நேற்றைய நிகழ்ச்சியில் நடிகர் வையாபுரி சொன்னது போல... ஓவியாவுக்குப் பிற பெண்களைப் பற்றியோ அல்லது ஆண்களைப் பற்றியோ குறை கூறும் மனப்பான்மை இல்லை என்பது அவரது வெற்றிக்கான தகுதிகளில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமே அவரது வெற்றியை உறுதி செய்தால். பிற நாட்களில் அவர் பிக் பாஸ் குடும்பத்தில் பிறரது வேலையைப் பகிர்ந்து கொள்ள முயலாதது குற்றமே இல்லையென்றாகிறது இல்லையா? நமது குடும்ப அமைப்பில் பல சண்டை, சச்சரவுகளுக்கும் மூல காரணமாக அமைவதில் இந்த வேலைப்பங்கீடும் ஒன்று. இன்றும் கூட்டுக் குடும்ப அமைப்பில் வாழும் பல குடும்பங்களில் அண்ணன், தம்பிகளுக்குள், அவர் தம் மனைவிகளுக்குள் சண்டைகள் வரக் காரணமே குடும்பத்திற்கான வீட்டு வேலைகளைப் பங்கிட்டுக் கொள்ளும் போது ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளே காரணம் என்பதால். ஓவியா தன் மீதான அந்தக் குற்றச்சாட்டை நிவர்த்தி செய்து கொள்ளும் வரை அவரை எப்படி வெற்றியாளருக்கான தகுதி உடையவர் என ஏற்றுக் கொள்ள முடியும். ஏனெனில் குடும்பத்தின் சண்டைக்கு மூலகாரணமே இந்த விஷயம் தான் என பிக் பாஸ் குடும்பத்தினர் பல்வேறு சந்தர்பங்களில் பதிவு செய்துள்ளனர். ஆனால் அதற்குள் ஓவியா தான் வின்னர் எனும் ரீதியில் அவருக்கான ஆதரவு வலுத்து வருகிறது. ஓவியா ஜெயிப்பதில் எந்தக் குற்றமும் இல்லை ஆனால், அவரை விடவும் தகுதி வாய்ந்த நபர் அங்கே பிக் பாஸ் குடும்பத்தில் ஒருவர் கூட இல்லை என்றால் ஓவியாவுக்காக ஓட்டுப் போட்டு எலிமினேஷனில் இருந்து அவரைக் காப்பாற்றியவர்களைத் தவிர வேறு யாருமே பிக் பாஸ் பார்க்கவே இல்லை என்பதாகிறது. ஓட்டுக்களில் விருப்பங்களற்ற பெருவாரியான ஆதரவாளர்களில் பிக் பாஸ் குடும்பத்தின் பிற உறுப்பினர்களான கணேஷ் வெங்கட்ராம், ரைஸா, ஆரவ், சினேகன் உள்ளிட்டோரை ஆதரிப்பவர்களும் இருப்பார்கள் என நம்ப மறுக்கக் கூடாது.