சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பஜ்ரங்கி பாய்ஜான் விமரிசனம்

கிரிக்கெட் போட்டிகளின் போது பிற நாட்டவருடன் இந்திய அணி விளையாடும் போது ஜெயித்தல் முக்கியம்தான். ஆனால் அதைவிட இந்தியா பாகிஸ்தான் மோதும்போது மட்டும் நம் அனைவரின் பிரார்த்தனையும் எ

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:03 am

உமா ஷக்தி.

கிரிக்கெட் போட்டிகளின் போது பிற நாட்டவருடன் இந்திய அணி விளையாடும் போது ஜெயித்தல் முக்கியம்தான். ஆனால் அதைவிட இந்தியா பாகிஸ்தான் மோதும்போது மட்டும் நம் அனைவரின் பிரார்த்தனையும் எப்படியாவது இந்தியா ஜெயிக்க வேண்டும் என்பதே. காரணம் மறுமுனையில் இந்தியா தோற்க வேண்டும் என்று அவர்களும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பார்கள். இது விளையாட்டில் மட்டுமல்ல, நம் எல்லைகளில், மத நம்பிக்கைகளில், என எல்லா இடங்களிலும் ஆழமாக ஏற்பட்டுவிட்ட பிரிவினை. தாய்நாட்டுப் பற்று என்பதையும் மீதி நம்மில் வேறூன்றி இருக்கும் எண்ணங்கள். அந்நியர் என்று ஒருவர் மற்றவரை தாழ்வாகவும் வெறுப்புணர்வுடனும் அணுகுவதுதான் பிரிவினவாதத்தின் ஆணிவேர்.

எல்லா மதங்களின் அடிப்படையும் அன்பு, இரக்கம் என்று போதிக்கப்பட்டிருக்க, அதன் நேர் எதிர்ச்செயலான வன்முறை, ஈவு இரக்கமற்ற செயல்பாடுகளாய் மனிதர்களின் மூளையில்  பதிந்துவிட்டது. மதத்தின் பெயரிலும், இனவாத வெறிச்செயல்களாலும் இன்றளவும் உலகம் முழுவதும் எத்தனை எத்தனை உயிர்ச் சேதங்கள். மறக்க இயலாத துயரச் சம்பவங்கள். ரத்தக் கறை படிந்த வரலாற்று ஏடுகளை மாற்றி எழுத இனி ஒரு காந்தி தோன்றினாலும் கூட இந்நிலை மாறுமா என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. ஆனாலும் மாற்றம் என்பது மாறாத விதி. எல்லாம் மாறும் என்ற நம்பிக்கைதான் மனித வாழ்வின் அடுத்தடுத்த நகர்தலுக்கான ஆதாரம். அப்படி ஒரு சிறு முயற்சியாக அவ்வப்போது சில திரைப்படங்கள் வருவது வரவேற்கத்தக்கது. பஜ்ரங்கி பாய்ஜான் சமீபத்தில் சல்மான் கான் கரீனா கபூர் நடித்து வெளிவந்துள்ள படம்.

கதை என்று பார்த்தால் ஒரு வரியில் சொல்லிவிடலாம். ஆனால், அதை சொன்னவிதம் காவியச் சிறப்பம்சம் கொண்டது. பாகிஸ்தானில் உள்ள சுல்தான்பூர் என்ற மலைப்பிரதேசத்தில் வாழும் ஒரு எளிய குடும்பம். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தாய் இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் மாட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறாள். பாகிஸ்தான் ஏறுமுகத்தில் இருக்க, தன்னுடைய தோழியிடம் புன்னகையுடன் பையன் பிறந்தால் சாஹித் என்று பெயர் வைப்பேன் என்கிறார். பெண் குழந்தை பிறந்தால் என்று தோழியின் கேள்விக்கு பதிலாகப் பிறக்கிறாள்  சாஹிதா (ஹர்ஷாலினி மல்ஹோத்ரா). ஆனால் பேசும் திறன் இல்லை. அழகும் அறிவுமுள்ள தன் குழந்தையை எப்படியாவது படிக்க வைத்து பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்ற கனவுடன் தாய் அவளுக்கான பிரார்த்தனையும் பரிகாரமும் செய்ய தில்லியில் இருக்கும் தர்காவிற்கு அழைத்துச் செல்கிறாள். இறைவன் மிகப் பெரியவன் அவனிடம் மனமுருகி கேட்டால் கிடைக்காதது எதுவுமில்லை. கண்ணீர் மல்க தன் மகளுக்காக பிரார்த்தனை செய்துவிட்டு அங்கிருந்து இருவரும் மனநிறைவுடன் திரும்பி வருகிறார்கள். இரவில் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க, குழியில் விழுந்து கிடக்கும் ஆட்டுக் குட்டியை காப்பாற்ற ரயிலிலிருந்து இறங்கும் சாஹிதாவை விட்டுவிட்டு புறப்படுகிறது ரயில். வழிதவறிய ஆட்டுக் குட்டியாகத் திகைத்து நிற்கிறாள் அந்த பேச இயலாத தேவதை. அடுத்து வந்து கூட்ஸ் ரயிலில் ஏறி அதன் பாதையில் பயணிக்கிறாள். எங்கோ ஓரிடத்தில் சாஹிதா தீவிர அனுமன் பக்தனான பவனிடம் (சல்மான் கான்) வந்தடைகிறாள்.  சாஹிதாவை பவன் எப்படி பாகிஸ்தானில் இருக்கும் அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கிறான் என்பதே படத்தின் மீதிக் கதை.

