நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சினிமா விமரிசனம் - இறைவி: பொறுப்பற்ற ஆண்களும் இறைவிகளும்!

இந்தத் தலைமுறைப் பெண்களின் அவஸ்தைகளை, கணவன் எவ்வளவு தவறுகளைச் செய்தாலும் விட்டு விலக முடியாத, உதறமுடியாத மனப்போராட்டங்களின் வடிவம், இறைவி. ஆண்களின் பொறுப்பற்ற செயல்களின் வழியே பெண்கள் படும் பாட்டை உணர்வுபூர்வமாகவும் அப்பட்டமாகவும் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:25 pm

ச. ந. கண்ணன்

கணவன் எவ்வளவு தவறுகளைச் செய்தாலும் விட்டு விலக முடியாத, உதறமுடியாத பெண்களின் மனப்போராட்டங்களின் வடிவம், இறைவி. ஆண்களின் பொறுப்பற்ற செயல்களின் வழியே இந்தத் தலைமுறைப் பெண்களின் அவஸ்தைகளை உணர்வுபூர்வமாகவும் அப்பட்டமாகவும் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

எடுத்த படத்தை வெளியிடமுடியாமல் போராடும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, அதனால் உண்டாகும் விளைவுகள் என இந்த ஒருவரிக்கதையில்தான் எத்தனை எத்தனை முடிச்சுகள்! எத்தனை எத்தனை அலைக்கழிப்புக்கள்!

படம் வெளிவராததால் குடித்தே சீரழியும் எஸ்.ஜே. சூர்யா, அவரைச் சரியான வழிக்குக் கொண்டுவர பாடுபடும் அவருடைய மனைவி கமலினி ஒரு பக்கம்.

எஸ்.ஜே. சூர்யாவின் தம்பி பாபி சிம்ஹா. இருவருக்கும் நண்பர் விஜய் சேதுபதி. பாபி சிம்ஹாவுடன் இணைந்து கோயில் சிலைகள் தொடர்புடைய திருட்டுகளிலும் ஈடுபடுகிறார். எஸ்.ஜே. சூர்யாவைக் கொலை செய்ய முயல்கிற படத்தயாரிப்பாளரைக் கோபத்தின் விளைவால் கொலை செய்துவிடுகிறார் விஜய் சேதுபதி. அதனால் சிறைக்குச் செல்கிறார். இந்த நெருக்கடிகளால் குடும்ப வாழ்வில் படாதபாடு படும் அவருடைய மனைவி அஞ்சலி. (இந்த இரு பெண்களுக்கு இடையே இன்னொரு பெண், கணவனை இழந்தபிறகு, விஜய் சேதுபதியுடன் உறவு வைத்துக்கொள்ளும் பூஜா தேவரியா.)

மூன்று ஆண்களின் செயல்களால் கமலினியும் அஞ்சலியும் படுகிற அவஸ்தைகளை செண்டிமெண்ட் பாணியில் கதை சொல்லாமல் ஆக்‌ஷன் படப்பின்னணியில் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர்.

உண்மையில் எஸ்.ஜே. சூர்யா, விஜய் சேதுபதி, அஞ்சலி என இந்த நடிப்புத் தூண்கள் தான் படத்தை வலுவாகத் தாங்குகின்றன. எஸ்.ஜே. சூர்யாவை இயக்குநர் வேடத்துக்குத் தேர்ந்தெடுத்ததில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பெரும்பாலான காட்சிகளில் குடிகாரன் போல நடிப்பதென்பது சவாலான காரியம்தான். அதை எஸ்.ஜே. சூர்யா நேர்த்தியாகச் செய்துள்ளார்.

விஜய் சேதுபதிக்கு வழக்கமான அடியாள் வேடம் (கொஞ்சமாச்சும் மாறுங்க ப்ரோ). நண்பருக்காகக் கொலை செய்வது, தொடர்ந்து திருட்டில் ஈடுபடுவது என்று குடும்பத்தின் மீது அக்கறை இன்றி சுற்றும் கதாபாத்திரம். கடைசிக் காட்சிகளில் தன் முத்திரையை பதித்துவிடுகிறார்.

பாபி சிம்ஹாவுக்கு வில்லன் கதாபாத்திரம். நண்பனுக்குத் துரோகம் செய்வது, நண்பனின் மனைவியைக் கவர நினைப்பது என படம் முழுக்க கெட்டக் காரியங்களில் ஈடுபடுகிறார். நடிப்பில் அவரும் நிறைவாகவே செய்துள்ளார். ஆனால் வசன உச்சரிப்பில் இன்னும் கவனமாக இருக்கவேண்டும்.

