எங்கள் அப்பா சொல்வார், அம்மா ஒரு ஹவுஸ் வைஃப் ஆக இல்லாமலிருந்தால் இந்நேரம் ஒரு கலெக்டராகியிருப்பார் என்று, என் அம்மாவுக்கு 16 அல்லது 17 வயது இருக்கும் போது அவர் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அந்தக் கட்டுரைக்குப் பரிசாக அவர் லண்டன் செல்வதற்கு டிக்கெட் கிடைத்தது. அந்தச் சமயத்தில் தான் என் அப்பா, அம்மாவைப் பெண் பார்க்கச் சென்றிருந்தார். அதனால் தான் என் அம்மா லண்டன் செல்லாமல், எங்கள் குடும்பத்திற்குள் வந்தார். அது அவரது மிகப்பெரிய தியாகம்; இந்த மாதிரி தியாகமெல்லாம் யாராலும் செய்ய முடியாது. சில சமயங்களில் நான் நினைத்துப் பார்ப்பேன்... இப்படி தியாகம் செய்பவர்களுக்குத் தான் வாழ்க்கையில் மறுபடி, மறுபடி கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும், என்னை மாதிரி பொல்லாதவர்களுக்கு வாழ்க்கையில் இன்பம் மட்டுமே கிடைக்குமோ என்று... என் அம்மா, அக்காவெல்லாம் நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார்கள், நிறைய தியாகங்கள் செய்திருக்கிறார்கள்... இனிமேல் அவர்கள் வாழ்க்கையில் கஷ்டமே இருக்கக் கூடாது., அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு என் அப்பா என்றால் உயிர்... ஒரு கஷ்டமென்றால் நான் சாய்ந்து கொள்வது என் அப்பாவின் மடியில் தான். அவரைப் போன்ற ஒரு மனிதரைப் பார்ப்பது அரிது.