தொலைந்து போன சிறுமி, வெவ்வேறு மதம், நாடு கடந்த சாகஸப்  பயணம் என மிகத் தெளிவான திரைக்கதை. இந்தப் படத்தை மிகவும் சுவாரஸ்யமாக்குவது இருவர். ஒருவர் குரங்கை எங்குப் பார்த்தாலும் பவ்யமாக சற்று குனிந்து கைக்கூப்பி வணங்கும் தீவிர ஆஞ்சநேய பக்தனான சல்மான் கான். மற்றவர் அவர் முதுகில்  தொத்திக் கொண்டு படம் முழுவதும் அழகாகப் புன்னகைக்கும் ஹர்ஷாலினி. பவனுடனே சுற்றித் திரிந்து அவனது பழக்க வழக்கங்களில் முக்கியமாக குரங்கினை வணங்குவதில் தேர்ச்சிப் பெறுகிறாள் முன்னி ( சிறுமியின் பெயர் தெரியாததால் சல்மான் அவரை முன்னி என்றே படம் முழுவதும் அழைக்கிறார்.) சல்மானின் காதலியாக சில காட்சிகளில் மட்டும் வரும் கரீனா கபூரும் அவரது தந்தையாக நடித்துள்ளவரும் கதை தொய்வடையாமல் இருக்கச் செய்கிறார்கள். முன்னியை ஆஞ்சநேயர் கோவிலுக்கு அழைத்துச் சென்று கழுத்தில் ஒரு அனுமன் டாலர் போட்ட கயிறை கட்டிவிடும் போது அவள் பேசாமல் அவன் சொன்னவிதத்தில் கைகூப்பி ஆஞ்சநேயரை வணங்குவது அழகு. ஆனால் அடுத்த நிமிடம் எதிரே இருக்கும் தர்க்காவைப் பார்த்து ஓடோடிச் சென்று தன் மத வழக்கப்படி இறைவனைத் தொழுவதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறான் பவன். தயங்கும் கால்களுடனும் மனத்தடையுடனும் தர்க்கா வாயிலில் நின்றவன் தன் மனத்தை மாற்றிக் கொண்டு முன்னியின் கள்ளம் கபடமில்லாத அன்புக்கு தலைவணங்கி உள்ளே செல்கிறான்.  இறைமையின் அருட்கொடை அன்பெனும் உணர்வே என்பதை இத்திரைப்படத்தின் பல காட்சிகள் உணரச் செய்கிறது. 