பெண்களின் தீராத் துயரங்களுடன் ஆண்களின் நட்புகளில் உண்டாகும் சிக்கல்கள், துரோகங்கள் என திரைக்கதை மனித வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தையும் காண்பிக்கிறது.

மீண்டும் அஞ்சலி. கனவுகளுடன் திருமணப் பந்தத்தில் நுழைகிறவர் பிறகு படிப்படியாக எப்படியெல்லாம் சோகங்களுடன் வாழ நேர்கிறார் என்பதை நடிப்பில் துல்லியமாக நிரூபித்துள்ளார். கணவன் ஜெயிலில் இருந்து வந்தபிறகு அவனிடம் உரிமையாக கோபிக்கும் காட்சிகளில் அஞ்சலி பிரமாதப்படுத்தியுள்ளார். ஒரு சினிமா இயக்குநரின் மனைவி படும் பாடு கமலினியுடையது. அஞ்சலிக்கு நிகரான மனப்போராட்டங்கள். நல்வரவு, புதுமுகம் பூஜா தேவரியா. பெண் கேட்டு வருகிற காட்சியில் தன்னை வெளிப்படுத்தும் விதமும் தன்னைச் சந்தேகப்படும் விஜய் சேதுபதியை எதிர்கொள்ளும் முறையும் இந்த நடிப்புக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.  

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் வழக்கம்போல இனிமை. முக்கியமான காட்சிகளில் அழுத்தம் தருகிறது பின்னணி இசை. பல பகுதிகளில் பயணிக்கும் கதைக்கு ஒளிப்பதிவு கூடுதல் பலம். பல கிளைக்கதைகள் கொண்ட ஒரு படத்துக்கு எடிட்டிங் நிச்சயம் சவால்தான். ஆனால் படத்தின் நீளத்தைப் பார்க்கும்போது எடிட்டிங் இன்னும் கறாராக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

காமெடிக்கும் டூயட் பாடல்களுக்கும் வாய்ப்பில்லாத படம். பொழுதுபோக்கு அம்சம் என்கிற வழக்கமான தமிழ்சினிமாவுக்கே உரிய காட்சிகளையும் இணைக்கமுடியாது. அதேசமயம் காத்திரமான காட்சிகளுக்கு நடுவே பாடல்கள், சின்னச் சின்ன அழகான வசனங்கள் என படம் அதற்கே உரிய வேகத்தில், சுவாரசியத்தில் நகர்கிறது. கடைசி அரை மணி நேரத்தில் திருப்பமோ திருப்பம்... அதிலும் கட்டக்கடைசி காட்சியில் உண்டாகும் அதிர்ச்சியில் திரையரங்கம் உறைந்துவிடுகிறது. அஞ்சலி மீது ஏற்படும் பரிதாபம் கதையின் வெற்றி.

உறுத்தல்களும் இல்லாமல் இல்லை. ஏற்கெனவே ஒருமுறை இன்னொருவருக்காக ஜெயிலுக்குப் போனவன் மீண்டும் அதே நபருக்காக தவறான காரியங்களில் ஈடுபட வாய்ப்புண்டா? வடிவுக்கரசி கதாபாத்திரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நானும் உன் நண்பனைக் காதலித்தேன் என அஞ்சலி விஜய் சேதுபதியிடம் சொல்லவேண்டிய அவசியம் என்ன? அது வெறும் சினிமா வசனமாகவே தனித்து நிற்கிறது. எஸ்.ஜே. சூர்யா சினிமா இயக்குநர் என்றாலும் அவருக்கு திரைத்துறையின் வேறு நபர்களுடன் தொடர்பே இல்லையா? அவருக்கு உதவவோ அல்லது அவர் பிரச்னை குறித்து விவாதிக்கவோ ஒரு கோடம்பாக்கத்து நபரும் படத்தில் தென்படவில்லையே. என்னதான் கணவன் பொறுப்பற்றவன் என்றாலும் அவன் இறந்தால் அப்படியே எந்த மனைவி விட்டுப் போய்விடுவாள்? கிளைமாக்ஸில் எஸ்.ஜே. சூர்யா மனைவிக்கு போன் பேசும்போதே அவர் உணர்த்துவது என்ன என்பது புரிந்துவிடுகிறது. அந்தக் காட்சிக்கு நீளமான வசனம் தேவையா?

சமூகத்தைப் பிரதிபலிக்கும் கதை, அட்டகாசமான நடிப்பு, தனித்துவமான மேக்கிங் என இம்முறையும் தனது முயற்சிக்காகப் பாராட்டுகளைப் பெறுகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.