சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பாஜிராவ் மஸ்தானி - திரை விமரிசனம்

காதல் மட்டுமே தன்னை மறக்கச் செய்யும் ஒரு அற்புத மாயத்தை நிகழ்த்தும். பாஜிராவ் பல்லல் (ரன்வீர் சிங்) ஒரு மராத்திய பிராமணன்,

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:53 am

உமா ஷக்தி.

எதுவும் என் காதுகளுக்கு கேட்பதில்லை, உன் குரலோசை தவிர;
இதயம் அறிவின் மொழித்திறனை கொள்ளையடித்துச் சென்றுவிட்டது;
வெற்றுத்தாளில் எனது ஆன்மா படித்து அசைபோடும்படிக்கு, 
ஒளி ஊடுறுவும் ஓவியத்தை வரைந்து செல்கிறது காதல்.

- ஜலாலுத்தின் முகமது ரூமி

காதல் மட்டுமே தன்னை மறக்கச் செய்யும் ஒரு அற்புத மாயத்தை நிகழ்த்தும். பாஜிராவ் பல்லல் (ரன்வீர் சிங்) ஒரு மராத்திய பிராமணன், பேஷ்வா என்று போற்றப்படும் அரசவையின் மிக முக்கியமான பதவியில் இருப்பவன். அவனுடைய அறிவாற்றலால், வீரத்தால் கிட்டத்தட்ட அரசனாகவே போற்றப்படுபவன். மஸ்தானி (தீபிகா படுகோன்) ஒரு பெர்ஷிய முஸ்லீம் தாய்க்கும் ராஜபுத்திர மன்னனுக்கும் பிறந்தவள். பேரழகி, நுண்கலைகள், பாடல், நடனம் மட்டுமன்றி போர்க் கலையிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவள். இருவரும் சந்தித்தால்? பார்த்த விழி பார்த்தபடி இருக்க, அந்தக் கணமே இருவருக்குள்ளும் உயிர் உருகி வழியும் ஓர் மின்னல்.

ஒருமித்த உணர்வு கொண்ட இருவர் உயிர் உருகும் காதலில் இணைந்தும் பிரிந்தும் தவிப்பது தான் கதை. மெல்லிய சரடாகத் தெரிந்தாலும் உக்கிரத்துடனும் உன்னதத்துடன் கையாளப்பட்ட திரைகதையால் காவிய சுவையாக மாறுகிறது ’பாஜிராவ் மஸ்தானி எனும் இத்திரைப்படம். உண்மையில் நிகழ்ந்த, வரலாற்றில் உள்ள மறக்க முடியாத காதல் கதைகளில் இதுவும் ஒன்று.

அழகழகான மாளிகைகள், விதானங்கள், அதிலும் மஸ்தானி மகாலும், கண்ணாடி மாளிகையும் கண் கவர் அழகு. உடையலங்காரம் மிகவும் சிரத்தையாக செய்துள்ளார்கள். எத்னிக் என்று புகழும்படியான ஆடை அணிகள், இந்தப் படத்தில் காட்சியமைப்புகளும் கச்சித கதாபாத்திரங்களின் தேர்வும் மிக அருமை.

எல்லாவற்றையும் விட இப்படத்தை வேறொரு தளத்திற்கு உயர்த்தியவர் தீபா படுகோன். அவரின் தோற்றமும் நடிப்பும். ஆரம்பம் முதல் இறுதிக்காட்சி வரை திரையில் நிறைகிறார். ஆவேசமான நடிப்பாகட்டும், கதக் போன்ற நடனமாகட்டும், வெட்கம் துறந்து காதலை வெளிப்படுத்தும் உறுதியான விழிகளின் கனலாகட்டும் மஸ்தானியை அழியாச் சித்திரமாகிவிட்டார். குறிப்பாக பாஜிராவின் தாய் தன்னை ஏற்றுக் கொள்ளாமல் அவமரியாதை செய்கின்ற போதும், முதல் மனைவி காஷிபாய் (பிரியங்கா சோப்ரா) உடனான காட்சிகளில் ப்ரியத்தையும் அதே சமயம் மெல்லிய குற்றவுணர்வையும் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார். படத்தின் இறுதிக் காட்சி காதலின் மீது யுகம் யுகமாய் நம்பிக்கை ஏற்படுத்தும். ரன்வீர் சிங்கின் நடிப்பும், உடல் மொழியும், வசன உச்சரிப்பும் வெகு சிறப்பு. பிரியங்கா சோப்ரா ஒரு துன்பியல் சித்திரம் போல காட்சிப்படுத்தப்பட்டாலும் அவருடைய பங்கை செம்மையாகவே செய்கிறார். பாஜிராவின் தாய் ராதாபாய நடித்துள்ள தன்வி அஸ்மியின் மிகையற்ற நடிப்பும் இப்படத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றன.

