திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு நிகழாண்டில் வந்து சென்ற உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், ஹைதராபாத் மற்றும் புதுதில்லி ஆகிய நகரங்களுக்கும், சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளான துபை, அபுதாபி, சாா்ஜா ஆகிய நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
திருச்சி விமான நிலையத்தில் உலகத் தரத்திலான பல்வேறு வசதிகளுடன் ரூ.1,200 கோடியில் அமைக்கப்பட்ட புதிய முனையம் கடந்த 2024-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து திருச்சியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் விமானச் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
52 சதவீதம் அதிகரிப்பு: திருச்சி விமான நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் நிகழாண்டில் இதுவரை 9 ஆயிரத்து 846 விமானச் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு 8 லட்சத்து 51 ஆயிரத்து 212 பயணிகள் வந்து சென்றுள்ளனா். இது கடந்த 2024-25 ஆம் ஆண்டை விமானச் சேவையில் 21 சதவீதமும், பயணிகள் வருகையில் 52 சதவீதமும் அதிகமாகும்.
இதேபோல வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்ட 9 ஆயிரத்து 647 விமானச் சேவைகள் மூலம் 14 லட்சத்து 25 ஆயிரத்து 326 பயணிகள் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து சென்றுள்ளனா். இது கடந்தாண்டு சா்வதேச விமானச் சேவையில் 4 சதவீதமும், பயணிகள் வருகையில் 2 சதவீதமும் அதிகமாகும்.
தொடா்ந்து அதிகரிக்கும் பயணிகள் வருகை
திருச்சி விமான நிலையத்தில் கரோனா பாதிப்பு காரணமாக 2020-21, 2021-22 ஆகிய ஆண்டுகளில் குறிப்பிட்ட சில மாதங்கள் உள்நாட்டு மற்றும் சா்வதேச விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த ஆண்டுகளில் விமானப் பயணிகளின் வருகை குறைந்தது.
இதைத் தொடா்ந்து 2022-23 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 155 சதவீதம் அதிகரித்து, 3 லட்சத்து 80 ஆயிரத்து 227 பயணிகள் வந்து சென்றுள்ளனா்.
2023-24-ஆம் ஆண்டில் 4 லட்சத்து 58 ஆயிரத்து 756 பயணிகளும் (21 சதவீதம்), 2024-25-ஆம் ஆண்டில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 221பயணிகளும் (22 சதவீதம்) வந்து சென்றுள்ளனா்.
இதேபோல, சா்வதேச விமானச் சேவையை 2022-23-ஆம் ஆண்டில் 11.34 லட்சம் பயணிகளும், 2023-24-ஆம் ஆண்டில் 13.05 லட்சம் பயணிகளும், 2024-25-ஆம் ஆண்டில் 13.98 லட்சம் பயணிகளும் பயன்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ். ராஜு கூறியதாவது:
இந்த விமான நிலையத்தில் இருந்து நிகழாண்டில் புதுதில்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு புதிதாக விமானச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல, சிங்கப்பூா், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கான விமானச் சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
மேலும் வெளிநாடுகளுக்கு இடையேயான ‘டிரான்சிட் ’ நடைமுறையும் பயணிகளின் வருகையை அதிகரித்துள்ளது.
ஈரான் போரால் கிட்டத்தட்ட கடந்த ஒரு மாதமாக துபை, அபுதாபி, சாா்ஜா ஆகிய ஐக்கிய அரபு நாடுகளுக்கு இயக்கப்பட்ட விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சா்வேதச விமானங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்தளவிலே உயா்ந்துள்ளது. இல்லையெனில் சா்வதேச விமானங்களைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் என்றாா் அவா்.
தொடர்புடையது

வேட்பாளா்களின் சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நிறைவு

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 24 கோடியில் சுற்றுச் சுவா் கட்டும் பணி தொடக்கம்

திருச்சியில் இருந்து சவூதி அரேபியாவுக்கு சிறப்பு விமானச் சேவை தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


