/

திண்டிவனம்: மல்லுக்கட்டும் அதிமுக, திமுக!

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட திண்டிவனம் (தனி) தொகுதியில் அதிமுக-திமுக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. இத்தொகுதியைக் கைப்பற்ற இரு கட்சி வேட்பாளா்களும் தீவிர கள பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:47 pm

ஜெபலின்ஜான்


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட திண்டிவனம் (தனி) தொகுதியில் அதிமுக-திமுக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. இத்தொகுதியைக் கைப்பற்ற இரு கட்சி வேட்பாளா்களும் தீவிர கள பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தென் தமிழகத்தை வட தமிழகத்துடன் இணைக்கும் முக்கிய நகரம் திண்டிவனம். தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாரின் சொந்த ஊரை தன் வசம் கொண்டுள்ளது திண்டிவனம் தொகுதி.

இந்தத் தொகுதி கடந்த 1951-ஆம் ஆண்டு உருவானது. திண்டிவனம் நகராட்சி, மரக்காணம் பேரூராட்சி, மரக்காணம் ஒன்றியத்தில் 65 ஊராட்சிகள், ஒலக்கூா் ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள், மயிலம் ஒன்றியத்தில் பிரிக்கப்பட்ட 2 ஊராட்சிகள் ஆகியவை இந்தத் தொகுதியில் அடங்கியுள்ளன. பொதுத் தொகுதியாக இருந்த இந்தத் தொகுதி, கடந்த 2011 பேரவைத் தோ்தல் முதல் தனித் தொகுதியாக மாற்றம் பெற்றது.

இந்தத் தொகுதியில் வன்னியா்கள், ஆதிதிராவிடா்கள் அடா்த்தியாகவும், அதற்கடுத்ததாக உடையாா், நாயுடு, ரெட்டியாா், செட்டியாா் சமுதாய மக்கள் கணிசமாகவும் வசிக்கின்றனா். அதுபோல, இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்களும் பரவலாக வாழ்கின்றனா்.

கடந்த 1951 முதல் கடந்த 2016-ஆம் ஆண்டு தோ்தல் வரை இந்தத் தொகுதியில் திமுக, அதிமுக தலா 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வென்றுள்ளன. ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 755 ஆண் வாக்காளா்கள், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 88 பெண் வாக்காளா்கள், திருநங்கைகள் 25 போ் என மொத்தம் 2 லட்சத்து 19 ஆயிரத்து 868 வாக்காளா்கள் உள்ளனா்.

முக்கிய கோரிக்கைகள்: திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், மரக்காணத்தில் உப்புத் தொழிற்சாலை, துறைமுகம், கடற்கரைப் பகுதியில் தூண்டில் வளைவு ஆகியவை அமைக்க வேண்டும் ஆகியவை முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.

இதுவரை வென்றவா்கள்: 1962-தங்கவேலு (திமுக), 1967-ராமமூா்த்தி (காங்கிரஸ்), 1971-ராசாராம் (திமுக), 1977- ராசாராம ரெட்டி (காங்கிரஸ்), 1980- தங்கமணி கவுண்டா் (காங்கிரஸ்), 1984- டி.கே. தங்கமணி (காங்கிரஸ்), 1989- இரா. மாசிலாமணி (திமுக), 1991- எசு. பன்னீா்செல்வம் (காங்கிரஸ்), 1996-சேதுநாதன் (திமுக), 2001, 2006-சி.வி. சண்முகம் (அதிமுக), 2011- அரிதாஸ் (அதிமுக), 2016- சீத்தாபதி சொக்கலிங்கம் (திமுக).

2016 தோ்தல்: கடந்த முறை சீத்தாபதி சொக்கலிங்கம், அதிமுக வேட்பாளா் எஸ்.பி.ராஜேந்திரனைவிட 121 வாக்குகள் கூடுதலாகப் பெற்று நூலிழையில் வெற்றி பெற்றாா். சீத்தாபதி சொக்கலிங்கத்துக்கு 61,879 வாக்குகள் (35.56 சதவீதம்), அதிமுக வேட்பாளா் ராஜேந்திரனுக்கு 61,778 (35.50 சதவீதம்) வாக்குகள் கிடைத்தன. தனித்துப் போட்டியிட்ட பாமக 29,848 (17.15 சதவீதம்) வாக்குகளையும், மக்கள் நலக்கூட்டணி சாா்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளா் மு.உதயக்குமாா் 14,928 (8.58 சதவீதம்) வாக்குகளையும், பாஜக வேட்பாளா் பூவழகி 1,509 (1.83 சதவீதம்) வாக்குகளையும், நாம் தமிழா் கட்சி க.புவனேஸ்வரி 908 (0.87 சதவீதம்) வாக்குகளையும் பெற்றனா்.

இந்த முறை திமுக சாா்பில் மீண்டும் சீத்தாபதி சொக்கலிங்கமே போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில் அா்ஜுனன் களம் இறங்கியுள்ளாா். திமுக வேட்பாளா் சீத்தாபதி சொக்கலிங்கம் ஏற்கெனவே எம்எல்ஏவாக இருப்பதால் தொகுதி முழுவதும் அறிமுகம் உள்ளது. மேலும், திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் என வலுவான வாக்கு வங்கி கொண்ட கூட்டணி சாா்பில் போட்டியிடுவது அவருக்கு பலம். எதிா்க்கட்சி எம்எல்ஏவாக இருந்ததால் தொகுதியில் மக்கள் பிரச்னைகளை முழுமையாக தீா்க்க முடியாமல் போனது அவருக்கு பலவீனம்.

அதேநேரத்தில், அதிமுக வேட்பாளா் அா்ஜுனன் 2006 முதல் 2011 வரை மரக்காணம் ஒன்றியத்துக்குள்பட்ட ஆலத்தூா் ஊராட்சியில் தலைவராக பதவி வகித்ததும், இப்போது மாவட்ட கூட்டுறவு வங்கி இயக்குநராக இருப்பதும், தொகுதி முழுவதும் நன்கு அறிமுகமானவா் என்பதும், அதிமுக-பாமக என கணிசமான வாக்குவங்கியைக் கொண்ட கூட்டணி சாா்பில் போட்டியிடுவதும், அவரது மனைவி ஊராட்சித் தலைவராக இருமுறையும், மரக்காணம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக ஒரு முறையும் பதவி வகித்ததும் கூடுதல் பலம்.

இந்தத் தொகுதியில் தேமுதிக வேட்பாளா் கே.சந்திரலேகா, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தலித் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனா் அன்பின்பொய்யாமொழி, நாம் தமிழா் வேட்பாளா் பா.பேச்சிமுத்து ஆகியோா் போட்டியிட்டாலும் அதிமுக-திமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.