திருச்சியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவின் செயல்பாட்டை மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் காவல் துறையில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பிரிவினா் மாநகரின் முக்கியமான இடங்களில் 24 மணி நேரமும் வாகனங்களில் ரோந்து சென்று பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் வடக்கு மற்றும் தெற்குக்கு அமைக்கப்பட்டுள்ள இரண்டு சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாட்டை மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
மாநகரக் காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையின் ரோந்து வாகனத்தை காவல் ஆணையா் தொடங்கிவைத்தாா். மேலும், சிங்கப் பெண் அதிரடிப்படையில் பணியாற்றவுள்ள காவல் ஆய்வாளா்கள், காவலா்களுக்கு காவல் ஆணையா் ந. காமினி உரிய அறிவுரை வழங்கினாா்.
மாவட்டக் காவல் துறையில்..திருச்சி மாநகர காவல் துறையைபோல மாவட்ட காவல் துறையிலும் இரண்டு சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு பிரிவிலும் தலா 2 காவல் உதவி ஆய்வாளா்கள், 4 காவலா்கள் மற்றும் ஓா் ஓட்டுநா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் துறையின் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவிண் உமேஷ் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். இந்தப் படையினா் தினசரி ஒரு உள்கோட்டத்தில் ரோந்து மேற்கொள்வா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










