சென்னை தியாகராயநகர் ஹபிபுல்லா சாலையில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்கத்தால் கட்டப்படும் கட்டுமானப் பணிகளைத் தொடர 2 வாரத்துக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தியாகராயநகர் வித்யோதயா காலனியைச் சேர்ந்த கே.எம்.ஸ்ரீரங்கன், ஆர்.அண்ணாமலை ஆகியோர் தாக்கல் செய்த மனு விவரம்:
சென்னை தியாகராயநகர் ஹபிபுல்லா சாலை, பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல பொதுப் பாதையை நடிகர் சங்கத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், வித்யோதயா காலனி குடியிருப்பு வாசிகள் பிரகாசம் சாலைக்குச் செல்வதற்குச் சுற்றிச் செல்ல நேரிடுகிறது. அந்தப் பொதுப்பாதையை அதிகாரிகள் சட்ட விரோதமாக நடிகர் சங்கத்திற்கு பட்டாப் பதிவும் செய்து கொடுத்துள்ளனர். முறைகேடாக 33 அடி சாலையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி வருகின்றனர். எனவே, நடிகர் சங்கம் சார்பில் கட்டடம் கட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர்.
இந்த மனு விடுமுறை கால நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) அதிகாரிகள் கட்டட அனுமதிக்கான ஆவணங்கள் மற்றும் வரைபடத்தைத் தாக்கல் செய்தனர். அவற்றைப் பார்வையிட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
நடிகர் சங்க கட்டடம் அமையவிருக்கும் இடத்தை ஆய்வு செய்வதற்கு ஆணையராக வழக்குரைஞர் கே.இளங்கோவை நியமிக்கிறோம். கிண்டி தாலுகாவுக்கு உள்பட்ட கணக்கெடுப்பு உதவி இயக்குநர், வட்டாட்சியர் ஆகியோர் ஆணையருக்கு இடத்தை ஆய்வு செய்வதற்கு உதவியாக இருக்க வேண்டும். அனைத்து ஆவணங்களையும் வழங்க வேண்டும். மேலும் வருவாய்த் துறை மற்றும் மாநகராட்சியில் இருந்தும் தேவையான ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.
நடிகர் சங்க இடத்தை ஆய்வு செய்து, மே 29-ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளிக்கும் வரை, எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள மாட்டோம் என நடிகர் சங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இந்த ஆய்வுக்கு பின் கே.இளங்கோ தாக்கல் செய்த அறிக்கையில், 'சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படவில்லை' என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு சிலநாள்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில், அந்த இடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சல் நிலையம் இருந்தாக தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், அந்த இடத்தில் அஞ்சல் நிலையம், பொது சாலை இருந்ததா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டு, வழக்கில் தலைமை அஞ்சல் துறை தலைவரை எதிர்மனுதாரராக இணைத்து விசாரணையை ஜூன் 27 -ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது. சென்னை மாநகராட்சி சார்பில் அறிக்கை தயார் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நடிகர் சங்க கட்டுமானப் பணிகளைத் தொடர 2 வாரத்துக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


