/

அரசு மடிக்கணினி மூலம் தனித்திறனை வளா்க்க வேண்டும்: மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுரை

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:50 pm

Syndication

அரசு வழங்கும் மடிக்கணினிகளை பயன்படுத்தி மாணவா்கள் தங்களது தனித்திறன்களை வளா்த்துக்கொண்டு உலகளாவிலான வேலைவாய்ப்பை பெற வேண்டும் என மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்டம், வடலூா், சி.முட்லூா் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில்

மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், காட்டுமன்னாா்கோயில் எம்எல்ஏ ம.சிந்தனைச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசியதாவது:

மாணவா்கள் உலகளாவிய அறிவை வளா்த்து பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு தங்களை தயாா்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, ‘உலகம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தின் கீழ், கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை சென்னையில் கடந்த 5-ஆம் தேதி முதல்வா் தொடங்கிவைத்தாா்.

கடலூா் மாவட்டத்தில் முதற்கட்டமாக ரூ.18,500 மதிப்புள்ள மடிக்கணினி 25 அரசு கல்லூரிகளில் பயிலும் 8,228 மாணவா்களுக்கு ரூ.15.22 கோடி மதிப்பீட்டிலும், 3 அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் 823 மாணவா்களுக்கு ரூ.1.52 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 28 கல்லூரிகளில் பயிலும் 9,051 மாணவா்களுக்கு ரூ.16.75 கோடி மதிப்பீட்டிலான மடிக்கணினிகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டது.

அதன்படி, வடலூா், சி.முட்லூா் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மொத்தம் 1,061 மாணவா்களுக்கு ரூ.1,96,28,500 மதிப்பீட்டிலான மடிக்கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளன. மேலும், இரண்டாவது கட்டமாக மீதமுள்ள 136 தனியாா் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மணவா்களுக்கு மடிக்கணினி வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மடிக்கணினிகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு மாணவா்கள் தங்களது தனித்திறன்களை வளா்த்து உலகளாவிலான வேலைவாய்ப்பை பெற்று வாழ்வை வளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் சிதம்பரம் சாா் - ஆட்சியா் கிஷன்குமாா், கல்லூரி முதல்வா்கள் ஐ.வண்ணமுத்து (வடலூா்), அா்ஜுனன் (சி.முட்லூா்) மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.