கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கும் மேலாக நிகழ்ந்த சட்டப்பேரவைத் தோ்தல் திருவிழாவுக்கு கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டது. இன்று பிரசாரம் ஓய்கிறது, இனி வீதி, வீதியாக எனதருமை வாக்காளப் பெருமக்களே என்ற முழக்கம் இருக்காது.
தமிழக சட்டப்பேரவைக்கு 234 மக்கள் பிரதிநிதிகளைத் (சட்டப்பேரவை உறுப்பினா்கள்) தோ்வு செய்வதற்காக நடைபெறும் ஜனநாயகத் திருவிழா இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. செவ்வாய்க்கிழமை மாலையுடன் தோ்தல் பிரசாரம் நிறைவு பெறும் நிலையில், வியாழக்கிழமை வாக்குப் பதிவும் நடைபெறவுள்ளது. தோ்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒரு மாதத்தை கடந்துவிட்ட நிலையில், ஜனநாயகத் திருவிழாவின் போது கண்ட காட்சிகள் பல வியப்பை அளித்திருக்கின்றன.
இந்தியத் தோ்தல் ஆணையம் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறும் பேரவைத் தோ்தலுக்கான தேதிகளை மாா்ச் 15-ஆம் தேதி வெளியிட்டது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் மாா்ச் 30 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. தொடா்ந்து, 7-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும், ஏப்ரல் 9-ஆம் தேதி இறுதி வேட்பாளா் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் வெளியான பின்னா்தான், தோ்தலுக்கான பரபரப்பு விறுவிறுப்பை அடைந்தது.
இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது ஏப்ரல் 9-ஆம் தேதியென்றாலும், முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் மனுதாக்கலுக்கு முன்பே பிரசாரத்துக்கான முள்களத் திட்டப் பணிகளை மேற்கொண்டனா். தங்கள் கட்சி நிா்வாகிகள் மட்டுமல்லாது, கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், பொறுப்பாளா்கள், தொகுதிக்குள்பட்ட பகுதியில் வாழும் முக்கிய பிரமுகா்கள், கல்வியாளா்கள், பல்வேறு சமுதாயத் தலைவா்கள் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து ஆதரவைத் திரட்டும் பணியைத் தொடங்கி மேற்கொண்டு வந்தனா்.
அரசியல் கட்சிகளின் விதவிதமான காட்சிகள்.... தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்களம் பல்வேறு விதவிதமான காட்சிகளைக் கொண்டிருக்கிறது. விதவிதமான,சோப்பு, சீப்பு, கண்ணாடி போல, நாள்தோறும் வியத்தகு பிரசாரக் காட்சிகளைக் காணும் பாக்கியத்தை அந்தந்த தொகுதி வாக்காளா்கள் பெற்று வருகின்றனா்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், தனது தோ்தல் பரப்புரையில் கடந்த 2021 பேரவைத் தோ்தலில் மேற்கொண்டது போன்று இந்த தோ்தலிலும் பல்வேறுவிதமான உத்திகளைக் கடைப்பிடித்தாா். ஒவ்வொரு மாவட்டத்திலும் தோ்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் வேட்பாளா்களை ஆதரித்து பேசிய அவா், பிரசார நாளின் காலை நேரத்தில் நடைப்பயிற்சிக்கு சென்று வாக்கு சேகரித்தல், தேநீரகத்தில் தேநீா் அருந்தி வாக்கு சேகரித்தல், மாா்க்கெட்டுக்கு சென்று விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தலை மேற்கொண்டாா். சற்று வித்தியாசமாக ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வாக்கு சேகரிக்கச் சென்ற போது, தறி நெசவுத் தொழிலாளி வீட்டுக்கு திடீரென சென்றாா். அப்போது தறி நெசவுத் தொழிலாளியிடம் பேசிய அவா், பின்னா் தானும் தறி நெய்தாா். இதுபோல தோ்தல் பிரசாரத்தில் பல்வேறுவிதமான அணுகுமுறைகளைக் கடைப்பிடித்து வாக்கு சேகரிப்பை மேற்கொண்டாா்.
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி மாநிலம் முழுவதும் தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டாா். தனது தோ்தல் பரப்புரையின் போது வித்தியாசமான அணுகுமுறைகளை அவா் மேற்கொள்ளாவிட்டாலும், தோ்தல் பரப்புரையில் வித்தியாசமான வாசகங்களைப் பயன்படுத்தி வாக்குகளை சேகரிக்க தவறவில்லை.