உணர்வுகளில் ஊடுருவி சிலிர்பூட்டும் பல காட்சிகள் இத்திரைப்படம் முழுவதும் உண்டு. சாஹிதாவாக நடித்திருக்கும் ஹர்சாலினி அவ்வளவு அழகு. படத்தில் திடீர் திடீரென சாஹிதா காணாமல் போகும்போதெல்லாம் நமக்கு திக்கென்றாகிவிடும். பவன் பிராமணர்.  சுத்த சைவம். சாஹிதா இஸ்லாமியச் சிறுமி.  பவன் வீட்டுச் சாப்பாடு பிடிக்காத சாஹிதா அசைவம் சாப்பிட ஆசைப்பட்டு பக்கத்து வீட்டுக்கு சென்றுவிடுவது, தரதரவென்று இழுத்து வந்த சல்மான் அவளை அசைவ ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று தனி டேபிளில் அமர்த்தி சாப்பிட வைக்க முயலும் போது அங்கு ஒரு தாய் குழந்தைக்கு ஊட்டிவிடும் காட்சியைப் பார்த்து தன் அம்மாவை நினைத்துக் கலங்குவது, அதைப்பார்த்த கரீனாவும் சல்மானும் இந்தி(ய) சினிமாவின் ஆதி வழக்கமான ஆடல் பாடல்களில் ஈடுபட்டு அவளை சந்தோஷப்படுத்துவது என பல காட்சிகள்  திரையில் மின்னும் கவிதகள். அத்தனையிலும் தன் அழகிய முகபாவங்களால் வசீகரிக்கிறாள் சாஹிதா. குறிப்பாக வளையலுக்கு ஆசைப்பட்டு கடைக்காரனுக்குத் தெரியாமல் நைசாக எடுத்துவிடுவாள். பெரியவர்கள் உலகத்தில் அதன் பெயர் திருட்டு ஆனால் சுட்டிக் குழந்தை சாஹிதாவுக்கு அது தீராத குறும்பு. பவன் அனுமனிடம் அழைத்துச் சென்று மன்னிப்பு கேட்க வைத்தும் அவளால் அந்த விளையாட்டினை நிறுத்த முடிவதில்லை.அப்படி ஒரு போலீஸ்காரனின் காப்பைத் திருடி சிக்கிக்கொள்வது வரை அது தொடர்வது திரைக்கதையின் அழகியல்.

படத்தின் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் பாகிஸ்தானில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி சானல் நிருபர் நவாஸுதீன் சித்திக். எளிமையும் அப்பாவித்தனமும இயல்பும் சேர்ந்த அற்புதமான நடிப்பால் பிரமாதப்படுத்தியிருப்பார். சாஹிதாவிற்கும் பவனுக்குமான அன்பின் தரிசனத்தைக்கண்டு தானாகவே அவர்களின் பயணத்தில் இணைந்து கொள்வார். இப்படத்தின் திருப்பத்தில் அவரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.  திரைப்படத்தின் பிற்பகுதியை நீரோட்டமாக தன் இயல்பான நடிப்பிலும் நகைச்சுவையிலும் அசத்தியிருப்பார் நவாஸ் பாய்.

ஒளிப்பதிவாளர் அசீம் மிஸ்ராவின் கேமரா பாகிஸ்தான் மலைப் பிரதேசங்களிலும் எல்லைப் பகுதிகளிலும் பயணித்து சிலிர்ப்பூட்டுகிறது. படத்தின் இசையமைப்பாளர் ப்ரீத்தம்  அதிரடிப் பாடல்களிலும் இனிமை சேர்த்திருக்கிறார். இப்படத்தின் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிப்பவர் விஜயேந்திர பிரசாத். இவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. துணிச்சலான ஒரு திரைப்படத்தை மத நம்பிக்கைகளிலோ அரசியல் விஷயங்களிலோ தலையிடாமல் தேடுதல் என்ற மென்மையான ஒரு விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு சிறப்பான ஒரு திரைப்படத்தை தந்துள்ளார் இயக்குநர் கபீர் கான். இந்தப் படத்தின் மையப் பாத்திரமான ஹர்ஷாலினியின் கதாபாத்திரத்தை அழகாக மெருகேற்றியிருக்கும் இயக்குநர் கபீர் கான் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிறப்பாகவே செதுக்கியுள்ளார்.

உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு வசூலை வாரிக்குவித்துக் கொண்டிருக்கும் இத்திரைப்படம் விமரிசகர்களாலும் பாராட்டுப்பெறுவது சிறப்பு. படத்தின் இறுதிக் காட்சிகள் நம்பமுடியாத அளவிற்கு இருந்தாலும் திரைப்படங்களில் மட்டுமே சாத்தியமாகும் சில விஷயங்களை நாம் ரசித்து வரவேற்கிறோம். ஆரம்பத்தில் கூறியது போல புனைவுகள் வெறும் நிழல்கள் அல்ல, என்றேனும் நிஜமாகும் சாத்தியத்தை தன்னுள் ஒளித்துவைத்திருக்கும்.  சின்னஞ் சிறிய விதைகள் பெரும் விருட்சமாகும் அவ்வகையில் பஜ்ரங்கி பாய்ஜான் ஒரு நல்விதை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.