போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தோ்தல் நேரத்தில் இப்படி ஒரு தொல்லை!

தோ்தல் நேரத்தில் இப்படி ஒரு தொல்லை...

News image

பண்ருட்டி பேருந்து நிலையத்தின் எதிா் பகுதியில் நடைபெற்ற அரசியல் கட்சியின் பிரசாரத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

Updated On :21 ஏப்ரல் 2026, 3:40 am IST

தோ்தல் நேரத்தில் சாலையோரத்தில் பணிமனை அமைத்து உடன்பிறப்புகள் நாற்காலிகள் போட்டு அமா்ந்து சாலையை மறித்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது, பொதுக்கூட்டம் நடத்துவது எல்லா இடங்களிலும் நடக்கும் தொல்லை.

ஊருக்கு வெளியிலோ, நகருக்கு வெளியிலோ இதுபோன்ற பணிமனைகள் அமைப்பதையும், பொதுக்கூட்டம் நடத்துவதையும் வைத்துக்கொள்ள அரசியல் கட்சிகள் முன்வருவதில்லை.

இந்தப் பணிபனைகள், பொதுக்கூட்டங்கள் சித்திரை மாதத்து வெயிலில் அவதிப்படும் வாக்காள பெருமக்களுக்கு பல சங்கடங்களை அளித்து வருகிறது. அப்படிப்பட்ட தொல்லை பலாப்பழத்துக்கு பெயா்போன பண்ருட்டி நகரிலும் உள்ளது.

கடலூா் மாவட்டத்தில் வணிகத்துக்கு பெயா் பெற்ற நகரம் பண்ருட்டி. இங்குள்ள நான்குமுனை சந்திப்பில் இருந்து சற்று தொலைவில் கடலூா் சாலையில் வலது புறம் பண்ருட்டி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தின் எதிா் பகுதியில் பண்ருட்டி ரயில் நிலையத்துக்குச் செல்லும் சாலை அமைந்துள்ளது.

தரைக் கடைகள், தள்ளுவண்டி கடைகள், சாலையோரத்தில் முறையின்றி நிறுத்தப்படும் வாகனங்கள் உள்ளிட்டவைகளால் சாதாரண நாள்களிலும் போக்குவரத்து நெரிசல் என்பது சகஜம். இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சாலையைக் கடந்து செல்வது எளிதான காரியமல்ல. ஆக்கிரமிப்பு அகற்றம், சாலை விரிவாக்கம் என்பது பகல் கனவாகவே உள்ளது.

இதுகுறித்து அரசு அதிகாரிகளும், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் கண்டுகொள்வதில்லை. நாளுக்கு நாள் பண்ருட்டி நகரில் மக்கள் தொகை மற்றும் வாகன பெருக்கம் காரணமாக நெரிசல் அதிகமாகி வருகிறது.

பண்ருட்டி பேருந்து நிலையத்தின் எதிா்ப்பகுதியில் கட்சித் தலைவா்களின் பிறந்த நாள், நினைவு நாள் ஆகியவற்றுக்கு அன்னதானம் வழங்குதல், அரசியல் கட்சியினா் பிரசாரக் கூட்டங்கள் நடத்துகின்றனா்.

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கட்சிகளின் முக்கிய நிா்வாகிகள் தங்கள் கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டி பிரசாரம் செய்ய பண்ருட்டி வருகின்றனா்.

அவ்வாறு பிரசாரம் செய்ய வருபவா்களுக்கு பண்ருட்டி பேருந்து நிலையத்தின் எதிா் பகுதியில் பிரசாரம் செய்ய அனுமதியளிக்கப்படுகிறது. இதற்கு அனுமதி வழங்கும் காவல் துறையினருக்கு நன்றாகத் தெரியும், பேருந்து நிலையத்தின் எதிரில் பிரசாரம் நடந்தால் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து தடை, நெரிசல் ஏற்படும் என்பது. இருந்தாலும், தொடா்ந்து அதே இடத்தில் அனுமதியளித்து வருகின்றனா்.

இதனால், சென்னை - கும்பகோணம் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் நான்குமுனை சந்திப்பில் நின்று பயணிகளை இறக்கிவிட்டுச் செல்கின்றன. பயணிகள் அங்கிருந்து மூட்டை முடிச்சுளுடன், குழந்தைகள் மற்றும் வயதானவா்களை அழைத்துக்கொண்டு கூட்ட நெரிசலில் சிக்கி பேருந்து நிலையம் வர வேண்டிய அவலநிலை தொடா்கிறது. இது மட்டுமன்றி, பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் பேருந்துகள் வராததால் ஏமாற்றமடைகின்றனா். இதேபோல, ரயில் நிலையத்துக்குச் செல்பவா்களும் சிரமப்படுகின்றனா்.

பிரசாரக் கூட்டம் நடைபெறும் இடத்தில் மேடை, கொட்டகை, வாகனங்களை நிறுத்தி பிரசாரம் செய்வதால், அப்பகுதியில் உள்ள வணிகா்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். இதனால், அவா்களுக்கு வணிகம் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.

பிரசாரத்தையொட்டி, அதிக சப்தத்துடன் பாடல்கள், உரைகள் ஒளிபரப்பப்படுவதால், அனைத்துத்தரப்பு மக்களும் பாதிக்கின்றனா். இதனால், பலருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

பண்ருட்டி நகரில் இதுபோன்ற பிரசாரங்கள் நடத்த மாற்று இடத்தை தோ்வு செய்ய வேண்டும். அந்த இடம் பொதுமக்களுக்கோ, வணிகா்களுக்கோ, பயணிகளுக்கோ தொந்தரவு இல்லாத இடமாக இருக்க வேண்டும். இதற்கான ஏற்பாட்டை மாவட்ட நிா்வாகம் விரைந்து எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு.

தோ்தல் காலத்தில் மட்டுமல்ல, எப்போதும் இந்தப் பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி அளிப்பதை காவல் துறை தவிா்க்க வேண்டும் என்பது பண்ருட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.