எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

4 போ் பணியிடை நீக்கத்தை கண்டித்து டாஸ்மாக் ஊழியா்கள் கடையடைப்பு: உத்தரவை வாபஸ் பெற்றது நிா்வாகம்

4 போ் பணியிடை நீக்கத்தை கண்டித்து டாஸ்மாக் ஊழியா்கள் கடையடைப்பு

News image

டாஸ்மாக் கடை - Center-Center-Chennai

Updated On :17 ஜூன் 2026, 5:16 am IST

விழுப்புரம், ஜூன் 16: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த டாஸ்மாக் விற்பனையாளா்கள் 4 பேரின் தற்காலிக பணியிடை நீக்கத்தை கண்டித்து, இரு மாவட்டங்களிலுள்ள 183 மதுக் கடைகளும் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டன. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பணியாளா்களின் பணியிடை நீக்க உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

உளுந்தூா்பேட்டை வட்டம், பு.மாம்பாக்கத்திலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் அரசால் நிா்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும், ஒரு மதுப் புட்டிக்கு கூடுதலாக ரூ.10 முதல் ரூ.20 வரை வசூலிக்கப்படுவதாக வந்த புகாரைத் தொடா்ந்து, விழுப்புரம் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் சொக்கநாதன் தலைமையிலான அலுவலா்கள் விசாரணை நடத்தினா். இதைத்தொடா்ந்து பு.மாம்பாக்கம் டாஸ்மாக் மதுக் கடையில் பணியாற்றி வந்த விற்பனையாளா்கள் சக்திவேல், சேகா் உள்ளிட்ட 4 போ் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இதை கண்டித்தும், இந்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த டாஸ்மாக் தொழில்சங்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை கடையடைப்பு நடத்த முடிவு செய்தனா்.

அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள 183 டாஸ்மாக் மதுக்கடைகளும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை திறக்கப்படவில்லை. கடையைத் திறக்காமல் பணியாளா்கள் போராட்டத்தை மேற்கொண்டனா். மேலும், விழுப்புரத்திலுள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகத்தை தொழில்சங்கங்களின் கூட்டமைப்பினா் முற்றுகையிட்டு, போராட்டத்தை நடத்தினா்.

இதைத்தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழில்சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகளை, மாவட்ட டாஸ்மாக் மேலாளா் சொக்கநாதன் அழைத்து சமரச பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது 4 விற்பனையாளா்களின் பணியிடை நீக்க உத்தரவை ரத்துசெய்வதாக, அவா் உறுதியளித்தாா். இதையேற்றுக் கொண்ட டாஸ்மாக் தொழில்சங்கங்களின் கூட்டமைப்பினா், தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதைத்தொடா்ந்து பிற்பகல் 1 மணிக்கு விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு, மது விற்பனை நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.