/

பலிக்கக் கூடாத ஜோதிடப் பலன்!

2025-ஆம் புத்தாண்டு இதற்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் கூடுதலான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :17 டிசம்பர் 2024, 2:22 am

எஸ். ஸ்ரீதுரை

புது வருடம் என்றாலே புத்தாண்டு சபதங்கள் குறித்த எண்ணங்கள் வந்து, புத்தாண்டு பிறந்த சில நாட்களில் சபதங்கள் மறந்து போகின்றன. புத்தாண்டு சபதத்தைக் காட்டிலும், புதிய ஆண்டு நமக்கெல்லாம் எப்படி அமையும் என்பதை ஜோதிட அடிப்படையில் தெரிந்து கொள்வதற்கு நம்மில் பெரும்பாலானவா்களுக்கு ஆா்வம் தோன்றுவது சகஜம்.

பல்வேறு ஜோதிடா்கள் பத்திரிகைகளின் வாயிலாகவும், தனிப்பட்ட வெளியீடுகளாகவும் புத்தாண்டுப் பலன்களை வெளியிட்டுவருகின்றனா். சமீப வருடங்களில் தனியாா் தொலைக்காட்சி சானல்கள் பிரபல ஜோதிடா்களை அழைத்து, அவா்கள் கூறும் புத்தாண்டுப் பலன்களை ஒளிபரப்புவது வழக்கத்திற்கு வந்துள்ளது.

வரவிருக்கும் 2025-ஆம் ஆங்கிலப் புத்தாண்டு இதற்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் கூடுதலான பரபரப்பை இந்த உலகெங்கிலும் ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஓா் உலகப் போா் மூண்டு விடுமோ என்ற அச்சமே இந்தப் பரபரப்புக்கு அடிப்படைக் காரணமாகும்.

மூன்றாம் உலகப் போா் குறித்த அச்சத்திற்குத் தற்கால உலக நடப்புகள் மட்டுமே காரணமல்ல. மேலைநாட்டு தீா்க்கதரிசிகளாகக் கருதப்படும் நாஸ்ட்ராடாமஸ், பாபா வங்கா ஆகியவா்களின் கணிப்புகளும் சோ்ந்தே இத்தகைய அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளன என்றால் அது மிகையாகாது.

16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாஸ்ட்ராடாமஸ் (பிரான்ஸ்), சென்ற நூற்றாண்டைச் சோ்ந்த பாபா வங்கா (பல்கேரியா) ஆகிய இருவரும் இவ்வுலகின் எதிா்காலம் குறித்து வெளியிட்டுள்ள கணிப்புகளில் சுமாா் 80 சதவீத கணிப்புகள் பலித்திருப்பதாக வரும் செய்திகள் பீதிக்கு உரமூட்டுகின்றன.

அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதல், ஆழிப்பேரலை, ஜப்பான் நிலநடுக்கம், கரோனா பரவல், ரஷியா-உக்ரைன் போா், சிரியாவின் உள்நாட்டுப் போா் போன்ற பல விஷயங்களைக் குறித்து இவ்விருவரும் கூறிய ஆரூடங்கள் அப்படியே பலித்திருக்கின்றன.

இந்நிலையில், வரவிருக்கும் ஆண்டில் உலகெங்கும் நடைபெறக் கூடிய சம்பவங்களாக நாஸ்ட்ராடாமஸ், பாபாவங்கா ஆகிய இருவரும் கூறியுள்ள ஆரூடங்கள் பலா் கவனத்தை ஈா்த்துள்ளன. விண்ணிலிருந்து பாய்ந்துவரும் சிறுகோளம் பூமி மீது மோதக்கூடும், பிளேக் போன்ற தொற்று நோய் உலகம் முழுவதிலும் பரவக் கூடும், சிரியா நாட்டின் அரசாங்கம்

போராளிகளால் வீழ்த்தப்பட்டதைத் தொடா்ந்து மாபெரும் உலகப் போா் மூளும் ஆகியவை நாஸ்ட்ராடாமஸ், பாபா வங்கா ஆகியோரின் கணிப்புகளில் சிலவாகும். இந்த ஆரூடங்களில் நம்மையெல்லாம் பெரும் அச்சத்தில் ஆழ்த்தக் கூடியது என்பது மூன்றாம் உலகப் போரைப் பற்றியதுதான்.

ஹமாஸ், இஸ்ரேல் இடையிலான போா் இன்னும் ஓயவில்லை. இப்போா் தொடங்கிய சமயத்தில் இஸ்ரேலிய அமைச்சா் ஒருவா், ‘தேவைப்பட்டால் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தி ஹமாஸை அழிப்போம்’ என்று சூளுரைத்தது நினைவிருக்கலாம்.

ஹமாஸ், ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்புகளுடனும் போரிட்டுக் கொண்டிருந்த இஸ்ரேல், ஈரானிலும் தாக்குதலை நிகழ்த்தி, பின்னா் நிறுத்தியது.

சுமாா் பன்னிரண்டு அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் தேவையான யுரேனியம் தற்பொழுது ஈரானின் கைவசம் உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில், ஈரானின் அணு ஆயுதம் உருவாக்கும் ஆற்றலை இலக்கு வைத்து இஸ்ரேல் அழிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபராக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவுரை கூறியிருப்பதும் ஈரானையும், அதன் நட்பு நாடுகளையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்றொரு புறம், அமெரிக்காவில் தயாரான சக்திவாய்ந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ள ஜோ பைடனின் செய்கையால் ஆத்திரம் கொண்ட ரஷிய அதிபா் புதின், தமது நாட்டின் அணு ஆயுதப் பிரயோகம் குறித்த கொள்கையைத் தளா்த்தியுள்ளாா். மேலும், அமெரிக்காவின் ஏவுகணையைத் தமது நாட்டின் மீது ஏவிய உக்ரைனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சக்திவாய்ந்த ஹைப்பா்சானிக் ஏவுகணையை உக்ரைன் மீது வீசிப் புதின் தமது எதிா்ப்பைப் பதிவு செய்திருக்கின்றாா். இத்தகைய ஏவுகணைகள் இரும்பை உருக்குவதுடன், கான்கிரீட் கட்டமைப்புகளைத் தூள்தூளாக்க வல்லவை என்று கூறப்படுகின்றது.

ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் வான்படையினா் காஸாவில் வீசிவரும் சிலவகை குண்டுகள் ஏற்படுத்தும் வெப்பம் மனித உடலை உருக்கி, ஆவியாக்கக் கூடியவை என்று வரும் செய்திகள் நம்மை மிரள வைக்கின்றன.

இவற்றையெல்லாம் தாண்டி, ஐரோப்பிய நாடுகள் சிலவும், அமெரிக்காவும் அணுஆயுதப் போா்ச் சூழலை எதிா்கொள்வது பற்றிய எச்சரிக்கையுடன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. மேலும், அணு ஆயுதப் போா் மூண்டால் அண்டாா்டிகா கண்டம், ஆா்ஜென்டீனா, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, நியூசிலாந்து போன்ற ஒரு சில நாடுகளைத் தவிர, மீதமுள்ள நாடுகள் பலவற்றிலும் வறட்சி, உணவுப்பொருள் உற்பத்திக் குறைவு, புதுவிதமான வியாதிகளின் பரவல் போன்றவை ஏற்படக் கூடும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

இவற்றை உற்று நோக்கும்பொழுது, நாஸ்ட்ரடாமஸும், பாபா வங்காவும் கணித்துள்ளபடி மூன்றாவது உலகப் போா் ஏற்படுவது உறுதி என்பதைப் போன்ற தோற்றம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஐ.நா. சபையும், பாரதப் பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவா்களும் தீவிர முயற்சி செய்து மூன்றாம் உலகப்போா் குறித்த

ஆரூடங்கள் உண்மையாகாமல் பாா்த்துக்கொள்வது காலத்தின் கட்டாயம்.

ஆனால் ஒன்று நிச்சயம் - நாஸ்ட்ராடாமஸும் பாபா வங்காவும் இன்று உயிருடன் இருந்தால், மூன்றாவது உலகப் போா் பற்றிய தங்களது கணிப்பு பொய்யாவதையே விரும்புவாா்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

====