சம்வத்ஸர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், பஞ்சவார வாரியம் என்று பிரிக்கப்பட்டிருந்தாலும், உறுப்பினர்களின் பணி என்ன என்பது நேரடியாகக் கொடுக்கப்படவில்லை. அதன் பெயர் கொண்டு ஸம்வத்ஸர வாரியம் - ஆண்டுக்கு ஒருமுறை கூடும் மேற்பார்வைக் குழு என்றும், தோட்ட வாரியம் – தோட்டப் பணிகளைக் கண்காணிப்பது என்றும், ஏரி வாரியம் - நீர் நிலைகளை நிர்வகிப்பது என்றும், பொன் வாரியம் - பொன்னின் மாற்றை காண்பதற்கும், பஞ்சவார வாரியம் - நில வரி வாரியம் (ஐந்தில் ஒரு பங்கு நில வருவாய் பெறும் குழு) என்றும் ஆயவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.