அமைச்சர்களின் பார்வைக்கு ஏங்கும் தருமபுரி!
தருமபுரி, நவ.20: அமைச்சர்களின் கடைக்கண் பார்வைக்காக ஏக்கத்துடன் காத்திருக்கிறது தருமபுரி மாவட்டம். இம் மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், மொரப்பூர் என 5 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ள


தருமபுரி, நவ.20: அமைச்சர்களின் கடைக்கண் பார்வைக்காக ஏக்கத்துடன் காத்திருக்கிறது தருமபுரி மாவட்டம்.
இம் மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், மொரப்பூர் என 5 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் பென்னாகரம், மொரப்பூர் திமுக வசமும், பாலக்கோடு அதிமுக, தருமபுரி பாமக, அரூர் மார்க்சிஸ்ட் வசமும் உள்ளது.
தற்போதைய மொரப்பூர் எம்எல்ஏ வ.முல்லைவேந்தன் கடந்த திமுக ஆட்சியிலும், பாலக்கோடு எம்எல்ஏ கே.பி.அன்பழகன் அதிமுக ஆட்சியிலும் அமைச்சர்களாக இருந்தவர்கள்.
ஒரு சில மாவட்டங்களில் 2 அல்லது 3 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், பின்தங்கிய தருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
இதனால், பல முக்கிய பிரச்னைகளை அமைச்சரவையிலோ அல்லது அரசுத் துறை உயர்அதிகாரிகளிடமோ கூறி எளிதில் தீர்வு காண முடியாத நிலை உள்ளது.
இம்மாவட்டத்தின் முக்கிய விழாக்களில், மூத்த அமைச்சரான வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் பங்கேற்று வந்தார். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக தருமபுரி மாவட்டத்துக்கு வருவதை அவரும் தவிர்த்து வருகிறார்.
இங்குள்ள திமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் முல்லைவேந்தன், பி.என்.பி. இன்பசேகரன் (பென்னாகரம் எம்.எல்.ஏ.) ஆகியோர் தங்களது அணியை பலப்படுத்துவதில்தான் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அமைச்சர்கள் வருகை தரும் மாவட்டங்களின் பட்டியலிலும் தருமபுரி பின்தங்கியுள்ளது. 4 மாதங்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டத்துக்கு வருகை தந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப்பணிகளை பார்வையிட்டார்.
அதன் பின்னர் ஒரு மாதத்துக்கு முன்பு வனத்துறை அமைச்சர் செல்வராஜ் துறை ரீதியான ஆய்வுக்காக வந்திருந்தார். மற்றபடி, கடந்த ஓராண்டாக நடைபெற்ற அரசு விழாக்கள், ஆய்வுக்கூட்டங்களில் அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
அமைச்சர்களின் பார்வை படாத மாவட்டமாக இருப்பதால் இங்கு நிலவும் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு எளிதில் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கிய திட்டமான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளை 15 நாள்களுக்கு ஒருமுறை துணை முதல்வரும், வாரம் ஒருமுறை அமைச்சரும் நேரடியாக ஆய்வு செய்தால், பணிகள் துரிதமாக நடைபெறும் என்ற கருத்து நிலவுகிறது.
பிற பிரச்னைகளுக்கும் தீர்வு அவசியம்: தருமபுரி நகராட்சியில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் ஓராண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால், பணிகள் மந்த நிலையில் உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக அப்படியே கிடப்பதால் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.
தருமபுரி நகரின் மையப் பகுதியில் இருக்கும் பஸ் நிலையத்தை புறநகர் பகுதிக்கு மாற்றினால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.
பென்னாகரத்தில் உள்ள அரசுத் தலைமை மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை. பாலக்கோட்டில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் போன்ற முக்கிய அரசு அலுவலகங்கள் இல்லை.
இது போன்ற முக்கியப் பிரச்னைகளை அவ்வப்போது சட்டப் பேரவையிலோ அல்லது மூத்த அமைச்சர்களுடனோ கலந்து பேசி நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் முயற்சி எடுப்பதில்லை என்பது தருமபுரி மாவட்ட மக்களின் குற்றச்ச்சாட்டு.
அமைச்சரின் வருகைக்காக காத்திருக்கும் கட்டடங்கள்
மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் பின்புறம் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம், பாலக்கோட்டில் உள்ள தக்காளி வணிக வளாகம் ஆகியவற்றின் பணிகள் முடிந்தும் அமைச்சர்களின் வருகைக்காக திறக்கப்படாமல் உள்ளன.
அமைச்சர் பதவி கொடுக்கப் படாவிட்டாலும், இம் மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய வளர்ச்சிப் பணிகள் துரிதமாக நடைபெற அமைச்சர்களை முதல்வர் கருணாநிதி அனுப்பிவைக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...