பாகுபலி தொழில்நுட்ப தரத்திலும் பிற திரைப்படங்களைக் காட்டிலும் முன்னிலையில் உள்ளது. நம்முடைய உயர்ந்த கலாச்சாரத்தை பிரதிபலிப்பதோடு, திரையில் சொல்வதற்கு நம்மிடையே நிறையக் கதைகள் உண்டு என்பதையும் பாகுபலி நிரூபித்துள்ளது. ஆனால் 2000 வருடங்களாலான கலாச்சாரம் நம்முடையது என்று அவர்கள் சொன்னால், இடையில் தலையிட்டு ஒரு விசயத்தைச் சொல்ல நான் விரும்புகிறேன். நாம் 2000 வருடப் பழமையானவர்கள் அல்ல! நம்முடையது 70 வருட பழமையே! சந்திர குப்த மெளரியர் அல்லது அசோகர் காலத்துக்கெல்லாம் நாம் திரும்பிச் செல்ல வேண்டாம். அவர்கள் நமது மூதாதையர்கள் அல்ல.. இன்றைய நவீன வாழ்வில் நம்மால் அவர்களைப் பின்பற்றவோ அல்லது அவர்களை விளங்கிக் கொள்ளவோ முடியாது. ஆனால் நாம் அப்படிப் பட்ட திரைப்படங்கள் வழியாக இறந்த காலம் மற்றும் நிகழ்காலம் இரண்டுக்கும் இடைப்பட்ட வாழ்வில் நழுவிக் கொண்டும், சறுக்கிக் கொண்டும் இயல்பற்ற ஒரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது தான் இந்தியாவின் குழப்பம்.