சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பூலோகம் – திரை விமரிசனம்

‘ஊடகங்கள் இன்று பகாசுரப்பசியோடு அலைகின்றன. இருபத்திநான்கு மணிநேரமும் எதையாவது மென்று துப்ப அவர்களுக்கு ஏதாவது செய்தி வேண்டியிருக்கிறது. உள்ளதை உள்ளவாறு

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:54 am

உமா ஷக்தி.

‘ஊடகங்கள் இன்று பகாசுரப்பசியோடு அலைகின்றன. இருபத்திநான்கு மணிநேரமும் எதையாவது மென்று துப்ப அவர்களுக்கு ஏதாவது செய்தி வேண்டியிருக்கிறது. உள்ளதை உள்ளவாறு சொல்லிவிட்டுப் போவதில் ஒன்றும் சுவாரஸ்யமில்லை என்று அவர்கள் நம்புவதால் நாட்டு நடப்புகளுக்குள் நாடகத்தைப் புகுத்த வேண்டிய கடமை அவர்களைக் கண்சிமிட்டி அழைக்கிறது’ – மாலன் (தினமணி 28.12.2015 இதழ்)

ஃபார்ச்சூன் என்ற ஆங்கில பெயரில் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி அது. சர்வதேசப் புகழ் என்பதே அதன் உரிமையாளர் தீபக்கின் (பிரகாஷ்ராஜ்) லட்சியம். குத்துச்சண்டை வீரரான தன் அப்பாவை தோற்கடித்தவனின் மகன் ஆறுமுகத்தைக் அதே போல குத்துச் சண்டைப் போட்டியில் கொல்வதையே தன் லட்சியமாகக் கொண்டவன் பூலோகம் (ஜெயம் ரவி). அவனை உயிராய்க் காதலிக்கும் திரிஷா, இந்தப் பின்னனியில் பூலோகத்தின் மீது தீபக் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் சதிவலை எனச் சுழலும் படம்தான் பூலோகம். புலி வாலைப் பிடித்தவன் அதை விடுவது அத்தனை சுலபமல்ல. அது போலத் தான் ஒரு லட்சியத்தை தீவிரமாக தனக்கென கொண்டவன் அதை எட்டும் வரை ஒரு நொடி கூட அசரமாட்டான். தீபக்கின் லட்சியம் கொள்ளை லாபம், பூலோகத்தின் லட்சியம் பழிக்குப் பழி. இப்படி இருவரின் லட்சியங்களும் ஒரு நேர்க்கோட்டில் சந்திக்கையில் தீபக் பூலோகத்தைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி தன் வெற்றிப்பாதையை விரிவுபடுத்துகிறான். இடையில் நடக்கும் ஆவேசமான போராட்டமும் பூலோகத்தின் மனமாற்றமும் தான் கதையின் முக்கிய பகுதிகள். 

இந்த பூமி யாருக்கு சொந்தம்? உழைப்பவனுக்குத் தான் என்பது விடையாகச் சொன்னாலும் உழைப்பவன் சுரண்டப்பட அவனை சுரண்டி வாழ்பவன் எப்போதும் பணபலம் படைத்தவனாக இருப்பது உலகம் எங்கும் நடந்து கொண்டுதானிருக்கிறது. இப்படி படத்தின் பெயரிலிருந்து சொல்ல வந்த கருத்துக்களை நயமாகச் சொன்னதற்கே பூலோகத்தைப் பாராட்டலாம். பரபரப்பான காட்சியமைப்பால் ஒவ்வொரு ப்ரேமும் அனல் தெரிப்பதும் இப்படத்தின் சிறப்பு.

