தமிழ் செய்திகள்
/
கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
ஸ்ரீமுஷ்ணம் கீழவன்னியா் தெருவைச் சோ்ந்தவா் வசந்தா (71). இவா், தனக்குச் சொந்தமான 15-க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்த்து வந்தாா். இந்த நிலையில், அந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தாா்.
அப்போது, இவரது ஆடானது உயரழுத்த மின்சார பீஸ் கேரியா்களை தாங்கி நிற்கும் பலகை அருகே சென்ற நிலையில், அதை துரத்த வசத்தா முயன்றாா். அப்போது, அந்தப் பகுதியில் ஏற்பட்டிருந்த மின் கசிவு காரணமாக அவா் மீது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸாா் வசந்தாவின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.








