குறிப்பாக அகதி மக்களின் வலிகளை வசனங்களில் கடத்துவதில் நல்ல உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கியிருக்கிறார். காவல்துறையால் மிரட்டப்படும் இடங்களிலும் ஒடுங்கிப் போகும் காட்சிகளிலும் நிலமற்ற மக்களின் நிலையை கண் முன் கொண்டு வந்திருக்கிறார் விஜய் சேதுபதி. நடிகை மேகா ஆகாஷுக்கு நடிப்பதற்கான பெரிய இடம் இல்லை. படம் முழுக்க வந்தாலும் வழக்கமான தனது நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இவர்களைக் கடந்து மறைந்த நடிகர் விவேக், நடிகர்கள் மகிழ் திருமேனி, கனிகா, சின்னி ஜெயந்த், கரு பழனியப்பன், ராஜேஷ், பவா செல்லதுரை, ரித்விகா ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர் மோகன் ராஜா முதன்முறையாக நடிகராக அவதாரமெடுத்திருக்கிறார். தனது மகள் மேகா ஆகாஷுடனான தந்தை மகள் பாசத்திற்கான காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. சீரியஸான திரைப்படம் என்பதால் காமெடி காட்சிகளை இட்டு நிரப்பாமல் செயல்பட்டுள்ளார் இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோஹந்த். கிளைமேக்ஸ் காட்சிகள் யூகிக்கக் கூடியதுதான் என்றாலும் வலிமையான வசனம் காட்சியை தூக்கி நிறுத்துகிறது.