படத்தின் முதல் பாதியில் பகை, குத்துச் சண்டை போட்டி, அதன்பின் பூலோகத்தின் மனமாற்றம் என்று ஒரே வேகத்தில் போய்க் கொண்டிருந்தாலும், அலுப்பூட்டும் சில பன்ச் வசனங்களும், காட்சிகளும் சொல்வதை திரும்பச் சொல்லுதல் போன்ற தொய்வுகளும் படத்தின் வேகத் தடையாகின்றன. தன் உடல் முழுவதும் காதலனின் முழு உருவத்தை பச்சைக் குத்திக் கொள்ளும் பாசப் பெண்ணாக திரிஷா. படம் முழுவதும் வந்தாலும் அழுத்தமான காட்சிகள் அவருக்கு இல்லை. ஆனாலும் ரவியை காதலிக்கும் பெண்ணாக முதல் பாதியிலும் அவரை ஊக்கப்படுத்தி பயிற்சியும் அளிக்கும் அன்பு மனைவியாக் இரண்டாம் பகுதியிலும் ஜொலிக்கிறார். திரிஷாவின் வெற்றிக்கான ரகசியம் வெட்கம் கலந்த அந்த மென் சிரிப்பும், மெல்லிய இடையும், மிகையற்ற நடிப்பும் என்றே சொல்லலாம். ஜெயம் ரவியைப் பொருத்தவரையில் வலுவான கதாபாத்திரங்களாக பேராண்மையில் களம் இறங்கி,  தனி ஒருவன் படத்தின் மூலம் தொடர்ந்து, தற்போது பூலோகத்திலும் வெகு சிறப்பாக நடித்து தமிழ்த்திரையில் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். எம் குமரன் படத்துக்குப் பிறகு குத்துச்சண்டை வீரராக நடிப்பில் அச்சு அசல் ஒரு பாக்ஸராகவே ஆக்ரோஷம் காட்டியுள்ளார். நடனமும் குரலும் அந்தளவு கைகொடுக்காவிட்டாலும் உக்கிரமான உடல்மொழியும், நடிப்பும் அவரை மெருகேற்றி நன்றாகவே காப்பாற்றுகிறது.

இந்தப் படத்தில் கைத்தட்டல் வாங்குவது வசனங்கள். தன்னுடைய மாணவர் இயக்குநர் கல்யாண் கிருஷ்ணனின் முதல் படத்துக்கு வசனம் எழுதியுள்ளவர் அவருடைய வாத்தியார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். ஊடகங்களை சாடுவதிலிருந்து, ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஏன் வெல்ல முடிவதில்லை என்பது வரை அழுத்தமான வசனங்கள். குத்துச்சண்டை அளவிற்கு சொற்களாலான ஆயுதமும் சிறப்பாக இருந்தமைக்கு காரணம் கூரான வசனங்கள்தான். ஒன்றா ரெண்டா வில்லன்கள் என்று எண்ணும் அளவுக்கு படம் முழுக்க எண்ணற்ற வில்லன்கள். கதை ஆரம்பத்தில் ஆறுமுகம், அதன்பின் அர்பித் ரன்கா (இவர் மகாபாரதம் தொலைக்காட்சி தொடரில் துரியோதனனாக நடித்தவர்), அதன் பின் திரிஷா படிக்கும் கல்லூரியில் பொலிடிக்கல் சயின்ஸ் படிக்கும் மாணவன் பூபதி நாராயணன் (இறுதிக் காட்சியில் அவர் கைத்தட்டி தன் வில்லத்தனத்தை கைவிடுகிறார்), பிரகாஷ் ராஜின் நவீன அடியாளாக பாக்ஸிங் கோஆர்டினேட்டராக நடித்துள்ள இயக்குநர் ரவி மரியா, வெளிநாட்டு பாக்ஸர் (இவர் பிரபல குத்துச்சண்டை வீரரும், ஹாலிவுட் நடிகருமான நாதன் ஜோன்ஸ்), முக்கிய வில்லன் பிர்காஷ்ராஜ் என ஒரு வில்லப் பட்டாளத்தை களம் இறக்கியுள்ளார்கள். தவிர. குத்துச் சண்டை பரம்பரைகளான நாட்டு மருந்து பரம்பரையின் வழித்தோன்றலான பொன்வண்ணனும் (இவர் பூலோகத்தின் குரு) மற்றும் ராசமாணிக்கப் பரம்பரையைச் சேர்ந்த ஆறுமுகத்தின் குரு சண்முகராஜாவும் தோன்றுகிறார்கள் (இவர்களும் ஆரம்பத்தில் வில்லன்கள் போல சித்தரிக்கப்பட்டாலும் கடைசியில் இல்லையென நெகிழ்ச்சியாகவே நிரூபித்துவிடுகிறார்கள்). எல்லாவற்றையும் விட பெரிய வில்லன் ஒருவருடைய பழி வாங்கும் உணர்வுதான் என்பதை இப்படம் பார்வையாளர்களுக்குச் வெளிப்படையாக சொல்லாமல் உணர்த்திவிடுகிறார்கள். பாக்ஸிங் ரிங்கில் நாக் அவுட் செய்யப்பட்ட ஆறுமுகத்தின் மகனின் கண்ணீர் பூலோகத்தின் மனத்தை மாற்றிவிடுகிறது. உயிருக்குப் போராடுபவன் எதிரியாக இருந்தால் என்ன அவனுக்குக் குடும்பம் குழந்தைகள் உள்ளது அவர்களின் கதி என்ன, இப்படி தொடர் பழிவாங்குதல் மூலம் ஒருவர் எதைச் சாதித்துவிட முடியும் என்று மனம் வருந்தி இனி ஒரு போதும் குத்துச்சண்டைக்கு களம் இறங்க மாட்டேன் என்று அங்காளம்மனுக்கு மாலை போட்டு விடுகிறான் பூலோகம். இது படத்தின் முக்கியமான காட்சி. மீண்டும் சூழல் காரணமாக சண்டையிட நேர்ந்தாலும் அவன் உள்ளத்தில் ஏற்பட்ட மாற்றமும் உறுதியும் படத்தின் இறுதிக் காட்சி வரை தொடர்வது சிறப்பு.

