஜினி கூறியதாவது:
கர்நாடகத் திரைப்பட வர்த்தக சபையுடன், தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை பேச்சுவார்த்தை நடத்தி காலா பட பிரச்னைக்குச் சுமூகத் தீர்வு காணும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
'காலா' திரைப்படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தகசபை ஒத்துழைக்குமாறு அந்த மாநில ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் தலைவர் ரஜினி சந்தோஷ், கெளரவத் தலைவர் கண்டஸி சனாந்த கெளடா வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகத்தில் மட்டும் காலா படம் வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தகசபை உள்பட சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது வேதனையளிக்கிறது. ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் இந்த நடவடிக்கையில் கர்நாடக திரைப்பட வர்த்தகசபை ஈடுபடக் கூடாது. ரஜினிகாந்தின் கருத்துக்கும், காலா திரைப்படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த விவகாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி தலையிட்டு, பிரச்னையைத் தீர்த்து வைக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடகத் திரைப்பட வர்த்தக சபை, கர்நாடக அரசிடம் மனு அளித்துள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் காலா படத்தை வெளியிடக்கூடாது என்கிற கோரிக்கையைப் பரிசீலித்து வருகிறோம். காலா படத்தை வெளியிடக்கூடாது என்றும் கர்நாடகாவில் காலா படம் வெளியாக கன்னட மக்களுக்கு விருப்பமில்லை என்றும் கர்நாடகத் திரைப்பட வர்த்தக சபை மனு அளித்துள்ளார்கள். திரைப்படத்தை வெளியிட அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை, மக்கள் வேண்டாம் என நினைத்தால் அரசு தலையிடாது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...