பாகுபலி திரைப்படத்தில் பாகுபலி, தேவாசேனா கதாபாத்திரங்களுக்கு ஈடாக மட்டுமல்ல அதையும் தாண்டி முதல் பாகத்தில் அனைத்து கதாபாத்திரங்களையும் விழுங்கி ஏப்பம் விட்டு பிரதானமாக நின்றது ராஜமாதாவான சிவகாமி கதாபாத்திரமே! ஏனெனில் அந்தக் கதாபாத்திரத்துக்கு தன் குரலாலும், மிடுக்கான பார்வை மற்றும் உடல் மொழியாலும் அத்தனை நியாயம் செய்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். ரம்யா கிருஷ்ணனின் மொத்த திரையுலக வாழ்விலும் அவரால் மட்டுமல்ல அவரது ரசிகர்களாலும் மறக்க முடியாத கதாபாத்திரமாக ராஜமாதா சிவகாமி தேவி இப்போது மனதில் நின்று விட்டார். ஆனால் இந்தக் கதாபாத்திரத்துக்காக இயக்குனர் எஸ்.எஸ். ராஜமெளலி முதலில் அணுகியது நடிகை ஸ்ரீதேவியைத் தான். அவர் கேட்ட பெரும் சம்பளம் தங்களுக்கு கட்டுப்படியாகாது என இயக்குனர் தரப்பு பின்வாங்க ஸ்ரீதேவியை அடுத்து ஹேமா மாலினியை அணுகலாமா என யோசித்த படக்குழுவினர் இறுதியில் ரம்யா கிருஷ்ணனை கேட்டுப் பார்க்கலாம் என முடிவு செய்தனர்.