இப்படித்தான் 2002 ஆம் வருடம் ‘ஈஸ்வர்’ தெலுங்குப் படம் மூலமாக நான் சினிமாவுக்கு வந்தேன். அறிமுகமாகி சரியாகப் பத்து வருடங்கள் கழித்து 2012 ல் ராஜமெளலி பாகுபலி திரைப்படம் குறித்து என்னிடம் பேசினார். அன்றிலிருந்து இன்று வரை எனக்கு அது ஆச்சரியமான விசயமே! என்னால் பாகுபலியாக முடியும் என்ற ராஜமெளலியின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற மிகுதியான கவனமே என்னை அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போகச் செய்தது. பிரபாஸ் வேறு பாகுபலி வேறு என்ற எண்ணமே இல்லாமல் கடந்த நான்கு ஆண்டுகளாக நான் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிப் போனேன். நான் மட்டுமல்ல கிட்டத்தட்ட பாகுபலியில் நடித்த அனைவருமே அப்படித்தான் இருந்தார்கள். இந்தப் படத்தில் சிலரது தேவை முதல் பாகத்தில் அதிகமிருந்தது, சிலரது தேவை இரண்டாம் பாகத்தில் அதிகமிருந்தது. எனவே அவர்கள் அந்தந்த காலகட்டத்தில் பாகுபலிக்காக உழைத்து விட்டு வேறு வேறு படங்களிலும் கமிட் ஆகிக் கொள்வது எளிதாக இருந்தது. ஆனால் எனக்கு அப்படியல்ல; பாகுபலியில் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்கள் எனக்கு. படத்தின் இரண்டு பாகங்களிலுமே எனக்கு வேலை இருந்தது. இதற்கு நடுவில் வேறு படங்களில் கமிட் ஆனால் நிச்சயமாக கவனம் சிதறும். அது பாகுபலிக்கு தேவையில்லாத தொல்லை எனக் கருதியே நான் இந்த நான்கு ஆண்டுகளில் வேறு படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை.