/

சுகாதாரத் துறையில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்!

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது:

News image
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
Updated On :1 பிப்ரவரி 2026, 7:37 am

இணையதளச் செய்திப் பிரிவு

சுகாதாரத் துறையில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (பிப். 1) தாக்கல் செய்து உரையாற்றினார்.

அப்போது அவர் சுகாதாரத்துறை தொடர்பாக புதிய திட்டங்கள் குறித்து பேசுகையில், ”சுகாதாரப் பணிகள் சார்ந்த தொழில்முறையினருக்கான நிறுவனங்கள் மேம்படுத்தப்படும். 10 தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் அது தொடர்பான புதிய நிறுவனங்கள் உருவாக்கப்படும்.

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள உலக சுகாதார அமைப்பின் சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையம் மேம்படுத்தப்படும். சுகாதாரத் துறையில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

கடனுதவியுடன் கூடிய மூலதன மானியத் திட்டம் தொடங்கப்படும்; 20,000-க்கும் அதிகமான கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்; கால்நடை மற்றும் துணை கால்நடை மருத்துவக் கல்லூரிகள், பரிசோதனை ஆய்வகங்கள், இனப்பெருக்க வசதிகள் ஏற்படுத்தப்படும்” என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ”வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை எட்டும் வகையில், சேவைத்துறையின் நடவடிக்கைகளுக்கு பரிந்துரைக்கும் வகையில் தொழில்நிறுவனங்கள், வேலைவாய்ப்பை வழங்கும் உயர்நிலைக் கல்விக்கான நிலைக்குழு ஏற்படுத்தப்படும்.

நிறுவன முதலீட்டுத் திட்டத்தின் மூலம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்திய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

மும்பையில் உள்ள இந்திய படைப்பாற்றல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆதரவுடன் 15,000 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் வரைகலை (அனிமேஷன்) ஒளிக்காட்சிகள், விளையாட்டு மற்றும் சித்திரக்கலை (காமிக்ஸ்) படைப்பாற்றல் ஆய்வகங்கள் உருவாக்கப்படும்” என்றார்.

summary

Union Finance Minister Nirmala Sitharaman has stated that new job opportunities will be created for young people in the healthcare sector.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.