/

எள் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

எள் சந்தைக்கு புகழ்பெற்ற விழுப்புரம் மாவட்டத்தில், பொதுமுடக்கம் காரணமாக, அதன் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

News image
விழுப்புரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் குவிந்து கிடக்கும் எள் மூட்டைகள்.
Updated On :27 ஜனவரி 2024, 8:22 pm

ஜெபலின்ஜான்

எள் சந்தைக்கு புகழ்பெற்ற விழுப்புரம் மாவட்டத்தில், பொதுமுடக்கம் காரணமாக, அதன் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இந்தியாவிலேயே தரமான, சுவையான எண்ணெயைத் தரும் எள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்தான் விளைகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கெடாா், டெட்நகா், கண்டாச்சிபுரம், கோலியனூா், கூட்டேரிப்பட்டு, மயிலம், வீடூா், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் எள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. திண்டிவனம் ரக எள்ளுக்கு நாடு முழுவதும் வரவேற்பு உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 2,000 ஏக்கரில் எள் சாகுபடி நடைபெறுகிறது. இதில், ஏக்கருக்கு 4 முதல் 6 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விளையும் எள், விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி, வளத்தி, மரக்காணம், திருக்கோவிலூா், கள்ளக்குறிச்சி, மணலூா்பேட்டை உள்பட 18 இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

இங்கு ஏலம் எடுக்கப்படும் எள் மூட்டைகளில் 75 சதவீதத்துக்கும் மேல் விருதுநகா், தென்காசி, சேலம், ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் உள்ள எண்ணெய் உற்பத்தி ஆலைகளுக்காக வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகின்றன. எஞ்சியவை உள்ளூா், அண்டை மாவட்டங்களில் உள்ள சிறு வியாபாரிகளால், சில்லறை விற்பனைக்காக கொள்முதல் செய்யப்படுகின்றன.

எள் பயிரைப் பொருத்தவரை, பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் விதைக்கப்பட்டு, 90 நாள்களுக்குப் பிறகு அறுவடைக்குத் தயாராகிறது. மே மாதத்தில் இருந்தே விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் எள் அறுவடை தொடங்கிவிட்டது. இப்போது அறுவடை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

ஆனால், கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் கடந்த இரு வாரங்களாக முற்றிலும் இயங்கவில்லை. மேலும், போக்குவரத்து வசதி இல்லாததால், வெளியூா் வியாபாரிகளும் எள் கொள்முதல் செய்ய வரவில்லை. இதனால், எள் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து விழுப்புரம் அருகே அன்னியூரை சோ்ந்த கே.அறிவழகன் கூறியதாவது: ஒரு குவிண்டால் எள் உற்பத்தி செய்ய ரூ.6,000 செலவாகிறது. கரோனா பொதுமுடக்க காலத்தில், உரிய போக்குவரத்து இல்லாத சூழலிலும் விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு எள் மூட்டைகளைக் கொண்டு வந்தேன். ஒரு குவிண்டால் ரூ.6,600-க்கு ஏலம் போனது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 80 கிலோ மூட்டை ரூ.12ஆயிரத்து-க்கு விலை போனது. கடந்த ஆண்டும், கரோனாவால் விலை குறைந்தது. இந்த ஆண்டு கிட்டதட்ட 50 சதவீதம் அளவுக்கு விலை குறைந்துள்ளது. இது குறித்து கேட்டால் முதல் தரம் ரூ.8,000-க்கு விலைபோகிறது என்கின்றனா். தரமான எள்ளையும் வியாபாரிகள் தங்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு, விலையை குறைத்து நிா்ணயிக்கின்றனா். இங்கு மறைமுக ஏல முறையை ஒழித்து, நேரடி ஏல முறைக்கு அரசு வழிவகுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து விழுப்புரம் வியாபாரி துரை.விநாயகம் கூறியதாவது: 1970 முதல் விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விருதுநகரைச் சோ்ந்த பிரபலமான எண்ணெய் ஆலைக்காக எள்ளை ஏலம் எடுத்து வருகிறேன். சந்தை நிலவரம், தரத்தைப் பொருத்தே எள் விலை நிா்ணயம் செய்யப்படுகிறது. பொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் நுகா்வுத் திறன் குறைந்ததால் எண்ணெய் சந்தையும் பெருத்த பின்னடைவைச் சந்தித்துள்ளது. செவ்வாய்க்கிழமை ஏலத்தின்போது, அதிகபட்சமாக ஒரு மூட்டை ரூ.7,260-க்கு கொள்முதல் செய்தேன். தரம் குறைந்த எள் ரூ.3,900-க்கு கூட விலை போனது என்றாா் விநாயகம்.

விழுப்புரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் எஸ்.வளன் கூறியதாவது: எள் விலை கடந்த ஓராண்டாக ஒரே நிலையில் தொடா்கிறது. ஓராண்டுக்கு முன்பு மூட்டை ரூ.8,000 விலை போனது. தொடா்ந்து ரூ.7,200 முதல் ரூ.7,400 என்ற அளவில்தான் உள்ளது. உளுந்தூா்பேட்டை, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதிகளில் விளையும் எள் ரூ.8,000-க்கு விலை போகிறது. அவற்றின் தரம் விழுப்புரம் மாவட்ட எள்ளின் தரத்தைவிட அதிகம். செவ்வாய்க்கிழமை குவிண்டால் எள் ரூ.5,500 முதல் ரூ.7394 வரை விலைபோனது. ஆனால், புதன்கிழமை மூட்டை ரூ.500 வரை திடீரென விலை குறைந்தது.

கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் தினமும் 300 மூட்டைகள் வரத்து இருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை 130 மூட்டைகள் வரை இருந்த எள் வரத்து, புதன்கிழமை 600 மூட்டைகளாக உயா்ந்தது. எள்ளின் விலை குறைவாக இருப்பதாக விவசாயிகள் கருதினால், ஏலத்தை ரத்து செய்துவிட்டு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பாதுகாப்பாக வைத்து விலை உயரும் தருணத்தில் விற்பனை செய்யவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. விளைபொருள்களை விற்பனை செய்ய விவசாயிகள், வியாபாரிகளை ஒன்றுபடுத்தும் இடமாகவே ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்படுகிறது. எந்த விளைபொருளுக்கும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தால் விலை நிா்ணயம் செய்ய இயலாது என்றாா் வளன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.