இந்து முஸ்லிம் வேறுபாடுகள், போரின் விதிகள், அண்ணன் தம்பி உறவு மற்றும் மெல்லிய பகையுணர்வு, வினாயகர் வழிபாடுகள், என படத்தின் பின்னனியாக இவை இருந்தாலும், விஞ்சியதாக இருப்பது பாஜிராவ் மஸ்தானியின் அன்பும், மோகமும், தீவிர காதலும், ஒருவரை மற்றவர் பார்க்க முடியாத சந்தர்ப்பங்களில் உணர்வாலும் மனத்தாலும் கூட ஒன்றாக இருப்பது என இப்படத்தை அற்புதமான ஒரு காதல் கதையாகத் தான் பார்க்க முடிகிறது.

படத்தின் கலை இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மன்னரின் தர்பாரில் ஒரு நீண்ட நீர்ப் படுகை. அதன் அருகே இருக்கைகள் போடப்பட்டு மந்திரிகள் அமர்ந்திருப்பார்கள். பாஜிராவ் கட்டிய மாளிகையிலும் ஒரு அழகான ஒரு நீருற்று. படம் நெடுகிலும் அதீத காதல் வழிந்தோடுவது போல நீரும் சலசலவென ஓடிக் கொண்டிருக்கும். மழை பொழியும் இரவு நேரத்தில் மஸ்தானி சிறு தீப்பந்தத்துடன் காதலனைத் தேடி வருவதும், அவளின் மீது பித்தாகி இருந்த பாஜி தன்னுடைய குறுவாளை அவளுக்கு பரிசளிப்பதும் அப்போது விருந்தினருக்கு வெற்றிலைத் தரும் வழக்கமுடைய அவள் காதலையும் சொல்லிச் செல்வது கவிதை.  படத்தில் வசனங்களும் மிக அருமை. மொழி தெரியாமல் தவிக்கவில்லை, சப் டைட்டில் படித்துப் புரிந்து கொள்ள முடிந்தது.

படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி எனக்குப் பிடித்த இயக்குநர். இவருடைய முந்தைய படங்களில் முக்கியமான எல்லா படமும் பார்த்துள்ளேன். தேவதாஸ், குஸாரிஸ் எனக்கு மிகவும் பிடித்த படம். அதை விட பாஜிராவ் மஸ்தானி மிகவும் பிடித்தமானதாகிவிட்டது. தெள்ளிய நீரோடை போன்ற கதை, அழுத்தமான திரைக்கதை, அருமையான நடிப்பு, ஒத்திசைவான ஒளிப்பதிவு, அவரே இசையமைத்த அருமையான பாடல்கள் என்று கண்ணுக்கும், மனத்துக்கும் புத்திக்கும் விருந்தளிக்கிறார். திரைக்கு வெளியே யாரும் இருப்பதில்லை, படம் ஆரம்பித்த நொடியிலிருந்து பாஜிராவுடன் நாமும் எல்லா இடங்களுக்கும் பயணிக்கிறோம். அப்படியொரு மாயத்தை ஒரு அசாதாரணக் கலைஞனால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். சஞ்சய் லீலா பன்சாலி இந்தியா திரையுலகுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம். எனக்கு சினிமாவைத் தவிர வேறு எதுவுமே தெரியாது என்று அடக்கமாகச் சொல்லுவார். அதை சரியாக தெரிந்து வைத்திருப்பது ரசிகர்களுக்கு கிடைத்த பரிசு.

ஒரு முழுமையான திரை அனுபவத்தைப் பெற இத்திரைப்படத்தை நிச்சயம் பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.