15 வருடங்களுக்கு முன்பு பாலிவுட் பிக் பி அமிதாப்பின் 60 வது பிறந்த நாளன்று அவரது மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும், பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூருக்கும் திருமண நிச்சயம் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. மாப்பிள்ளை வீடு, மணப்பெண் வீடு இரண்டுமே பாலிவுட்டில் பெரிய கைகள் என்பதால் அரண்மனைத் திருவிழாவாக அரங்கேறியிருக்க வேண்டிய திருமணம் அது. அவர்களுக்குள் இந்த திருமண அறிவிப்புக்கு முன்பே மற்றுமொரு திருமண பந்தம் இருந்தது. அமிதாப்பின் மகளும், அபிஷேக்கின் சகோதரியுமான ஸ்வேதா பச்சனைத் திருமணம் செய்து கொண்டிருந்த நபர், வேறு யாருமல்ல, பாலிவுட்டின் மெகா நடிகர் குடும்பத்தின் மூலவரான ராஜ்கபூரின் பேரன் நிகில் நந்தா தான். நிகில், ஸ்வேதா திருமணத்தில் தான் அபிஷேக், கரிஷ்மா காதல் முகிழ்த்ததாக அப்போது மீடியாக்கள் கிசுகிசுத்தன. அன்றிலிருந்து சுமார் ஐந்தாண்டுகள் இருவரும் பெற்ரோர் கூடி, உறவுகள் கூடி நிச்சயிக்கா விட்டாலும் கூட மணவாழ்வில் நிச்சயமாக இணையப் போகும் ஜோடிகள் என்ற நம்பிக்கையில் இணைந்தே சுற்றிக் கொண்டிருந்தனர். ஐந்தாண்டுகால புரிந்துணர்வுக்குப் பின் ஒருவழியாக சரி... இனி திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருவரும் ஒருமனதாக முடிவெடுத்த பின்னர் அறிவிக்கப்பட்டது தான் கபூர் குடும்பமும், பச்சன் குடும்பமும் இணையவிருந்த அந்த பிரமாண்ட திருமண நிச்சயதார்த்தம்.