யார் செத்தால் எனக்கென்ன எனக்குத் தேவை விளம்பரங்கள், அதன் மூலம் கொட்டிக் குவியும் பணம், உலகின் பத்து பணக்காரர் வரிசையில் இடம் பெற எதுவும் செய்வேன் என்று வெளிப்படையாகவே சொல்லும் அக்மார்க் வில்லனாக வெகு நாட்களுக்குப் பின் பிரகாஷ்ராஜின் நடிப்பு வெகு அருமை. தனியார் தொலைக்காட்சி அதிபராக ஒரு ரெடிமேட் சிரிப்பை முகத்திரையாக வைத்துக் கொண்டு அடிக்குரல் வசனங்களில் விஷம் தூவி ஒரு கார்ப்ரேட் உலகின் ஒட்டுமொத்த பிரநிதியாக தன்னை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். டி ஆர் பி ரேட்டிங் அதிகரிக்க நிஜக் கொலைகளை ஊக்கப்படுத்தும் சைலண்ட் தாதாவாக படம் முழுவதும் நிற்கிறார். வசன உச்சரிப்புக்களும், பார்வையாலும், முழியாலும் வேறு மிரட்டி எடுக்கிறார்.

இசை ஸ்ரீகாந்த் தேவா. பின்னனி இசை பல இடங்களில் விறுவிறுப்பாக இருந்தாலும் இந்தப் படத்தில் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. கானா பாடல்கள், ஒற்றை வரிப் பாடல்கள் இவை பரவாயில்லை ரகம் தான்.

சீரியஸான படத்தில் காமெடி சில இடங்களில் இசைச்செருகலாக இருந்தாலும் நையாண்டி வசனம் மூலம் அதை சமன் படுத்திவிடுகிறார் புது இயக்குநர் கல்யாண கிருஷ்ணன். இதுவரை வந்துள்ள குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களிலிருந்து பூலோகம் சற்று மாறுபட்டிருப்பது படமாக்கம் செய்யப்பட்ட நேர்த்தியும், உயிரோட்டமான வசனங்களாலும் அனைவருடைய சிறப்பான நடிப்பாலும் தான். பல இடங்களில் எதிர்ப்பார்க்கக்கூடிய காட்சிகளாகவே இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். எனினும் நல்ல கதையை தேர்வு செய்து நூல் பிடித்தாற்போல் திரைக்கதையும், கச்சிதமான கதாபாத்திரங்களின் தேர்வும் இந்தப் படத்தின் தரத்திற்கு சான்றாகின்றன.  தவிர குத்துச்சண்டையின் காட்சிகளில் பல நுணுக்கமான விஷயங்களை சேகரித்துக் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார்கள். அதிலும் ஜெயம் ரவி ஆக்ரோஷமான முகபாவங்களுடனும் உடற்பயிற்சிகளாலும் ஒரு குத்துச்சண்டை வீரராகவே உருமாறியிருக்கிறார். குறிப்பாக கடைசி இருபது நிமிடங்கள் பரபரப்பான காட்சியமைப்பால் திரையில் நிறைகிறார். அஜானுபாகுவான உருவத்துடன் சைக்கோ குத்துச் சண்டை வீரரான நேதன் ஜோன்சுடன் மோதி விழுந்து, ஒவ்வொரு சுற்றுக்கும் பலம் திரட்டி திரும்ப தாக்குவதும், ஆறுமுகம் சொல்லித் தரும் உத்தியைப் பின்பற்றி இறுதிச் சுற்றில் எதிரியை அடித்து வீழ்த்தும் காட்சியில் அரங்கமே அதிர்கிறது.

தாமதமாக வெளிவந்து சில குறைகள் இருந்தாலும், பூலோகம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.