சல்மான் கான் சாலையில் தூங்கி கொண்டிருந்தவரின் மீது கார் ஏற்றி கொன்ற வழக்கில் சல்மானுக்கு ஆதரவாக ‘சாலைகள் என்பவை கார்களுக்காகவும், நாய்களுக்காகவும் மட்டுமே தவிர மனிதர்கள் தூங்குவதற்காக அல்ல” என்று சிக்கலான கருத்துக் கூறி பலத்த கண்டனத்துக்கு உள்ளான பாலிவுட் பாடகர் அபிஜித் பட்டாச்சார்யாவின் ட்விட்டர் கணக்கு மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெண்களுக்கு எதிராகவும், ஆபாசமாகவும் இவரது ட்விட்டர் கணக்கில் எழுதப் பட்டு வந்ததால் அபிஜித்தின் கணக்கு முடக்கியுள்ளதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அபிஜித்தின் ட்விட்டர் கணக்கு இதோடு இரண்டு முறை முடக்கப் பட்டு விட்டது. முதல்முறை முடக்கப் பட்டதும் வேறொரு புதுக் கணக்கு தொடங்கி ட்விட்டரில் இயங்கத் தொடங்கிய அபிஜித்; அதில் ஒரு வீடியோவை போஸ்ட் செய்து ‘இனிமேல் இது தான் தனது அதிகார பூர்வ ட்விட்டர் கணக்கு, இனிமேல் இதில் இயங்குவேன். நமது தேசத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் எதிராகப் பேசுபவர்களை நான் எதிர்க்கிறேன். நான் தொடர்ந்து இப்படிக் கூறி வருவதால் சிலர் எனது குரலை மேலெழும்ப விடாமல் அமுக்கப் பார்க்கிறாரகள். ஆனால் அதற்காக நான் ஓய்ந்து விட மாட்டேன் @singerabhijeet எனும் புது ட்விட்டர் முகவரியில் இனிமேல் இயங்குவேன் எனத் தெரிவித்துள்ளார்.