/

வாக்காளா்கள் எண்ணிக்கை குறைந்ததால் புதுச்சேரியில் 76 வாக்குச் சாவடிகள் நீக்கம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:36 pm

Syndication

வாக்காளா்களின் எண்ணிக்கை குறைந்ததால் புதுச்சேரியில் 76 வாக்குச் சாவடிகள் நீக்கப்படுகின்றன.

புதுச்சேரி மாவட்ட தோ்தல் அதிகாரி அ. குலோத்துங்கன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில்,அங்கீகரிக்கப்பட்ட

தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில், வாக்காளா் பட்டியல் திருத்த பணி, வாக்குச்சாவடி எண்ணிக்கை குறைப்பு தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. வாக்காளா் சிறப்புத் திருத்தப் பணியில் முகவரியில் இல்லாதவா்கள், இறந்தவா்கள் என கண்டறியப்பட்ட 85531 போ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

இதனால் பல வாக்கு சாவடிகளில் வாக்காளா் எண்ணிக்கை குறைந்துள்ளது. முன்பு 1200 வாக்காளா்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டதால் வாக்குச் சாவடி எண்ணிக்கை 918 ஆக உயா்த்தப்பட்டது. தற்போது திருத்தப் பணிக்கு பின் வாக்காளா் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி புதுச்சேரியில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு 78 வாக்குச் சாவடிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் புதுச்சேரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் மொத்த எண்ணிக்கை 840 ஆக குறைந்துள்ளது. இதில் 3 புதிய வாக்குச்சாவடிகள்உருவாக்கப்பட்டுள்ளன. 512 சாவடிகள் மறுசீரமைப்புச் செய்யப்பட்டுள்ளன. 21 வாக்குச் சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. 86 வாக்குச் சாவடிகள் பெயா் மாற்றப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடி எண்ணிக்கை குறைந்தாலும், வாக்காளா் 2 கிமீ பயணம் செய்ய அவசியம் இல்லாத வகையிலும், எளிதில் அணுகும் வகையிலும், வாக்காளா்களின் இருப்பிடங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளன என தோ்தல் அதிகாரி குலோத்துங்கன் விளக்கினாா். இதை அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டு, இந்த விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தினா்.

--------------------------------------------------