தனுஷ் தயாரித்த ‘காக்கா முட்டை’க்குப் பலத்த வரவேற்பு; விலைக்கு வாங்கிய விஜய் டிவி!
படம் தரமாக இருந்தால் ஒருவர் விடாமல் பாராட்டித் தள்ளுவார்கள், படத்தின் வசூலை அதிகரிப்பார்கள்...


தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரது கூட்டுத் தயாரிப்பில் உருவாகி நேற்று வெளியான காக்கா முட்டை படம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
படம் வெளியான முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயை வசூலித்துள்ளது. எந்த ஒரு பிரபல நடிகரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்காமல், சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தச் சிறிய படத்துக்கு இந்த வசூல் கிடைத்திருப்பது பெரிய சாதனை என்றுதான் சொல்லவேண்டும். காக்கா முட்டையின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய தனுஷ், இப்படம் ஏற்கனவே லாபம் சம்பாதித்துக் கொடுத்துவிட்டது. முதல் நாள் வசூல் வந்தாலே எனக்கு லாபம் தான் என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 109 திரையரங்குகளில் வெளியான (இந்தியாவில் 170 திரையரங்குகள்) இந்தப் படத்துக்கு சாதகமான அம்சங்கள் உருவாகியுள்ளன. பல திரையரங்குகளில் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டுமல்லாமல் சென்னைப் புறநகர்களிலும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மாயாஜாலில் முதல்நாளில் 20 காட்சிகள் ஓடிய காக்கா முட்டை, அடுத்தநாளே 30 காட்சிகளுக்கு அதிகமாக்கப்பட்டுள்ளது. இதுபோல பெரும்பாலான மல்டிபிளெக்ஸ்களிலும் காட்சிகள் அதிகமாக்கப்பட்டுள்ளன. குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் படம் வெளியான அடுத்த நாளே 2 காட்சிகளில் இருந்து 3 காட்சிகளாக மாற்றப்பட்டுள்ளது. திங்கள் முதல் நான்கு காட்சிகளாக வெளியிடப்படும் என திரையரங்குத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரில் உள்ள சினிமா விமரிசகர்கள், ரசிகர்கள் என எல்லோருமே ஒரே குரலுடன் படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்கள். இன்னும் சொல்லப் போனால் இதுவரை படத்துக்கு ஒரு நெகடிவ் விமரிசனம் கூட வரவில்லை! படம் வெளியான முதல்நாளே படத்தைக் கிழித்துத் தோரணம் கட்டுகிறார்கள் என்று இணையத்தள விமரிசனங்கள் மீது கோபப்படும் தமிழ் சினிமாவுக்கு இந்தப் படம் ஒரு பாடமாகவே உள்ளது. படம் தரமாக இருந்தால் ஒருவர் விடாமல் பாராட்டித் தள்ளுவார்கள், படத்தின் வசூலை அதிகரிப்பார்கள் என்பதற்குக் காக்கா முட்டை நல்ல உதாரணம்.
விஜய் டிவியின் தலைமை நிர்வாகி, கே. ஸ்ரீராம், காக்கா முட்டை படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...