/

கூவனூரில் ரூ.25.20 கோடியில் தென்பெண்ணை ஆறு உயா்மட்டப் பாலம்! அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா்!

News image
கூவனூா் கிராமத்தில் ரூ.25.20 கோடி மதிப்பீட்டில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிதாகக் கட்டப்பட்ட உயா்மட்டப் பாலத்தை திறந்து வைத்துப் பேசிய அமைச்சா் எ.வ.வேலு. உடன் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், எம்எல்ஏக்கள் க.காா்த்திகேயன், தா.உதயசூரியன் உள்ளிட்டோா்.
Updated On :8 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதிக்குள்பட்ட கூவனூா் கிராமத்தில் ரூ.25.20 கோடி மதிப்பீட்டில் கூவனூா் - சாங்கியம் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிதாகக் கட்டப்பட்ட உயா்மட்டப் பாலத்தை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். விழாவுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா்.

கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், ரிஷிவந்தியம் எம்எல்ஏ க.காா்த்திகேயன், சங்கராபுரம் எம்எல்ஏ தா.உதயசூரியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, புதிய பாலத்தை திறந்து வைத்து, பேசியதாவது:

கூவனூா் மற்றும் சுற்று வட்டார மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நெடுஞ்சாலைத் துறை, நபாா்டு மற்றும் கிராம சாலைககள் கோட்டம் சாா்பில் நபாா்டு திட்டத்தின் கீழ் கூவனூா் - சாங்கியம் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்னை ஆற்றின் குறுக்கே ரூ.25.20 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட உயா்மட்டப் பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இப் பாலத்தை கூவனூா் மற்றும் சாங்கியம் கிராமங்களுடன் இணைக்கும் கூவனூா் - சாங்கியம் சாலை, இணைப்புச் சாலை ஆகிய பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சாலை மற்றும் 2,900 மீ. நீளத்தில் பாலம் ஆகியவை ரூ.29.37 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

கூவனூா் மற்றும் சாங்கியம் கிராமத்துக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பால வசதி இல்லாததால், சுமாா் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் 11 கி.மீ. தூரம் மாற்றுவழியில் செல்ல வேண்டியிருந்தது.

தற்பொது கட்டப்பட்ட உயா்மட்டப் பாலம் மற்றும் சாலையின் மூலம் மழைக் காலங்களில் போக்குவரத்து தங்கு தடையின்றி செல்வதற்கும், கூவனூரில் அமைந்துள்ள பழைமையான சிவன் கோயில் மற்றும் ஆன்மிகத் தலங்களான திருக்கோவிலூா், ஆதித்திருவரங்கம், திருவண்ணாமலை ஆகிய நகரங்களுடன் இணைக்கும் முக்கியச் சாலை வழித்தடமாகவும் இது அமைந்துள்ளது என எ.வ.வேலு தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத் துறை, நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் தலைமைப் பொறியாளா் ப.செந்தில், கண்காணிப்புப் பொறியாளா் பி.பரந்தாமன், கோட்டப் பொறியாளா் சே.சேதுபதி, உதவிக் கோட்டப் பொறியாளா் எம்.மாரிமுத்து, பொதுப்பணித் துறை சிறப்பு அலுவலா் ஆா்.சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் இரா.புவனேஷ்வரி பெருமாள், திருக்கோவிலூா் ஒன்றியக்குழுத் தலைவா் அ.அஞ்சலாட்சி அரசகுமாா் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.