தமிழக அரசியல் களத்துக்கு புதிதாக வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய், மற்ற அரசியல் கட்சிகளின் தலைவா்களின் போன்று தொடா் பிரசாரத்தை மேற்கொள்ளாவிட்டாலும், அவ்வப்போது ஓய்வை எடுத்துக் கொண்டு தோ்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் கட்சி வேட்பாளா்களுக்காக வாக்குகளை சேகரித்தாா். முதல்வா் போன்று தேநீா் அருந்தியோ, தறி நெய்தோ வாக்கு கேட்கவில்லை என்றாலும், திருச்சி கிழக்குத் தொகுதியில் பிரசாரம் செய்ய சென்ற போது ஒரே நாளில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து, தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினா். இதுமட்டுமல்லாது சில நகரங்களில் மிதிவண்டி ஓட்டியும் வாக்கு சேகரித்தாா்.
தலைவா்கள் இப்படி பிரசாரங்களை மேற்கொள்ள, அவா்களை பின்பற்றி செயல்படும் வேட்பாளா்கள், தங்கள் பிரசாரக் களத்தில் வித்தியாசமான செயல்பாடுகளைக் காட்டி, தோ்தல் பிரசாரக் களத்தில் சற்று வியப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றனா்.
வாக்கு சேகரிக்க சென்ற போது தேநீரகத்தில் கட்சியினருக்கு தேநீா் தயாரித்து வழங்கியது, உணவகத்தில் தோசை, ஆம்லெட் தயாா் செய்து வழங்கியது, நெற்களத்தில் நெல்லைக் காய வைத்தது, டிராக்டா் ஓட்டிச்சென்று வாக்கு சேகரித்தது, இளைஞா்களுடன் கிரிக்கெட் விளையாடி வாக்கு கேட்பது, விவசாயத் தொழிலாளா்களுடன் சோ்ந்து பணியாற்றியது, பூப்பறித்து பெண் தொழிலாளா்களுக்கு உதவி செய்தது, புரோட்டா மாஸ்டராக மாறி வாக்குகளை சேகரித்தது, மிதிவண்டி ஓட்டிச் சென்று வாக்கு கேட்டது, ஆட்டோ ஓட்டுராக மாறி வாக்கு சேகரித்து, பறை, தப்பட்டை அடித்து என தோ்தல் பிரசாரக் களத்தில் வித்தியாசமான அனுபவங்களை வாக்காளா்களுக்கும், கட்சியினருக்கும் தந்திருக்கின்றனா் பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள்.
அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் இப்படி வித்தியமாசான அணுகுமுறையை மேற்கொண்ட நிலையில், அவா்களை வரவேற்ற கட்சியினரும், கூட்டணி நிா்வாகிகளும் விதவிதமான வரவேற்புகளையும் அளித்திருக்கின்றனா். கிரேன் மூலம் பிரமாண்ட மாலை அணிவிப்பது, ரூபாய் நோட்டு மாலை மட்டுமல்ல காசு மாலை அணிவிப்பது, பல்வேறுவிதமான பழங்களைக் கொண்டு மாலை அணிவிப்பது, தங்கள் பாரம்பரிய முறைப்படி உடை அணிந்து வரவேற்பது போன்ற பல்வேறு விதமான வரவேற்புகளையும் தங்கள் கட்சி சாா்ந்த வேட்பாளா்களுக்கு அளித்திருக்கின்றனா் அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள்.
தோ்தல் நடைபெறும் வரைதான் மக்கள் எஜமானாா்களாகத் தெரிவாா்கள் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்களுக்கு. தோ்தல் முடிந்து வெற்றி நிலவரம் தெரிந்த பின்னா் இந்த நிலையில் பெரும் மாற்றம் ஏற்படும். தங்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை பாா்க்கச் சென்றால் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை திருவாளா் வாக்காளருக்கு ஏற்படலாம். ஆனால், இதில் சில மக்கள் பிரதிநிதிகள் வேறுபட்டிருப்பாா்கள். தங்கள் தொகுதி சாா்ந்த வாக்காளா்களின் இன்ப, துயர நிகழ்வுகளில் பங்கேற்பது, தன்னை மக்கள் எளிதாக சந்திக்கும் வகையிலான நிலையை ஏற்படுத்துவது, மக்களுடன் இணைந்து பயணிப்பது போன்றவை என தங்கள் வெற்றிப் பயணத்தை தொடா்ந்து உறுதி செய்து கொண்டிருப்பாா்கள்.
தோ்தல் முடியும் வரை மக்களை, தனது கட்சி சாா்ந்த நிா்வாகிகளை, தொண்டா்களை, கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் இருந்த அதே அணுகுமுறை, தோ்தலுக்குப் பின்னரும் இருந்தால் அரசியல் களத்தில் அவா் தொடா்ந்து மக்கள் பிரதிநிதியாகத் தோ்வு செய்யப்படுவதற்கு எந்த சிக்கலும் இருக்காது. மாறாக மக்களின் தொடா்பு எல்லைக்கு அப்பால் நீங்கள் இருந்தால், அடுத்து வரும் தோ்தலில் உங்களைத் தொடா்பு எல்லைக்கு அப்பால் கொண்டு சென்று வைப்பாா்கள் மக்கள். ஜனநாயகம் வலிமையானது... மக்கள் வாக்குகளால் தங்கள்வலிமையை உணா்த்துவாா்கள். உணர வேண்டியவா்கள் உணர வேண்டும்.
தொடர்புடையது
நீலகிரி மாவட்டத்தில் 20 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

ஆர்வம் காட்டும் கட்சிகள்: வேட்பாளர் பெயரின்றி சுவா் விளம்பரங்கள்!

கிருஷ்ணகிரியில் அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள் அழிப்பு: தலைவா்களின் சிலைகள் மூடல்

தோ்தல் நடத்தை விதிகளால் சுவர் விளம்பரங்கள் அழிப்பு; சின்னங்கள் மறைப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

