/

விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நான்கு வழிச் சாலைப் பணி மந்தம்

விக்கிரவாண்டி - தஞ்சாவூர் இடையே நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி மந்த கதியில் நடைபெறுவதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 8:01 am

ஜீவ. இராம ஸ்ரீநிவாஸன்

விக்கிரவாண்டி - தஞ்சாவூர் இடையே நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி மந்த கதியில் நடைபெறுவதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
விக்கிரவாண்டி -  தஞ்சாவூர் இடையிலான 164 கி.மீ. தொலைவிலான தேசிய நெடுஞ்சாலை சென்னை, நெய்வேலி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்கோவில், கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கியச் சாலையாகும். இந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு, நெரிசல் காரணமாக விக்கிரவாண்டி முதல் ஜெயங்கொண்டம் கூட்டுச் சாலை வரை 4 வழிச் சாலையாகவும், ஜெயங்கொண்டம் கூட்டுச் சாலை முதல் தஞ்சாவூர் வரை இரு வழிச் சாலையாகவும் அமைக்க திட்டமிடப்பட்டது. 
இந்த வழித்தடத்தில் பண்ருட்டி, வடலூர், பின்னலூர், சேத்தியாத்தோப்பு, அணைக்கரை, திருப்பனந்தால், சோழபுரம், பாபநாசம் ஆகிய 7 இடங்களில் பைபாஸ் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தச் சாலைப் பணிக்காக கடந்த 2009-ஆம் ஆண்டு ரூ.1,100 கோடியில்  திட்ட மதிப்பு தயாரிக்கப்பட்டு 2010-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
விக்கிரவாண்டி முதல் பின்னலூர் வரை சுமார் 65 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. விக்கிரவாண்டி, கோலியனூர், பண்ருட்டி, நெய்வேலி ஆர்ச் கேட், வடலூர் வழியாக கடந்துச் செல்கிறது இந்தச் சாலை. 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த சாலைப் பணி 24 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும். 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாலை ஓரத்தில் இருந்த மரங்களை அகற்றி, மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகளையும், சாலையின் ஒரு புறத்தில் மண்ணை கொட்டி மேடாக்கியும் வந்தனர்.
 தற்போது இந்தப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. 
சாலையின் ஒரு பகுதி மட்டும் மேடாக்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள சாலையில் அதிகளவில் கனரக வாகனங்கள், பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் முந்திச் செல்லும்போதும், சாலை ஓரத்தில் புழுதியான மண் மீது வாகனங்கள் செல்லும்போது காற்றில் தூசு பறப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் நிலவுகிறது. 
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சாலை பணி தொடங்கியது. 24 மாதங்களில் பணி முடிக்கப்பட வேண்டும். பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. 50 சதவீதம் கூட பூர்த்தியாகவில்லை. ஒப்பந்த காலம் முடிவு பெற இன்னும் 10 மாதங்களே உள்ளது என்றார் அவர்.  வாகன ஓட்டிகளின் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலைப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.