ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பத்ம விருது: கடைசிவரை நிராகரிக்கப்பட்ட எம்.எஸ்.வி!

வடக்கு, தெற்கு என்பதைத் தாண்டி திறமையிலும் பங்களிப்பிலும் ஏதாவது வித்தியாசம் உண்டா?

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:58 am

ச. ந. கண்ணன்

லதா மங்கேஷ்கருக்கு 1969ல், முதல் பத்ம விருது வழங்கப்பட்டது. பத்மஸ்ரீகூட இல்லை, நேராக பத்ம பூஷன். ஆஷா போஷ்லேவுக்கு மிகத் தாமதமாக (2008) கொடுக்கப்பட்டாலும், பத்ம விருதுகளிலேயே மிகவும் உயரியதான பத்ம விபூஷன் கிடைத்தது. (அதற்கு முன்பே 2000ம் வருடத்தில் அவருக்கு பால்கே விருது அளிக்கப்பட்டது.) நம்ம ஊர் எஸ். ஜானகி 1957லிருந்து சினிமாவில் பாடுகிறார். 55 வருடங்களுக்குப் பிறகுதான் முதல் பத்ம (பூஷன்) விருது பாக்கியம் கிடைத்தது. கோபம் கொண்டு அவர் அந்த விருதை வாங்க மறுத்துவிட்டார். ஆனால், கடைசிவரை எம்.எஸ்.வி மீது பத்ம விருதின் நிழல் கூட படவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை!

லதா மங்கேஷ்கர், ஆஷா போஷ்லே ஆகியோருக்கும் எம்.எஸ்.விக்கும் வடக்கு, தெற்கு என்பதைத் தாண்டி திறமையிலும் பங்களிப்பிலும் ஏதாவது வித்தியாசம் உண்டா?

சமூக சேவை, இலக்கியம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பத் துறை, வர்த்தகம், மருத்துவம், விளையாட்டு போன்ற துறைகளில் தனித்துவமாக சாதனை புரிந்தவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள், சாதி, தொழில், பால் இன வேறுபாடின்றி வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவிக்கிறது. பத்ம விருதுகள் - பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ என்று ரகம் பிரிக்கப்பட்டவை. ஆனால், திறமையைத் தாண்டி தெற்கு, வடக்கு என்று பேதம் பார்ப்பதுதான் இந்த விருதின் மீதான மதிப்பைக் கேள்விக்குறியாக்குகின்றன.

2012-ம் ஆண்டு, மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோருக்கான பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியபோது இவ்வாறு கூறினார்:

எம்.எஸ்.விஸ்வநாதன், மற்றும் டி.கே. ராமமூர்த்தி ஆகியோர் பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு தேசிய விருது, பத்ம விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது. சென்ற ஆண்டுக்கான பத்ம விருதுக்கு இவர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன். இருப்பினும், மாநில அரசுக்கு எதிரான கருத்தினை உடைய மத்திய அரசு, அதற்கு செவி சாய்க்கவில்லை. “ஜனாதிபதி அவார்டு வேண்டாம், ஜனங்க அவார்டு போதும்” என்று இங்கிதம் தெரிந்த சங்கீத வித்வான் எம்.எஸ்.வி. கூறினாலும்; நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

எம்.எஸ்.வி.க்கு பத்ம விருது வழங்கப்படாதது குறித்து ஏவிஎம் சரவணணும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இசை மேதையான எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருது வழங்காதது வருத்தம் அளிக்கிறது. பத்ம விருதுக்குப் பரிந்துரை செய்து தாம் பமுறை கடிதம் எழுதியுள்ளதாகவும் எம்.எஸ்.வி.க்கு பின்னால் வந்து சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் எம்.எஸ்.வி.யின் சாதனைகளுக்கு அங்கீகாரம் தர மறுத்துவிட்டதாக அவர் தன் இரங்கல் குறிப்பில் கூறியுள்ளார்.

பல ஆண்டுகளைப் போல 2015-ம் ஆண்டுக்கான பத்ம விருதுக்கும் எம்.எஸ்.வி. பரிந்துரைக்கப்பட்டார். (1897 பேர் பரிந்துரைக்கப்பட்டார்கள். அந்தப் பட்டியலில் 1864-ம் இடத்தில் எம்.எஸ்.வி. உள்ளார்) ஆனால் அப்போதும் அவருக்கு பத்ம விருதை அளிக்க மத்திய அரசு முன்வரவில்லை. இப்படிப்பட்ட அவலம் வேறு எந்தவொரு திரையிசைக் கலைஞருக்காவது நேர்ந்திருக்குமா?

இசைத்துறையில் தேசிய அளவிலான விருது பெற்றவர்களும் எம்.எஸ்.வி.யும்!

லதா மங்கேஷ்கர்

1969 - பத்ம பூஷன்

1989 - பால்கே விருது

1999 - பத்ம விபூஷன்

2001 - பாரத ரத்னா

ஆஷா போஷ்லே

2000 - பால்கே விருது

2008 - பத்ம விபூஷன்

பி. சுசீலா

2008 - பத்ம பூஷன்

டி.எம். செளந்தர்ராஜன்

2003 - பத்ம ஸ்ரீ

எஸ்.பி. பாலசுப்ரமணியம்

2001 - பத்மஸ்ரீ

2011 - பத்ம பூஷன்

கே.ஜே. யேசுதாஸ்

1975 - பத்ம ஸ்ரீ

2002 - பத்ம பூஷன்

சித்ரா

2005 - பத்ம ஸ்ரீ

ஹரிஹரன்

2004 - பத்ம ஸ்ரீ

உதித் நாராயண்

2009 - பத்ம ஸ்ரீ

எஸ். ஜானகி

2013 - பத்ம பூஷன் (அவர் மறுத்துவிட்டார்)

இளையராஜா

2010 - பத்ம பூஷன்

ரஹ்மான்

2000 - பத்ம ஸ்ரீ

2010 - பத்ம பூஷன்

எம்.எஸ்.வி

?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.