பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

குப்பை மேடானது குடிநீர் ஆதாரம்!

குடியாத்தம், செப். 25: குடியாத்தம் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய ராபின்சன் குளம் இன்று குப்பை மேடாக காட்சியளிக்கிறது.  நகரின் மத்தியில் தரணம்பேட்டை பஜாரில் தினசரி மார்க்கெட் அருகில் சுமார் 7.59 ஏக்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:39 pm

கே. நடராஜன்

குடியாத்தம், செப். 25: குடியாத்தம் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய ராபின்சன் குளம் இன்று குப்பை மேடாக காட்சியளிக்கிறது.

 நகரின் மத்தியில் தரணம்பேட்டை பஜாரில் தினசரி மார்க்கெட் அருகில் சுமார் 7.59 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்குளம் நிரம்பினால், நகரில் வீடுகளில் உள்ள கிணறுகள், போர்வெல்களின் நீர்மட்டம் உயர்ந்து, மக்களின் குடிநீர்த் தேவை தீர்க்கப்பட்டு வந்ததாம்.

பராமரிப்பு இல்லாததால் ஆக்கிரமிப்பு!

 ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் மாவட்ட அதிகாரியாக இருந்த ராபின்சன் என்பவர் இதை கட்டியதால் அவர் பெயரிலேயே ராபின்சன் குளம் என்று பெயரிடப்பட்டதாம்.

 பாக்கம் ஏரியிலிருந்து இக்குளத்துக்கு சுரங்க கால்வாய் மூலம் தண்ணீர் வந்துள்ளது. ஏரிக்கு சரிவர நீர்வரத்து இல்லாததாலும், பசுமாத்தூர் அருகில் பாலாற்றிலும், போடிப்பேட்டை அருகில் கௌன்டன்யா ஆற்றிலும் நகராட்சி சார்பில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டதாலும் இந்த குளத்தின் பராமரிப்பு நடவடிக்கைகள் நாளுக்குநாள் குறையத் தொடங்கின.

 அதைத் தொடர்ந்து இக்குளத்தைச் சுற்றி உள்ள இடம் ஆக்கிரமிக்கப்பட்டன. நகராட்சி சார்பிலும் குளத்தைச் சுற்றி வணிக வளாகங்கள் அமைக்கப்பட்டன.

காணாமல் போன பூங்கா!

 இக்குளத்தையொட்டி சுமார் 1 ஏக்கர் பரப்பில் இருந்த திரு.வி.க. பூங்காவும் காலப்போக்கில் இருந்த இடம் தெரியாமல் போனது.

 காலியாக இருந்த குளம் சிறிது, சிறிதாக குப்பை கொட்டும் பகுதியாக மாறியது. நகராட்சியால் அள்ளப்படும் குப்பைகளும் இங்கு கொட்டப்பட்டதால், புதர்மண்டி குப்பை மேடாக காட்சியளிக்கிறது.

மஞ்சள் நிறத்தில் கசாய நீர்

 மழை பெய்யும் காலங்களில் குளத்தில் மழை நீர்த் தேங்கினால், மழைநீர் குப்பையில் ஊறி குளத்தைச் சுற்றியுள்ள வீடுகளில் உள்ள கிணறுகள், போர்வெல்களில் மஞ்சள் நிறத்தில் கசாயம் போல் தண்ணீர் மாறி விடுவதாக புகார்கள் உள்ளன.

 இந்நிலையில், வறட்சி காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் பசுமாத்தூர், போடிப்பேட்டை நீரேற்று நிலையங்களிலும் நீர்வரத்து குறைந்து விட்டது. இதனால் நகராட்சி நிர்வாகத்தால் போதிய குடிநீரை விநியோகிக்க முடியவில்லை.

தூரெடுக்க அரசு வழங்கிய பணமும்

திரும்பச் சென்றது!

 இதைத் தொடர்ந்து ராபின்சன் குளத்தை தூரெடுத்து அதில் தண்ணீரை தேக்கினால், தண்ணீர்ப் பிரச்னை தீரும் என சிலர் ஆலோசனை வழங்கினர். இதுதொடர்பாக நகராட்சியின் நடவடிக்கையால், இதனை சீரமைக்க தமிழக அரசு |65 லட்சம் ஒதுக்கியது.

 கடந்த முறை இருந்த நகராட்சி நிர்வாகம் அந்த நிதியை பயன்படுத்தாததால்  சுமார் 2 ஆண்டுகளாக வங்கிக் கணக்கில் முடக்கி வைக்கப்பட்டிருந்த இருந்தரூ.65 லட்சத்தை அரசு திரும்ப பெற்றுக் கொண்டது.

 மேட்டூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேறினால்தான் நகரின் குடிநீர்ப் பிரச்னை தீரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்திட்டம் நிறைவேற சில ஆண்டுகள் ஆகும் நிலையில், இக்குளத்தை சீரமைத்தால் தண்ணீர்ப் பிரச்னை ஓரளவு தீரும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

 இதுகுறித்து குடியாத்தம் வணிகர் சங்கங்களின் செயலர் டி. ராஜேந்திரன் கூறியது:

பாக்கம் ஏரியிலிருந்து சுண்ணாம்பு கொண்டு கருங்கல் பாறைகளால் கட்டப்பட்ட சுமார் 4 அடி அகலமுள்ள கால்வாய் மூலம் குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

 அந்த கால்வாய் தற்போதும் பூமிக்கடியில் சுமார் 10 அடி ஆழத்தில் பழுதாகாமல்  உள்ளது. மோர்தானா அணையிலிருந்து பாக்கம் ஏரிக்கு தண்ணீர் கொண்டுவந்து, ஏரியை நிரப்பினால் அதிலிருந்து கால்வாய் மூலம் ராபின்சன் குளத்திற்கும் தண்ணீர் கொண்டு வரலாம் என்றார்.

இக்குளத்தில் உள்ள குப்பைகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்றி தண்ணீர் தேக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுத்தால், நகரின் குடிநீர்ப் பிரச்னை ஒரளவு தீரும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.