தட்டாஞ்சாவடி தொகுதியைத் தக்க வைக்குமா என்.ஆர்.காங்கிரஸ்?
தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் தனது கோட்டையை என்.ஆர்.காங்கிரஸ் மீண்டும் தக்க வைக்குமா? என்ற கேள்விஎழுந்துள்ளது.


தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் தனது கோட்டையை என்.ஆர்.காங்கிஸ் மீண்டும் தக்க வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றதால், தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த அசோக் ஆனந்த் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, மக்களவைத் தேர்தலுடன், இந்த சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வருகிற 18-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமியின் அக்காள் மகன் ப.நெடுஞ்செழியன் போட்டியிடுகிறார். என்.ஆர்.காங்கிரஸுக்கு அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தத் தொகுதியில் கடந்த முறை தனித்துப் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 12,754 வாக்குகளும், அதிமுக 1,649 வாக்குகளும் பெற்றன. பாஜகவுக்கு ஓரளவுக்கு வாக்கு வங்கி இருக்கிறது. பாமக, தேமுதிக உள்ளிட்ட பிற கூட்டணிக் கட்சிகளுக்கு இங்கு சொல்லும்படியான வாக்கு வங்கி இல்லை.
எதிர்க்கட்சித் தலைவரின் சொந்த செல்வாக்கு என்ற அடிப்படையில் இந்தத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் பலம் பெறுகிறது. எனினும், ஏற்கெனவே எம்.எல்.ஏ.வாக இருந்த அந்தக் கட்சியின் அசோக் ஆனந்த் பெரிய அளவில் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது.
திமுக வேட்பாளர்: கடந்த முறை இந்தத் தொகுதியில் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சேதுசெல்வம் 5,296 வாக்குகள் பெற்று, அதிமுக, திமுக வேட்பாளர்களை 4-ஆவது இடத்துக்குத் தள்ளினார். தற்போது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இணைந்துள்ள நிலையில், தாங்கள் ஏற்கெனவே 2-ஆவது இடத்தைப் பெற்றிருந்ததால் தார்மிக அடிப்படையில், இந்தத் தொகுதியில் போட்டியிட திமுக - காங்கிரஸ் கட்சிகளிடம் விருப்பம் தெரிவித்தது.
ஆனால், தாங்கள் ஏற்கெனவே போட்டியிட்ட தொகுதி என்ற அடிப்படையில், இந்தத் தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. இதையடுத்து, தங்களது மனக் கசப்புகளை மறந்து இந்திய கம்யூனிஸ்ட் தொண்டர்கள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
ஆனால், கட்சிக்கு தொடர்பில்லாத வணிகரான க.வெங்கடேசன் நிறுத்தப்பட்டுள்ளதாக திமுக தொண்டர்கள் உற்சாகம் இழந்து காணப்படுகின்றனர்.
நகர்ப்புறப் பகுதியில் இருப்பதாலும், ஆளும் கட்சியின் பலத்துடன் போட்டியிடுவதாலும் எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் திமுக வேட்பாளர் வெங்கடேசன்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் என்ற முழக்கத்தை எழுப்பி வரும் என்.ஆர்.காங்கிரஸ், இந்தத் தொகுதியை எப்படியாவது மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என முழு முயற்சியில் இறங்கியுள்ளது.
எதிர்க்கட்சியிடம் இருந்து இந்தத் தொகுதியைக் கைப்பற்றிவிட்டால், என்.ஆர்.காங்கிரஸின் ஆட்சி மாற்றம் என்ற எண்ணத்தைக் தடுத்துவிடலாம் என்ற முனைப்புடன் ஆளும் கட்சியான காங்கிரஸ், திமுகவின் வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
வாக்காளர்கள் விவரம்:
ஆண்கள்: 14,063
பெண்கள்: 15,697
மொத்தம்: 29,760
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...